உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: பாகுபாடற்ற இறைவன் !

ஒரு காட்டில் சிங்கமும், காக்கையும் நண்பர்களாயிருந்தனர். ஒருநாள், அவை இரண்டிற்கும் உணவு கிடைக்காததால் மிகுந்த பசியால் வாடின. அதனால், அவை கடவுளிடம், 'தங்கள் பசியைப் போக்கியருள வேண்டும்...' என்று வேண்டிக் கொண்டன. அவைகளின் வேண்டுகோளுக்கு கடவுளும் செவி சாய்த்தார். சிறிது நேரத்திற்கு பின், சிங்கத்தின் கண்ணில் ஒரு யானை தென்பட்டது. உடனே பாய்ந்து அதைக் கொன்று தின்றது,சிங்கம். அதேநேரம் காக்கைக்கு ஒரு எலி கிடைத்தது. பின்னர், காக்கையிடம், 'உன்னைவிட நானே அதிர்ஷ்டசாலி. எப்படியென்றால் எனக்கு மிகப்பெரிய உணவைக் கொடுத்த கடவுள், உனக்கோ அற்பமான ஒரு சிறு உணவை கொடுத்து விட்டார்...' என்று ஏளனம் செய்தது, சிங்கம். அதற்கு, 'சிங்கமே, உண்மை புரியாமல் உளறாதே. கடவுளிடம் பாரபட்சத்தைப் பார்க்கக் கூடாது. அவர், உன் பசி தீர ஒரு யானையைக் கொடுத்தார். என் பசி தீர ஒரு எலியைக் கொடுத்தார். நம்மில் யாருக்கு பெரிய உணவை கொடுத்தார் என்பது முக்கியமல்ல. நம் இருவரின் பசி தீர்ந்ததா என்பதே முக்கியம்...'. 'ஒருவேளை கடவுள் உனக்கு கொடுத்ததுபோல், எனக்கும் யானையை கொடுத்திருந்தால் அதை என்னால் கொல்ல முடியுமா? கொன்றாலும் அதை முழுவதுமாக என்னால் உண்ண முடியுமா? அல்லது என்னைப்போல் உனக்கு எலியைக் கொடுத்திருந்தால், அதை என்னைப்போல் பிடிக்க முடியுமா? பிடித்து தின்றாலும் உன்னுடைய பசி அடங்கியிருக்குமா?' என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டது, காக்கை. பதில் ஏதும் பேச முடியாமல், மவுனமாய் நின்றுக் கொண்டிருந்தது, சிங்கம். கடவுள் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே மாதிரியான உணவை அளிப்பதில்லை. ஒவ்வொரு உயிரினத்தின் உடலுக்கும், தகுதிக்கும் ஏற்றவாறே உணவை அளிக்கிறார். அதேபோல வசதி படைத்தவர்கள் கடவுளுக்காக ஆடம்பரமான வகையில் தான, தர்மங்களும் பூஜைகளும் செய்வர். அதைப் பார்த்து தங்களால் இந்த மாதிரி செய்ய முடியவில்லையே என்று ஏழைகள் வருத்தப்படக் கூடாது. அவரவர் தகுதிக்கேற்ற அளவுக்கு, கடவுளுக்கு அர்ப்பணம் செய்து வழிபடலாம். துாய பக்தியுடன் பயனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் அர்ப்பணங்களை கடவுள் பாகுபாடின்றி நிச்சயமாக ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறார். -- அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !