இது உங்கள் இடம்!
ஹிந்தி கற்றுக் கொள்ளலாமே!நான் அபுதாபியில், இரண்டு ஆண்டுகள், 400 தொழிலாளர்களுக்கு அதிகாரியாக பணி புரிந்தேன். ஊழியர்களில், 60 சதவீதம் பேர், ஹிந்தி மற்றும் உருது பேசுபவர்கள். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அறிந்த நான், ஓரிரு ஹிந்தி வார்த்தைகள் மூலம் அவர்களுடன் ஓரளவு தான் உரையாட முடிந்தது. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு ஏனோ என்னிடம் ஏற்படவில்லை. பணியில் சமாளித்து விட முடியும் என்று தப்புக்கணக்கு போட்டேன். அதனால், வெகு விரைவிலேயே பணியிறக்கமும் செய்யப்பட்டேன். சமீபத்தில், சென்னை வந்தபோது, ஒரு ஹோட்டலில், வட மாநில ஊழியர்கள் வேலையில் இருந்ததை கண்டேன். அவர்களிடம் ஜம்பமாக, தப்பும் தவறுமாக ஹிந்தியில் பேச, அவர்கள் கிண்டலாக சிரித்தவாறே, 'அண்ணா எங்களுக்கு தமிழ் நன்றாக பேசத் தெரியும். எழுதவும் பயிற்சி பெற்றுள்ளோம்...' என்று கூற, சம்மட்டியால் அடிப்பது போல் உணர்ந்தேன்.பள்ளிப் படிப்புக் கூட, முடிக்காத வட மாநிலத்தவர், அவசியம் மற்றும் சூழ்நிலை கருதி பிழைப்புக்காக பிற மொழிகளையும் கற்கும் போது, அவசியத் தேவையான ஹிந்தி கற்காத என் மெத்தனப்போக்கை நினைத்து வெட்கப்பட்டேன். தாய் மொழியுடன் வேற்று மொழிகளையும் கற்பது தான் பயனளிக்கும், சிறப்பான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்ற படிப்பினையை பெற்றேன்.- அப்புண்ணா ரமேஷ், திருவள்ளூர்.ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை..கோவையிலுள்ள ஒரு பிரபலமான, மொபைல்போன் கடையில், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனை, 'ஜீரோ பர்சன்ட்' வட்டியில், இ.எம்.ஐ., மூலம் செலுத்தும் முறையில் ஒவ்வொரு மாதமும், 5-ந் தேதி, ரூ.974 வீதம், எட்டு மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புக் கொண்டு, முன் பணமாக ரூ.6,000 செலுத்தி, மொபைல் போனை வாங்கினார், என் நண்பர். முதல் மாத தவணையாக, 974 ரூபாயை, அந்த நிறுவனம் என் நண்பரின் வங்கி கணக்கிலிருந்து, செப்., 5, 2024ல் எடுத்துக்கொண்டது. இரண்டாவது தவணை பிடித்தம் செய்யப்பட வேண்டிய, அக்., 5 அன்று, நண்பரின் வங்கி கணக்கில், ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்தும் அந்த நிறுவனம் தவணைத் தொகையான, 974 ரூபாயை பிடித்தம் செய்யாமல், மறுநாள் நண்பரின் மொபைலை இயங்கவிடாமல், 'ஹேக்' செய்துவிட்டது.இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் கிளை கடைக்கு சென்று கேட்டபோது, 'வங்கி கணக்கில் பணம் இல்லை...' என்று கூறியுள்ளனர். நண்பர், தன் வங்கி கிளைக்கு சென்று கணக்கில் பணம் இருந்ததற்கான ஆதாரங்களை பெற்று, மொபைல் நிறுவன கிளை நிர்வாகியிடம் காண்பித்தபோது, அதை அவர்கள் புகைப்படம் எடுத்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, உண்மை நிலையை அறிந்து கொண்டது. எனினும், கிளை நிர்வாகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது தவணையை எடுக்க வங்கி அனுமதி வழங்கவில்லை என, வங்கியின் மீதே பழியை சுமத்தி, கட்ட வேண்டிய, ரூ.974 உடன், வட்டி ரூ.673 சேர்த்து, மொத்தம் ரூ.1646.49- ஐ, 'ஜி பே' மூலம் அந்த நிறுவன கணக்கில் செலுத்தினால் தான், உங்கள் மொபைல் போன் இயங்கும் என கூறிவிட்டனர். வேறு வழியின்றி அந்நிறுவனம் கேட்ட தொகை முழுவதையும் செலுத்திய பின்பு தான், மொபைல் போன் இயக்கத்திற்கு வந்தது.'ஜீரோ பர்சன்ட்' வட்டி என்று ஆசைகாட்டி, முதல் தவணையாக மட்டும் சரியான தொகையை பிடித்தம் செய்து, பின், அதிக பணம் பறிக்கும் நோக்கத்தில், இவ்வாறு செய்துள்ளது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, இதுபோன்ற ஏமாற்று பேர் வழிகள் தங்கள் திறமையை காட்டி கொண்டே தான் இருப்பர்.- மணியட்டி மூர்த்தி, கோவை.கைத்தொழில் கற்கலாம்!கல்லுாரி படிப்பை முடித்து, வேலை தேடிக் கொண்டிருந்தான், நண்பனின் மகன். ஒருநாள், சைக்கிள் பழுது நீக்கும் கடையில் அவனை பார்க்க, 'என்ன இங்கே?' என்றேன். 'சைக்கிள் பழுது நீக்க கற்றுக் கொள்கிறேன், அங்கிள். இது மட்டுமல்ல, கைக்கடிகாரம் பழுது பார்க்க, தோல் பொருட்கள் தயாரிக்க, பூ மாலை கட்ட என, நான்கைந்து கைத்தொழிலை கற்றுக் கொண்டுள்ளேன். நல்ல வேலை கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும், இந்த கைத்தொழிலை வைத்து, முன்னேறி விடுவேன்.'வேலை கிடைத்தாலும், உபரியாக தெரிந்த தொழிலை செய்து, நிறைய சம்பாதிப்பேன்...' என்றான். நண்பனின் மகனை பாராட்டி விட்டு வந்தேன்.- ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.