உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

முதியோர் இல்லத்துக்கு,'சோலார் பேனல்!'வெளியூரிலுள்ள நண்பர் ஒருவர், தன் பிறந்தநாளை,ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாட, குடும்பத்தினரோடு சென்றிருந்தார்.அதேநாளில், அங்கு வந்திருந்த இளைஞர் ஒருவர், அந்த இல்லத்திற்கு நன்கொடையாக குறிப்பிட்ட தொகையை வழங்கியதோடு, அவர்களின் மின் தேவைக்கு உதவும் பொருட்டு, சொந்த செலவில், 'சோலார் பேனல்'களையும் அமைத்துத் தந்திருந்தார்.அதுபற்றி, அந்த இளைஞரிடம் வினவியுள்ளார், நண்பர்.'நான் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறேன். உள்ளூருக்கு வரும்போதெல்லாம், நான் படித்த பள்ளிக்கூடம், எங்கள் ஊர் கோவில் போன்றவற்றிற்கு, 'சோலார் தகடு'களைப் பொருத்திக் கொடுத்திருக்கிறேன். இந்த முறை, ஆதரவற்றோர் இல்லத்திற்கு அமைத்துக் கொடுக்க விரும்பி, நிறைவேற்றி இருக்கிறேன்...' என்று, கூறியிருக்கிறார்.இதை என்னிடம் பகிர்ந்த நண்பர், 'நல்லெண்ணம் கொண்ட வசதி படைத்தோர், ஆதரவற்றோர் இல்லங்களின் உணவு தேவை, பொருளாதாரத் தேவைகளுக்கு உதவுவதைப் போலவே, மின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாக, 'சோலார் பேனல்'களை அமைத்துத் தரும், உதவியையும் செய்யலாம்...' என்றார்.வாய்ப்புள்ளோர், இப்படியும் உதவலாமே!-செ.விஜயன், சென்னை.நூலகம் உயர....நண்பர் ஒருவரை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, பக்கத்து கிராமத்திலிருந்து இளைஞர்கள் சிலர், என் நண்பரிடம், 'படித்து முடித்து பயன்படாமல் இருக்கும் புத்தகங்கள் ஏதாவது இருந்தால் கொடுங்கள். எங்கள் ஊரில், நுாலகம் ஒன்று துவங்க விரும்புகிறோம்...' என்றனர்.அவர்களிடம் இதுபற்றி விசாரிக்க, 'எங்கள் ஊரில், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், 50 பேர் இருக்கின்றனர். விடுமுறை நாட்களில் வாசிப்பு பழக்கம் ஏற்பட, நுாலகம் ஒன்று துவங்கலாம் என, முடிவு செய்துள்ளோம்.'எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் படித்தவர்களின் வீடுகளுக்கு சென்று, புத்தகம் சேகரிக்கிறோம். மேலும், தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள், வேலைவாய்ப்பு இதழ் மற்றும் பொது அறிவு இதழ்களை மாதம் தோறும் வாங்கி, நுாலகத்திற்கு வழங்க, எங்கள் ஊரிலுள்ள சிலர் முன் வந்துள்ளனர்...' என்றனர்.அவர்களின் முயற்சியை பாராட்டி, தன்னிடமிருந்து, 10 புத்தகங்களை வழங்கினார், நண்பர். என் பங்கிற்கு நானும் சில நுால்களை தந்தேன்.நுாலகம் இல்லாத ஊர்களில், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நுாலகம் அமைக்க முன்வந்த இளைஞர்களை போல், மற்றவர்களும் நடவடிக்கை எடுக்கலாமே!சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.இப்படியும் செய்யலாமே!வீட்டிற்கு பூச்செடிகள் வாங்க, நர்சரிக்கு சென்றேன்.'இங்கு, ஆலோசனை மையம் இருக்கிறது. செடி வளர்ப்பு குறித்த சந்தேகங்கள் இருப்பின், அதை தெளிவு பெற்று செல்லலாம்...' என்றார், நர்சரி ஊழியர்.'என்னது, ஆலோசனை மையமா...' என, அவர் கை காட்டிய, ஓலை குடிசைக்குள் சென்றேன்.அங்கிருந்தவர், தன்னை, ஓய்வுபெற்ற வேளாண் ஊழியர் என, அறிமுகப்படுத்திக் கொண்டு, செடி வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.'சரியான வழி காட்டல் இல்லாமல், நான் வைத்த செடிகள் செழிப்பாக வளர்ந்ததே இல்லை. இனி, உங்கள் ஆலோசனைபடி செடியை வளர்க்கிறேன்...' என, கூறி வந்தேன்.பின்னர், நர்சரி உரிமையாளரிடம், அது குறித்து கேட்டேன்.'ஆசை ஆசையாய் செடி வாங்கி செல்வோர், வளர்ப்பு முறை தெரியாமல், அதை கொன்று விடுகின்றனர். தங்களால் செடி வீணானது தெரியாமல், நர்சரி மீது பழி போட்டனர். இதனால், வியாபாரம் குறைந்தது.'ஒருமுறை, என் கடைக்கு வந்த இவர், தன்னை, ஓய்வுப்பெற்ற வேளாண் ஊழியர் என அறிமுகப்படுத்தி, செடி வளர்ப்பு குறித்து, இலவச ஆலோசனை தருவதாக கூறினார். ஏற்கனவே தொழில் நலிவடைந்து இருந்ததால், அவரை, ஆலோசனை சொல்ல நியமித்தேன்.'இப்போது, வியாபாரம் நன்றாக நடக்கிறது. என்னால் முடிந்த சிறு தொகையை தருகிறேன். மேலும், பெரிய பெரிய வீடுகளில் தோட்டங்கள் அமைக்கவும், அதை நேரடியாக சென்று பராமரித்து வரும் பணியையும் செய்கிறார். இதனால், அவருக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது...' என்றார்.நர்சரி நடத்துபவர்கள், இவ்வாறு முயற்சித்து வருமானத்தை பெருக்கலாம். ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என தவிப்போர், இதுபோன்று, தங்கள் தொழில் சார்ந்த பணியில் ஈடுபடலாம்!எம்.மொவன்குட்டி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !