அந்துமணி பதில்கள்!
ச.ஷகீலா பானு, துாத்துக்குடி: 'இந்தியா-நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், எந்த மூன்றாம் நபர் தலையீட்டுக்கும் இடமில்லை...' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதே... மிகச் சரியான முடிவு! அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அமைதிக்கான நோபல் பரிசு எனக்கே...' என, அடித்துப் பிடித்து வாங்கும் பழக்கம் கொண்டவராச்சே! மேலும், நம் நாட்டை நினைத்தாலே அவருக்கு காதிலிருந்தும், வாயிலிருந்தும் புகை வருகிறது. எனவே, 'மத்தியஸ்தம் செய்கிறேன்...' என, மூக்கை நுழைப்பார். இது புரிந்து தான், மத்திய அரசு, கத்தியை முன்கூட்டியே தீட்டி வைத்தது. ஜெ.ஜாஸ்லின் ஜோசப், கன்னியாகுமரி: 'டாஸ்மாக்' மூலம், 51 கோடி ரூபாய் கமிஷனாக அரசியல்வாதிகளுக்கு சென்று கொண்டிருந்த பணம், 'தினமலர்' செய்தியால், வரியாக, அரசுக்கு கிடைக்கும் வகையில் உத்தரவு போட்டிருக்கிறாரே முதல்வர் விஜய்... 'தினமலர்' வாயிலாக, பல நல்ல திட்டங்களை, தமிழக முதல்வர் விஜய்க்கு எடுத்துரைக்கிறோம்; அவரும் ஆர்வமுடன் செயல்படுத்துகிறார். இப்படி கவனமாக செயல்பட்டால், விமர்சனங்களைத் தாண்டி, சாதிக்க முடியும்!மூ.வள்ளி, வீரபாண்டி: மே.வங்கத்தில், அசைக்க முடியாத சக்தியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இப்போது இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டதே... சட்டவிரோதமாக, வங்கதேச மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது முதல், சமூக விரோதிகளுக்கும், மம்தா ஆதரவாக செயல்படுகிறார் என்ற விஷயம், அவர் கட்சி ஆரம்பித்தது முதல், சமீபத்திய தேர்தலுக்கு முந்தைய காலம் வரை, பொதுமக்களுக்கு தெரியாமலேயே இருந்தது. வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பட்டியல் தயாரானவுடன், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற, மம்தாவைப் பார்த்தவுடன், மக்கள் விழித்துக் கொண்டு, அவரை ஓரங்கட்டி விட்டனர்! * ஒய்.ரவி, கோவை: முந்தைய ஆட்சியாளர்கள், மாணவர்களுக்கு கொடுத்த இலவச ஸ்கூல் பைகளில், தங்கள் தலைவர்களின் புகைப்படங்களை, 'பிரின்ட்' செய்து, தங்கள் கட்சியையும், தலைவரையும் விளம்பரப்படுத்தி இருந்தனர். முதல்வர் விஜயின், த.வெ.க., அரசு, அவற்றையெல்லாம் விடுத்து, திருக்குறளை, 'பிரின்ட்' செய்திருக்கிறதே... 'சட்'டென்று மாற்றம் வந்துள்ளது பாருங்கள். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்! ரா.தீனதயாளன், விழுப்புரம்: அந்துமணியின் விசால பார்வையில், அண்ணாமலையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, அண்ணாமலை ஒரு, 'ரோல் மாடல்!' மிகச் சரியான நேர்மையான அரசியலை அவர் மேற்கொண்டால், எதிர்காலத்தில், விஜய்க்கும், அண்ணாமலைக்கும் தான் போட்டி இருக்கும்; திராவிடக் கட்சிகளின் முகவரியைத் தேட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்! * எஸ்.ராகுல், ஈரோடு: வரலாற்றில் முதன்முறையாக, மின்சார வாரியத்தில், 26 ஆண்டுகளுக்கு முன், உதவி இன்ஜினியர்களாக பதவியில் சேர்ந்த, 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதே... முறையாக நடக்க வேண்டிய விஷயம், இவ்வளவு ஆண்டுகள் தாமதம் ஆனதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. எல்லா துறைகளிலும் உள்ள, சீர்கேடுகளைக் களைய வேண்டிய மாபெரும் பொறுப்பு, முதல்வர் விஜய்க்கு இருப்பது, இதன் மூலம் தெளிவாகிறது!