உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி. 'என் மகன் இந்த மாதம், தி.மு.க.,வில் இணைய இருக்கிறார். மயிலாப்பூரில் சீட் கொடுத்தால் போட்டியிடுவார்...' என்கிறாரே, நடிகர் எஸ்.வி.சேகர்? அ.தி.மு.க.,வில் இவர் இருந்தபோது, மயிலாப்பூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். அத்தொகுதி ஏதாவது முன்னேற்றம் கண்டதா... இல்லை! பின், காங்கிரசில் இருந்து விட்டு, பா.ஜ.,வுக்கு தாவினார். இவரது, 'பெர்பாமன்ஸ்'சால் பலனே இல்லாமல் போனதால், யாரும் சீண்டவே இல்லை. அதனால் இப்போது, தி.மு.க.,வில் இணைந்து, 'துண்டு' போட்டுள்ளார். வழக்கம் போல், ஒன்றும் தேறாது! வி.சுவாமிநாதன், சென்னை. வரும் தீபாவளி பண்டிகையன்று மக்கள் அனைவரும், இனிப்பு உட்பட, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துமாறு, பிரதமர் மோடி, அன்புக் கட்டளை இட்டுள்ளாரே? சரி தானே! நம் நாட்டு பொருளாதாரம் மேம்படும்; வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்வும் சிறக்கும். 'என்ன வளம் இல்லை, இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற, எம்.ஜி.ஆர்., படப்பாடல் நினைவுக்கு வருகிறது. ஜே.கமலம், நெல்லை. பொதுக் கூட்டங்கள் நடத்த விரும்பும் கட்சிகளிடம், 'செக்யூரிட்டி டெபாசிட்' வசூலிக்க, உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளதே? நல்ல அறிவுரை. பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அந்தப் பணத்தில் சீர் செய்ய முடியும். இது ஒரு பக்கம் இருக்க, மனித உயிர்ச் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அந்தந்த கட்சிகள், பொறுப்புடன் கூட்டம் நடத்த வேண்டும்.பா. பொன்ரோஸ், சென்னை: 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அணைகளை கட்டிய பெருமை, நம் தமிழர்களுக்கு உண்டு...' என, தமிழக துணை முதல்வர் உதயநிதி, பெருமிதம் கொள்வது பற்றி? பழம்பெருமை பேசிக் கொண்டிருந்தால், பிரச்னைகள் தீர்ந்து விடுமா? தி.மு.க., ஆட்சியில், எத்தனை புது அணைகள் கட்டப்பட்டுள்ளன என்று, கணக்கு கூறுவாரா உதயநிதி?* எஸ்.கே.ராமசாமி, ஈரோடு: தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத் துறைக்கு அடுத்து, மின் துறை தான், லஞ்சம் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் உள்ளதாமே? அதனால் தான், அத்துறையின் பதவிகளில் தனக்கு தோதான ஆட்களை நியமிக்க அமைச்சர்களும், அதிகாரிகளும் போட்டா போட்டி போடுகின்றனர்! டி.எல்.குமார், விழுப்புரம்: 'வர்த்தக தடைகளை நீக்க, பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த காத்திருக்கிறேன்...' என்கிறாரே, அமெரிக்க அதிபர் டிரம்ப்? அமெரிக்க அதிபர் டிரம்ப், தினமும் ஒரு, 'அந்தர் பல்டி, ஆகாச பல்டி' அடிக்கிறார். அதனால் அவரை, பிரதமர் மோடி, சட்டை செய்வதே இல்லை! * மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம். அண்ணா பல்கலை, பி.இ., படிப்பில், ஆங்கிலத்துடன் ஜெர்மன், ஜப்பான், கொரிய மொழிகளையும் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே? நல்ல திட்டம்! அதனுடன், நம் தேசிய மொழியான ஹிந்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான், தமிழகத்தை தாண்டி, நம் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் சென்று, பணியாற்ற முடியும்!அ.செந்தில்குமார், சூலுார். இந்திய தயாரிப்பு கார்களை விட, வெளிநாட்டு தயாரிப்பு கார்களை நீங்கள் விரும்பக் காரணம் என்ன? வெளிநாட்டு கார்கள் வாங்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. பொறுப்பாசிரியர் தான் வாங்கிக் கொடுக்கிறார். இப்போது, ஐந்து வெளிநாட்டு கார்களை வைத்திருக்கிறேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !