அந்துமணி பதில்கள்!
மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி: 'தமிழகத்தில் தள்ளுவண்டியில் இட்லி, தோசை விற்போர் இனி, 'லைசென்ஸ்' பெறுவது கட்டாயம்...' என, உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது சரியா? தள்ளுவண்டி இட்லி, தோசை என்றால் எனக்கு கொள்ளை பிரியம்! தமிழகம் முழுவதும், பல ஊர்களில் தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டிருக்கிறேன்! இவர்கள், 'லைசென்ஸ்' எடுக்கும் வழிமுறைகளை, தமிழக அரசு எளிமைப்படுத்திக் கொடுக்க வேண்டும்! சிவா, நெல்லை: 'பாகிஸ்தானில் மூன்று கோடி குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதில்லை...' என, ஆய்வு ஒன்று கூறுகிறதே... பாகிஸ்தான், கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைந்து வருகிறது. அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு இனி, வழியே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது. தீவிரவாதத்தில் மூழ்கி விட்டதால், மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை, அந்நாடு!ஆர்.சேஷாத்ரி, சென்னை: ஸ்டாலினால், தேசிய தலைவர் ஆக முடியுமா? அவருக்கு ஆங்கிலமும் வராது; ஹிந்தியும் தெரியாது. படித்து, தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. அப்புறம் எப்படி தேசிய தலைவர் ஆக முடியும்?ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்: சாதாரண ஊழலுக்கும், விஞ்ஞான ஊழலுக்கும் என்ன வித்தியாசம் தலைவா? ஊழல் செய்து மாட்டிக் கொள்வது, சாதாரண ஊழல்; மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது, விஞ்ஞான ஊழல்!* ரா.ராஜ்மோகன், திண்டிவனம்: 'பதவி என்பது அதிகாரம் அல்ல; சமூகத்துக்கு, தேசத்துக்கு, சேவை செய்வதற்கான வாய்ப்பு...' என்றிருக்கிறாரே, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்? மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். அதிகாரிகளுக்கு மட்டுமல்ல; அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுத்திருக்கிறார்! * கே.எஸ்.ரவிச்சந்திரன், மணமேல்குடி, புதுக்கோட்டை: சினிமா பட வசனம் போல், கார், பைக், வீடு என, 'அள்ளி விடும்' விஜய், முதல்வரானால் செய்வாரா அந்துமணியாரே? தமிழக அரசின் கஜானா, முற்றிலும் காலி என்பது விஜய்க்கு தெரியும். எனவே, சினிமாவில் நடித்ததன் வாயிலாக தான் சம்பாதித்துள்ள வரி கட்டாமல் வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தில், பொதுமக்களுக்கு, கார், பைக், வீடெல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவார் போலிருக்கிறது.வி.கலைமுருகன், பெங்களூரு: தி.மு.க., ஆட்சியில், மீனவர்களுக்கான திட்டங்களின் பட்டியல், தமிழக கடற்கரையை போன்று நீளமானது என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கொள்கிறாரே... பட்டியல் வேண்டுமானால், தமிழக கடற்கரையை போல், நீண்டதாக இருக்கலாம்; ஆனால், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் யாவும் கடல்நீரில் எழுதியதாகத் தான் இருக்கின்றன!