உள்ளூர் செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்! (26)

மக்களுக்காக ஓர் இயக்கம் ஆரம்பிக்கப் போவதை தான், தன் அரசியல் ஆசானாக விளங்கும், கருணாநிதியிடம் தெரிவித்து, அவரது வாழ்த்துகளை பெற்று திரும்பினார், விஜயகாந்த். தமிழர்களின் கலைக்கும், அரசியலுக்கும் மதுரை மிக முக்கியமான வரலாற்று அடையாளம். தன் பிள்ளையார் சுழியை, மதுரையில் ஆரம்பித்தார், விஜயகாந்த். தன் ஆஸ்தான ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நேரத்தில், இயக்கத்தின் முதல் மாநாட்டை செப்., 14, 2005ல், வெகுவிமரிசையாக நடத்தினார், விஜயகாந்த். மதுரை குலுங்க, குலுங்க, ஆண்டுதோறும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை காட்டிலும், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் அசத்தலாக அரங்கேறியது. திருப்பரங்குன்றத்தில், திருநகர் பகுதி அன்று கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஏறக்குறைய, 75 ஏக்கரில், மூன்று லட்சம் பேர், விஜயகாந்தின் எழுச்சி உரையை கேட்க ஆர்வத்தோடு காத்திருந்தனர். வெண் புறாக்களை பறக்க விட்டு, தன் கட்சியின் பெயரை, மூன்று முறை, தன் கம்பீர குரலில் உச்சரித்து, உற்சாகமாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆனார், விஜயகாந்த். மாலை மயங்கி இரவு துவங்கியது. நிலவின் வெளிச்சத்தில் நடந்த கூட்டத்தில், 'மைக்'கைப் பிடித்த விஜயகாந்த், இரண்டு மணி நேரம், தே.மு.தி.க.,வின் கொள்கைகளை பட்டியலிட்டார். ரோஹிணி லாட்ஜ் வாசல், கேப்டனின் அரசியலுக்கான ஆரம்பகால, அகல் விளக்கு. அங்கிருந்து திட்டமிட்டு தொடங்கிய நலத்திட்டங்களில் குறிப்பிடத்தக்கது, அன்னதானம். கேப்டனின் ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் என, அனைத்தும், விஜயகாந்தின் திரை மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு பாலமாக, படிக்கட்டுகளாக நின்றன. பொதுவாழ்வில், விஜயகாந்த் எப்படி எப்படி தன், 'இமேஜை' வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாமே, அவர் நண்பர், ராவுத்தரின் மனக்கணக்கு தான். ராவுத்தரின் கட்டளைப்படியே, விஜயகாந்துக்கு கட்டாயமாக கதர் ஆடைகள் அணிவிக்கப்பட்டன. எது எப்படியோ, விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பெருவாரியான மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டனர். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, சென்னைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. ஏழே நாட்களில், தென்னிந்திய நடிகர் சங்கம், நவம்பர் 20, 1983ல், எம்.ஜி.ஆருக்கு மிகப் பிரமாண்டமாக பாராட்டு விழா எடுத்தது. சென்னையிலுள்ள தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில், காமராஜர் அரங்கில் ஒன்று திரண்டது, திரையுலகம். மிகப்பெரிய நட்சத்திர ஊர்வலம் புறப்பட்டது. அதில், விஜயகாந்தும் பங்கேற்றார். காயிதே மில்லத் கல்லுாரி அருகே, பேரணியை பார்வையிட்டார், எம்.ஜி.ஆர்., தன் அபிமானத்துக்குரிய புரட்சி நடிகரை, பிரபல, 'ஹீரோ'வாக உயர்ந்த பின், அருகிலிருந்து தரிசிக்கும் வாய்ப்பு, விஜயகாந்துக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஒரு பக்கம், பாரதிராஜா, கே.பாக்யராஜும், மறுபுறம், கமல், ரஜினி நால்வரும் இணைந்து பெரிய மாலையை அணிவித்தனர். அத்தகைய சரித்திர நிகழ்வில், டாக்டர் பட்டம் பெற்ற, எம்.ஜி.ஆரைப் பாராட்டி பேசும் மிக அரிய சந்தர்ப்பம் முதலும், கடைசியுமாக, விஜயகாந்துக்கு வாய்த்தது. 'நான் புரட்சித் தலைவரை வாழ்த்தும் அளவுக்கு தகுதி பெற்றவன் அல்ல. எனக்கு பேசும் சந்தர்ப்பம் கொடுத்த விழாக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்...' என்று கொடுத்த காலக்கெடுவுக்குள் சுருக்கமாக பேசி அமர்ந்தார், விஜயகாந்த். கடந்த, 1994ல், கருப்பு நிலா படப்பிடிப்பு, மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்றது. அங்குள்ள காது கேளாதோர் பள்ளியில், விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகி அம்மாளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார், விஜயகாந்த். அப்போது, விஜயகாந்தை அன்போடு வரவேற்றார், ஜானகி அம்மாள். ஜானகி அம்மையாருக்கும், விஜயகாந்துக்கும் உண்டான நல்லுறவின் அடையாளமாக, விஜயகாந்த் கூறிய வார்த்தைகளில்: 'கடந்த, 1994ல், எம்.ஜி.ஆரோட பிரசார வண்டி என் கைக்கு கிடைச்சது. அதை மாத்திரம் மறந்துடாதீங்க. எத்தனையோ பேர் கேட்டபோதெல்லாம் இந்த வண்டி அவங்களுக்கு கிடைக்கல. மதிப்புக்குரிய, ஜானகி அம்மையார் என் கையில கொடுத்தாங்க. அந்த வண்டிய எடுக்காமல் இருந்தேன். எப்ப எடுத்துருக்கேன்னு தயவு செஞ்சு எல்லாரும் புரிஞ்சுக்குங்க. 2005ல அதை எடுத்தேன். அந்த வண்டியின் பதிவு எண்: 2005. 'எம்.ஜி.ஆர்., வண்டி, விஜயகாந்திடம் தான் செல்ல வேண்டும். விஜயகாந்த், அந்த வண்டியில தான் பிரசாரத்துக்கு போகணும்ன்னு நெத்தியில எழுதியிருக்கு...' என்று கூறினார். சிவாஜி கணேசன் நடித்த, மண்ணுக்குள் வைரம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர், மனோஜ்குமார். விஜயகாந்தை வைத்து, ராஜ்ஜியம் திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார், மனோஜ்குமார். ராஜ்ஜியம் படத்தின் பாடல்களை, பாடலாசிரியர், சிநேகன் எழுத, இசையமைப்பாளர், பரத்வாஜ் இசையமைத்தார். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, அய்யன் திருவள்ளுவர் சிலை துவங்கி, 10 ஆயிரம் மக்களுக்கு மத்தியில், பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக காட்சியளிக்கும், விஜயகாந்தை, சிறப்பு தோற்றத்தில் வரும் மணிவண்ணன், புகழ்ந்து பாடியபடி வருவதாக காட்சிப்படுத்தினர். 'தமிழன் தமிழன் இவன் தான் தமிழன் தலைவன் தலைவன் இவன் தான் தலைவன் இனிமேல் இவனின் ராஜ்ஜியம் தானே! மக்கள் போற்றும் முதல்வன் இவனே...' என்று ஆரம்பித்தது அப்பாடல். கடந்த, 2001 உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில், விஜயகாந்த் ரசிகர்கள் பரவலாக பெற்ற வெற்றியின் உற்சாக எதிரொலி, ராஜ்ஜியம் படப்பாடலில், பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கிருஷ்ணராஜ் குழுவினரின் குரல்களில் கொட்டி முழக்கியது. தற்போதைய, சிவப்பு - மஞ்சள் - கருப்பு வண்ணத்திலான, தீப்பந்தம் அடங்கிய, தே.மு.தி.க., கொடியை, அந்தப் பாடல் காட்சியில் முதன் முதலாக காட்டினர். கேப்டனின், ராஜ்ஜியம் திரைப்படம் ஏப்ரல் 14, 2002ல், சித்திரை திருநாளில் வெளிவந்து, விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு கட்டியம் கூறியது. விஜயகாந்த் கட்சியில் இணைந்த முதல் நபர் யார்? அடுத்த இதழில்... - தொடரும் - பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !