உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: தருமரும் - துரியோதனனும்!

தருமரும், துரியோதனனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், இருவரும் அருகில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் வில்வித்தை கற்று வந்தனர். ஒருநாள் வில்வித்தை பயிற்சி முடிந்ததும், தருமர் அரண்மனைக்கு திரும்ப, தன் தேரில் செல்லாமல் நடந்தே சென்றார். அதை பார்த்த, துரியோதனன் திகைப்புற்று, 'ஏன் தேரில் செல்லாமல் நடந்து செல்கிறாய்?' என்றான். அதற்கு,'எதிர்காலத்தில் நான் இந்த நாட்டை ஆளப் போகிறேன். அதனால், தரையில் கால் பதிய நடக்க விரும்புகிறேன்...' என்றார், தருமர். அவர் கூறியதைக் கேட்டு, 'இந்த நாட்டை ஆளப் போவதாகச் சொல்கிறானே, தருமர். ஆனால், நான் அல்லவா இந்த நாட்டை ஆள வேண்டும்! எனவே, நானும் தரையில் என் கால் பதிய நடந்து செல்ல வேண்டும்...' என்று நினைத்த துரியோதனன், தருமருடன் நடக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில், தருமரின் கண்ணில் ஒரு காட்சி தென்பட்டது. இறைச்சி விற்கும் இளைஞன் ஒருவன், தன் கடையை அப்போது தான் திறந்திருந்தான். அதைக் கண்ட தருமர், 'அவனுக்கு, உயிர்க் கொலை செய்வது பாவம் என்பது தெரியாதா? ஏன் இந்தப் பாவத் தொழிலை செய்ய வேண்டும்? உலகில் வாழ வேறு தொழில் எதுவும் இல்லையா என்ன?' என்று நினைத்தார். அந்நேரத்தில், அந்த இறைச்சி கடைக்காரன், சிறிதளவு மாமிசத்தைச் சிறு துண்டுகளாக்கி, அதற்காகவே அங்கு காத்திருந்த காக்கைகளுக்கும், நாய்களுக்கும் வீசினான். அதை, பார்த்ததும், 'இறைச்சி விற்கும் பாவத் தொழிலை செய்தாலும், அவனிடம் விலங்குகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்ல குணமும் இருக்கிறது...' என்று நினைத்தார், தருமர். பிறகு, இருவரும் தொடர்ந்து நடந்து, வெவ்வேறு திசைகளில் உள்ள அவர்களது அரண்மனைகளுக்கு சென்றனர். தருமர் எதிலும் நல்லதையே பார்ப்பவர்; அவருக்கு குற்றங்களைப் பார்க்க தெரியாது. 'இறைச்சி விற்பவனை பற்றி ஏன் எனக்கு தவறான எண்ணம் தோன்றியது?' என்று எண்ணியபடி தன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது, அங்கு வந்த, கிருஷ்ணரிடம், தன் மனதில் எழுந்த சந்தேகத்தைக் கேட்டார், தருமர். அதற்கு, 'உங்கள் மனதில் தவறான எண்ணம் தோன்றிய நேரத்தில், உங்களுடன் துரியோதனன் இருந்தானா?' என்றார், கிருஷ்ணர். 'ஆம். இருந்தான்...' என்றார், தருமர். 'அதனால்தான், உங்கள் உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றியது. நல்லவர்கள் எப்போதும் நல்லோர்களுடன் பழக வேண்டும்; தீயவர்களின் தொடர்பை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தீயவர் தொடர்பு நிச்சயம் தீய எண்ணத்தை தான் விளைவிக்கும்...' என்றார், கிருஷ்ணர். 'துஷ்டனைக் கண்டால் துார விலகு' என்று பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். தீயவர்களுடன் ஏற்படும் பழக்கம், நம் வாழ்க்கையைத் திசை மாற்றி விடும்! அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !