பெண் சக்தி பொன்சக்தி!சமீபத்தில், என் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்று பல ஆண்டுகள் ஆனதால், முன்பு இருந்ததை விட, இப்போது பல மாற்றங்கள் உருவாகியிருந்தன. கூலி வேலைக்கு சென்றவர்கள் எல்லாம், சுயதொழிலுக்கு மாறியிருந்தனர்.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களிடம் கொடுக்காமல், தாங்களே நேரடியாக விற்பனை செய்தனர். ஆண்களைவிட பெண்களே வேலைவாய்ப்பில் முன்னணியில் இருந்தனர். பெண் சக்தியின் மகத்துவத்தை இங்கு அறிந்து கொண்டேன்.நான்கைந்து மகளிர் சுயஉதவிகுழுக்கள் இருந்தன. அதன்மூலம் கடன் பெற்று பெண்கள், சிறு ஜவுளி கடை, தையல்கடை, ஸ்டேஷனரி கடை, டீ கடை, காய்கறி கடை, மீன் மற்றும் கருவாட்டு கடை என, கிராமம் முழுவதும், பெண்களின் வியாபார தளமாகவே இருந்தது-. இந்த கிராமத்தை சுற்றியுள்ள, 10 கிராமங்களில், இதுவே பெரிய கிராமம் என்பதால், அனைத்து கிராம மக்களின் வியாபார மையமாகவும் மாறியுள்ளது.ஒரு நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள் தான் என கூறினார், காந்திஜி. அந்த கிராமத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை கண்டு வியந்தேன். இதுதான் உண்மையான கிராம வளர்ச்சி. மற்ற கிராம மக்களும், சுயதொழிலில் ஈடுபட்டு தங்களையும், நாட்டையும் முன்னேற்ற முன்வர வேண்டும்!-
பி.மணியம்மாள், துாத்துக்குடி.தோழியின் துயரம்!என் தோழியைக் காண அவரது வீட்டிற்கு இரவு நேரம் சென்றிருந்தேன். அவள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.'காலையில் தானே வாசல் தெளிப்பர். நீ ஏன் இரவில் தெளிக்கிறாய்?' என்று கேட்டேன்.அதற்கு அவள், 'இந்த குடியிருப்பு பகுதியில், ஒரு சிலர் நாய் வளர்க்கின்றனர். அவர்கள் இரவு நேரத்தில் நாயை, 'வாக்கிங்' அழைத்துச் செல்லும் போது, எங்கள் வீட்டு வாசல் முன், நாய் மலம் கழிக்கும் போது, அதை தடுக்காமல் போய் விடுகின்றனர். இதனால், காலையில் அதை அப்புறப்படுத்தி, வீட்டு வாசலை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.'நாய் வளர்ப்பவர்களிடம் கேட்டால், 'இது எங்கள் நாய் அல்ல தெரு நாய்கள் பண்ணிய வேலை...' என்று பொய் சொல்லி விடுகின்றனர்.'இதனால், பினாயில் கலந்து வாசல் தெளித்தால், அந்த வாசத்திற்கு நாய் அசுத்தம் செய்யாது என்று, நண்பர் ஒருவர் சொன்ன யோசனையின்படி இரவு நேரத்தில் தினமும் இப்படி செய்ய வேண்டியுள்ளது. தினமும் இது ஒரு வேலையாக உள்ளது...' என்று அலுத்துக் கொண்டாள்.நாய் வளர்ப்பவர்கள் கொஞ்சம் யோசித்து நியாயமாக செயல்பட வேண்டும்.-
ஜே. கமலம், திருநெல்வேலி.உழைப்பால் உயருங்கள்!சமீபத்தில், உறவினரின் வீட்டு விசேஷத்தில், காய்கறி நறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, ஒரு மாற்றுத் திறனாளி பெண்மணியைப் பார்த்தேன்.அதுகுறித்து அவரிடமே வினவினேன்.'நான் எட்டாம் வகுப்பு வரை மட்டும் தான் படிச்சேன். என் கணவர் கூலி வேலை செய்கிறார். குடும்பத்திற்கு உதவவும், பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காக சேமிக்கவும், எனக்கொரு வேலை தேவைப்பட்டது.'பல இடங்களில் தேடியும், வாய்ப்பு கிடைக்கலை. அப்போது, உறவுக்கார சமையல்காரர், திருமண வீடுகளில் சமையல் செய்ய போகும்போது, காய்கறி நறுக்கும் வேலைக்கு அழைத்தார். அவரின் வழிகாட்டலில், இந்தப் பணியைத் துவங்கினேன்.'முதலில், சிலர் கேலி செய்தனர். ஆனால், என் கடின உழைப்பு, நேர்மை மற்றும் திறமையால், அவர்கள் வாயை அடைத்தேன். இப்போது, நல்ல ஊதியமும், மரியாதையும் பெற்று, கவுரவமா வாழ்கிறேன்...' என்றார்.வேலை தேடுவோர், மனம் தளராமல் விடாமுயற்சியுடன் தேட வேண்டும். கிடைத்த வேலை எதுவாக இருந்தாலும், அதில் திறமையை காட்டினால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு, அப்பெண்மணியே உதாரணம்.இளைஞர்களே... உழைப்பால் உயருங்கள். எந்த வேலையையும் ஈடுபாட்டோடு, நேர்மையாகச் செய்து, வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்.
-வி.ஆதித்த நிமலன், கடலுார்.