உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம் - எளிமையான ஆடை எது?

பல போர்க்களங்களில் வெற்றி கண்டவர், அந்த அரசன். பல பகைவர்களை மண்டியிடச் செய்தவர். ஒருநாள், தன்னுடைய வெற்றி யாத்திரையை முடித்து, மலையடிவாரம் ஒன்றில் முகாமிட்டிருந்தார்.இரவில், அந்த குன்றின் மீது, வித்தியாசமான ஒளி, கண்ணில் பட்டது. மறுநாள் காலை, தன் அமைச்சரை அழைத்து, 'அது என்ன?' என்று பார்த்து வரச்சொன்னார், அரசன். அங்கே ஒரு துறவி இருப்பதாக, பார்த்து வந்து கூறினார், அமைச்சர். தான் அவரை சந்திக்க விரும்புவதாக சொன்னார், அரசன். சரியான ஆடை அணிந்து வந்தால், அரசரை சந்திப்பதாக பதில் சொன்னார், துறவி. அதன்படி, ஓர் அரசனை சந்திப்பதற்கு ஏற்ற ஆடை அணிந்து, குன்றின் மேல் ஏறலானார், அரசன். 'இது, சரியான ஆடை இல்லை, வேறு ஆடையில் வரட்டும்...' என்று செய்தி அனுப்பினார், துறவி. மறுபடி, வேறு எளிய ஆடையை அணிந்து, மலை மீது ஏறினார், அரசன்.அப்போதும், இதுவும் சரியான ஆடை இல்லை என, தன் குருநாதர் கூறியதாக, துறவியின் சீடன் வந்து கூறினான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த சேனாபதிக்கு கோபம் வந்தது. 'அவரைப் போய் இழுத்து வருகிறேன். எத்தனையோ பெரிய மன்னர்களை வென்ற தங்களை இந்த கிழட்டுத் துறவி அவமானப்படுத்துகிறார்...' என்றார். சேனாபதியை அமைதிப்படுத்தி, 'நீ சொல்வது தவறு. துறவி விரும்புகிறபடி நான் அவரை தரிசிப்பதே முறை...' என்றார், அரசன். பின்னர், இடுப்பில் ஓர் ஆடை, மேலே ஒரு துண்டுடன், துறவியை சந்திக்கப் போனார், அரசன். அப்போதும் அதே பதில் தான் வந்தது. அன்றிரவு மனம் வெறுத்து, தன்னுடைய கூடாரத்தில், தனி ஆளாய் அமர்ந்திருந்தார், அரசன். சட்டென்று கூடாரத்தின் வாசலில், ஓர் ஒளி தென்பட்டது. முதல் நாள் குன்றின் உச்சியில், அவர் கண்ட வித்தியாசமான வெளிச்சம். அந்தத் துறவியே, அவர் முன்னால் வந்து நின்றார்.'மகனே, இப்போது தான் நீ சரியான ஆடை அணிந்திருக்கிறாய்...' என்று கூறி ஆசிர்வதித்தார், துறவி. உடனே எழுந்து, துறவியின் பாதம் பணிந்த அரசன், 'ஐயனே, நான் தனிமையில் இருக்கும் போது, சாதாரண உடையில் தானே இருக்கிறேன். தாங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே...' என்றார். 'மகனே, நீ தனிமையில் இருக்கும் போது தான், உன்னுடைய மனமும் தெளிவாக இருக்கிறது. நீ எவ்வளவு சாமானியமானவன் என்பதையும் உணர்கிறாய்...' என்றார், துறவி. அதுவரை தான் பெற்ற வெற்றிகள், பகைவர்களோடு மோதியது எல்லாம் மறந்து போனது. எளிமை தான் பவித்திரமான ஆடை என்பதை உணர்ந்தார், அரசன். பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !