சென்னை தினம் ஸ்பெஷல்!
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. 386வது சென்னை தினம் ஆகஸ்ட் 22ல் கொண்டாடப்படும் தருணத்தில், சில, 'ப்ளாஷ்பேக்' நினைவுகள்...ரிப்பன் பில்டிங்!சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் கட்டடங்களில் ஒன்று, சென்னை கார்ப்பரேஷன் இயங்கும். ரிப்பன் பில்டிங். இந்தோ சாராசெனிக் பாணியில், வெள்ளை வெளேர் என்றிருக்கும் கட்டடத்தின் பெரும்பகுதியை கட்டியவர், லோகநாத முதலியார் என்ற தமிழர் தான்.காமன்வெல்த் நாடுகளிலேயே முதலில் தோன்றிய கார்ப்பரேஷன் என்ற பெருமை, சென்னை கார்ப்பரேஷனுக்கு உண்டு. 252 அடி நீளம், 126 அடி அகலம், மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தின் முதல் மாடியே, 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. அதன் மத்தியில் உள்ள டவர், 132 அடி உயரம். எட்டடி அளவுள்ள கடிகாரம். இதைக்கட்ட, அந்த காலத்தில், 7.50 லட்சம் ரூபாய் செலவானது. சுட்டி முடிக்க, நான்கு ஆண்டுகள் ஆயின.ஜார்ஜ் கோட்டை!கிழக்கிந்திய கம்பெனியர், கிழக்கு கடற்கரையோரம் வியாபாரக் கிடங்கு கட்ட இடம் வாங்குவதற்கு முன்பே, 16ம் நூற்றாண்டில் சென்னைக் குப்பம், மதராஸ் குப்பம், ஆறு குப்பம் என்ற, மூன்று சிறு குடியிருப்புக் கூடங்கள் இருந்தன.கி.பி., 1639ல், பிரான்சிஸ் டே, கோகன் என்ற இரு ஆங்கிலேய பிரதிநிதிகள்கொஞ்சம் பொருட்களுடன் வைக்கோல் போர்த்திய குடிசைகளில் கிரகப்பிரவேசம் நடத்தினர். இது தான், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆரம்பம். பின் நடுவே சதுரமாய், சுற்றிலும் நெடிய சுவர்களோடு கட்டப்பட்டது தான், புனித ஜார்ஜ் கோட்டை,இந்தியாவில், 1644ல் மேலை நாட்டவர்கள் கட்டிய முதல் கோட்டை இது தான். இந்த கோட்டை தமிழக சட்டசபையாக, இத்தனை ஆண்டுகள் ஒய்வின்றி பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் முதல் சட்டசபை, 1921ல் நடத்தப்பட்டது.சேப்பாக்கம் அரண்மனை! சென்னை மாநகரில் ஒரு பரந்து விரிந்த விசாலமான அரண்மனை இருந்தது. இன்னும் இருக்கிறது என்ற தகவல் நிறையப் பேருக்கு ஆச்சரியமளிக்கக்கூடும்.கடந்த, 18ம் நுாற்றாண்டில் வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லுார் உள்ளிட்ட பகுதிகள், கர்நாடக நவாப்பின் ஆட்சியின் கீழ் இருந்தன. இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால், இவரை, ஆற்காடு நவாப் என, மக்கள் அழைத்தனர்.கடந்த, 1749ல், நவாப் பதவிக்காக ஒரு போர் நடந்தது. ஆங்கிலேயர்கள் ஆகரவோடு ஆற்காடு நவாப்பான முகமது அலி அரியணையில் ஏறினார். அவரின் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில், 117 ஏக்கர் நிலத்தில், 1768ல், கட்டி முடித்தது தான் இந்த பிரமாண்ட அரண்மனை. ஹுமாயுன் மஹால், கலஸ் மஹால் என. இரண்டு பகுதிகளை கொண்டது. இந்த அரண்மனை.இப்போது, இந்த அரண்மனையைச் சுற்றிலும் பொதுப்பணித்துறை கட்டடம்,ஆவணக் காப்பகம், வருவாய்த் துறை கட்டடம், எழிலகம் போன்றவை கட்டப்பட்டதால் கொஞ்சம் நஞ்சம் தெரிந்த அரண்மனை முற்றிலுமாக மறைந்து விட்டது.ராயபுரம் ரயில் நிலையம்!கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான, நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது. ராயபுரம் ரயில் நிலையம். தென் மாநிலத்தின் முதல் ரயில் நிலையம், ராயபுரம் தான். இங்கிருந்து தான், தென் மாநிலத்தின் முதல் ரயில், ராயபுரத்திலிருந்து ஆற்காடுக்கு, தன் பயணத்தை துவங்கியது.கடந்த, 1856ல் இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பாதையும் அமைக்கப்பட்டது.விக்டோரியா மஹால்!சென்னையில் புகழ் வாய்ந்த கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற மஹால். விக்டோரியா மகாராணியாரின் பதவி ஏற்பின் கோல்டன் ஜூப்ளிக்காக, அப்போதைய கார்ப்பரேஷன் பிரசிடென்ட்டாய் இருந்த, சர் எஸ்.டி.அருண்டேல் என்பவர் முயற்சியால், பொது மக்களிடமும் நன்கொடை பெற்றுக் கட்டப்பட்டது.இந்தோ சாராசெனிக் பாணியில், ராபர்ட் சி ஷோம் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, நம்மூர் பெருமாள் செட்டியாரால் கட்டப்பட்டு, கவர்னர் லார்டு கன்னிமாராவால், 1887ல் திறந்து வைக்கப்பட்டது.டேர் ஹவுஸ்!இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து, இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக, 1788ல் மெட்ராசுக்கு வந்தார், தாமஸ் பாரி. வியாபாரத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார்.இந்த சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார், ஜான் வில்லியம் டேர். கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு, டேருக்கு இருந்ததால், இருவரும் சேர்ந்து கப்பல் தொழில் செய்து வந்தனர்.பாரி கட்டடத்தின் பெயர், 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த, டேர் தான் காரணம். இரு நுாற்றாண்டுகளை கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட, அந்த இருவரை பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்னும் நினைவுப்படுத்தி கொண்டே இருக்கின்றன.மெரினா!சென்னை கடற்கரையில் அப்போதைய நவாப், முகமது அலி வாலாஜா என்பவர், குளியல் குளம் இணைந்த கட்டடம் ஒன்றை கட்டினார். இதற்கு, மரைன் வில்லா எனப் பெயர். இது திரிந்து, மெரினா என்றாயிற்று. பின், மரைன் வில்லாவை இடித்து விட்டு, அங்கே பல்கலைக்கழக நுாலகக் கட்டடத்தை கட்டினார். மரைன் வில்லா மறைந்தாலும், மெரினா என்ற பெயர் மட்டும் நிலைத்து விட்டது.எஸ்.ஆதிரன்