உள்ளூர் செய்திகள்

தீபாவளி பட்சண டிப்ஸ்!

* தீபாவளிக்கு வரும் விருந்தினர்களுக்கு ஸ்வீட், காரத்தை தட்டில் அப்படியே கொடுத்து பயமுறுத்தாமல், கல்யாணங்களில் செய்வது போல் பாக்கெட் செய்து கொடுக்கலாம். இல்லாவிட்டால் அவர்கள் கிளம்பும் போது, கொடுத்து அனுப்பலாம் * ஸ்வீட்டில் சிலர் ஏலக்காய்த்தோலுடன் போட்டு விடுவர். கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் தோலை எடுத்து விட்டு, ஏலக்காய்ப் பொடியை மட்டும் ஸ்வீட்டில் சேர்க்கவும். இது, ஸ்வீட்டின் சுவையைக் கண்டிப்பாக கூட்டும் * தீபாவளியன்று ஸ்வீட், காரம் என்று, 'ஹெவி'யாக இருக்கும். அதனால், அன்றைய சமையலில் மிளகு, சீரகம், இஞ்சி அதிகம் சேர்த்து எண்ணெய், தேங்காயைக் குறைத்து கொள்ளவும். விருந்து, சரிசமமாக இருக்கும். * தீபாவளியன்று இரவில், விருந்து, பார்ட்டி போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே வயிறு ஹெவியாக இருக்கும் போது, வெளியிலும் விருந்துக்குப் போக வேண்டாம். கஞ்சி போன்ற திரவ உணவுகளே நம் வயிறை சாந்தப்படுத்தும் * தேங்காய் பர்பி செய்யும் போது, இறக்குவதற்கு முன் மைதா மாவு, ஒரு தேக்கரண்டி எடுத்து லேசாக நெய்யில் வறுத்து சேர்க்கவும். பர்பி விரைவில் கெட்டியாகி, துண்டுகள் போடுவதும் சுலபமாக இருக்கும் * அடுப்பில் பட்சணம் செய்யும் போது, கையில் சூடு எண்ணெய் பட்டுவிட்டால் உடனே இட்லி மாவில் சிறிது எடுத்து அந்த இடத்தில் தடவ, குணம் தெரியும்.* தீபாவளிக்கு பட்சணம் செய்ய ஆரம்பிக்கும் முன், அந்த மாவில் ஒரு சீடை அளவிற்கு எடுத்து, அதை பிள்ளையார் போல் பிடித்து வைத்து, அதில் குங்குமம் வைத்து, மானசீகமாக பிள்ளையாரை வேண்டி, பிறகே பட்சணம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.* தீபாவளிக்கு சிலர் பஜ்ஜி செய்வர். வழக்கமாக கடலை மாவு, அரிசி மாவு கலந்து செய்வோம். தீபாவளி என்பது ஸ்பெஷலாச்சே! அதனால், கடலை பருப்பையும், பச்சை அரிசியையும் ஊற வைத்து, உப்பு சேர்த்து அரைத்து செய்தால், பஜ்ஜியோ, தீபாவளி ஸ்பெஷல் ஐட்டமாகி விடும்.* லட்டு பிடிக்கும் போது, ஜீராவில் 100 கிராம் நெய்விட்டு பிடியுங்கள். லட்டு நெய்யில் பொரித்தது போலவே படு சுவையாக இருக்கும்.* பட்சணங்களுக்கு பெருங்காயப் பொடி போடுவதற்கு பதில், செய்ய ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரம் முன், பெருங்காயத்தை வெந்நீரில் ஊறப்போட்டு அந்த நீரை உபயோகிக்கலாம். தவிர, அனைத்து பட்சணங்களையும் ஒரே நாளில் செய்து விட முடியாது. அதனால், இந்தப் பெருங்காயத் தண்ணீர் மீந்து போய்விட்டாலும், ‛பிரிஜ்'ஜில் வைத்து மறுநாளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !