உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: பரிபூரண நம்பிக்கை !

ஆற்றில் நீராடியபின், ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தார், துறவி ஒருவர். அதை, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். தியானம் கலைந்து எழுந்த துறவியிடம், 'நீங்கள் இதுவரையில் என்ன செய்தீர்கள்?' என்று கேட்டான், அந்தச் சிறுவன். அதற்கு, 'இறைவனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தியானம் செய்தேன்...' என்று கூறி சென்றார், துறவி. அவர் கூறியது அவனது மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனவே, அவனும் ஆற்றில் நீராடி, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, 'இறைவா! எனக்குத் தரிசனம் தர வேண்டும்...' என்று ஆத்மார்த்தமாக வேண்டினான். அப்பழுக்கற்ற மனம் படைத்தோருக்கு இறைவனின் காட்சியும் எளிதில் கிடைக்கும் அல்லவா? சிறுவன் முன் தோன்றினார், இறைவன். அதற்கு முன் வரை இறைவனைப் பார்த்ததில்லை, அந்தச் சிறுவன். எனவே அவன், அவரிடம், 'தாங்கள் யார்?' என்று கேட்டான். அதற்கு, 'அப்பனே... நான் தான் இறைவன். நீ, பிரார்த்தனை செய்ததால், உனக்குக் காட்சி கொடுக்க வந்திருக்கிறேன்...' என்றார். 'நீங்கள் தான் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? சற்றுமுன் தியானம் செய்த துறவிக்கு, இறைவனைத் தெரியும். அவர் வெகுதுாரம் சென்றிருக்கமாட்டார். நான், அவரைத் தேடி அழைத்து வருகிறேன். அவர் வந்து உங்களை, இறைவன் என்று சொன்னால் தான், நான் நம்புவேன்...' என்றான், அச்சிறுவன். இறைவனும் அதற்குச் சம்மதித்தார். ஆனால், அந்தச் சிறுவன் இறைவனிடம், 'நான் இங்கிருந்து சென்றதும், நீ தப்பி விடலாம் என்று நினைக்கிறாயா? என்னை ஏமாற்ற முடியாது. தப்ப முடியாதபடி நான் உன்னைக் கயிற்றால் கட்டிவிட்டுச் செல்கிறேன்...' என்றான். மாடுகளைக் கட்டும் கயிறால் இறைவனை மரத்தில் கட்டினான், சிறுவன். பிறகு அவன், துறவியைத் தேடிச்சென்று, நடந்தவற்றை கூறி, அழைத்து வந்தான். மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனை சுட்டிக்காட்டி, துறவியிடம், 'இவர் தான் இறைவனா?' என்று கேட்டான், சிறுவன். ஆனால், மரம் மட்டுமே துறவியின் கண்களுக்கு தெரிந்தது; இறைவன் தெரியவில்லை. அப்போது, 'சிறுவனே! நீ எளிய உள்ளத்துடன் நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். எனவே, நான் உனக்கு தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால், நான் உன் கண்களுக்கு மட்டும் தான் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை...' என்றார், இறைவன். அதைக் கேட்ட சிறுவன், 'இறைவனே! இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால் தான் எனக்கு, உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே, இவருக்கும் நீங்கள் தரிசனம் கொடுக்க வேண்டும்...' என்று கேட்டுக்கொண்டான். சிறுவனின் பிரார்த்தனையை ஏற்று, துறவிக்கும் தரிசனம் கொடுத்தார், இறைவன். ஆன்மிக வாழ்வில் இறைவன் மீது நம்பிக்கை மிகவும் தேவை. தான் கேட்பதை தன் தாய் நிச்சயமாகக் கொடுப்பாள் என்ற நம்பிக்கையுடன் தான் தாயிடம் கேட்கிறது, குழந்தை. அதுபோன்ற நம்பிக்கையுடன், இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்! அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !