அந்துமணி பதில்கள்!
எஸ்.கே.ஸ்ரீதீப்ஷிகா, மதுரை: அரசு கட்டித் தரும் வீடுகளும், குடியிருப்புகளும், 7 - 10 ஆண்டுகளில் சேதமடைந்து விடுகிறதே... கட்டுமானக் குறையா அல்லது பராமரிப்பு குறைவாலா... இதற்கென ஒதுக்கப்படும் நிதியை, ஆட்சியாளர்களும், ஒப்பந்ததாரர்களும், 'கட்டு கட்டி' விடுவதால், அரசு கட்டுமானங்கள் அனைத்துமே, தரம் குறைந்த பொருட்களை வைத்து கட்டப்படுகின்றன. புரிந்ததா சூட்சுமம், தீப்ஷிகா? * ரா.புவனேஸ்வரி, பெங்களூரு: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சுக்கு, எம்.ஜி.ஆர்., தொப்பியையும், கண்ணாடியையும் அணிவித்து தொண்டர்கள் அழகு பார்த்துள்ளனரே... ஊர்க்குருவி சிலநேரம் தன்னை, பருந்து என்று நினைப்பது உண்டு. எம்.ஜி.ஆர்., போல் யார் வேடமணிந்தாலும், 'ஸ்மார்ட்' ஆகவும், அறிவாளியாகவும், மனித நலன் கருதுபவராகவும், வேறு யாராலும் ஆக முடியாது! வி.சுவாமிநாதன், சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், தன் 3,400 கோடி ரூபாய் சொத்துக்களை, ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும், தன், 'ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷனுக்கு' நன்கொடையாக வழங்கிய மனது குறித்து... சீன நாட்டைச் சேர்ந்த நடிகர் ஜாக்கிசானுக்கு, மிகப்பெரிய மனசு! நம்மூர் நடிகர்களும், பிரபலங்களும், அவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்! எஸ்.செல்ல பாண்டியன், பெங்களூரு: மொழி தெரியாத வட மாநிலத்தவர், குறைந்த கூலிக்கு இங்கு வேலை செய்வதைப் பார்த்தவுடன், நம் மாநிலத்து இளைஞர்களும், இப்போது குறைந்த கூலியில் வேலை செய்வதற்கு ஆர்வமுடன் வருகின்றனரே... சபாஷ்... சரியான போட்டி! நம் மாநில இளைஞர்கள், இனிமேலாவது விழித்துக் கொண்டு, கிடைக்கும் பணியைச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இலவசங்களை நம்பி, தங்களது எதிர்காலத்தை வீணடிக்கக் கூடாது!* தேன்ராஜா, நெய்வேலி: 'என் துறைக்குள், எங்கு நுழைந்து பார்த்தாலும், 'சாதனை சாதனை சாதனை' என்று தான் எதிரொலிக்கும்...' என, அமைச்சர் கே.என்.நேரு கூறுகிறாரே... வெறும் சாதனையல்ல... 'ஊழல் சாதனை, ஊழல் சாதனை, ஊழல் சாதனை' என, அத்தனை ஊடகங்களும் கூறுகின்றனவே!ஏ.அப்துல் மாலிக், திண்டுக்கல்: என்னுடைய படைப்புகளை, தொடர்ந்து புறக்கணித்து வருகிறீர்கள்... எனக்கு, 'தினமலர்' மேல் சலிப்பு ஏற்படுகிறதே ...சலிப்பே வேண்டாம், அப்துல் மாலிக்! உங்களைப் போன்ற லட்சக்கணக்கான வாசகர்களின் கடிதங்கள் மற்றும் கேள்விகளை படிக்கிறேன். உங்களுடையதையும் படித்து, இதோ பதில் எழுதி விட்டேன். தொடர்ந்து எழுதுங்கள்!தேனா லட்சுமி, மதுரை: ஒருவேளை, திருப்பரங்குன்றம் தீபத் துாணில், முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், தீபம் ஏற்ற வந்திருந்தால்... துர்கா ஸ்டாலினின் பின்னால், பல அமைச்சர்கள் அணி வகுத்திருப்பர்; 'தீபம் மீட்ட திராவிட எழுச்சி நாயகி' என்று அவருக்கு பட்டமும் வழங்கப்பட்டிருக்கும்! 'தீபம் ஏற்றுவது எங்கள் வீட்டு பெண்களின் தனிப்பட்ட விருப்பம்; எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...' என்று, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பார்!என்.திவ்யப்ரியா, சிதம்பரம்: 'தினமலர்' நாளிதழை என் தாத்தா, என் அப்பா படித்தனர்; நானும் தொடர்ந்து படிக்கிறேன். இந்த ஆர்வத்தை என்னவென்பது! உங்களைப் போன்ற, லட்சக்கணக்கான வாசக, வாசகியரின் வாழையடி வாழையாக தொடரும், 'தினமலர்' விசுவாசம் தான், எங்களை திறம்பட செயல்பட வைக்கிறது; தொடரட்டும் உங்கள் பேராதரவு!