உள்ளூர் செய்திகள்

மின்சாரம் போன்றவர், கடவுள்!

காஞ்சி மகாபெரியவரின், ‛அருளுரை' நூலிலிருந்து:மலர்களின் வாசம் கண்ணுக்குப் புலப்படாது; மூக்குக்குத்தான் தெரியும். கற்கண்டின் தித்திப்பு மூக்குக்கு தெரியாது; நாவுக்குத் தான் தெரியும். சங்கீதம், நாவுக்குப் புலப்படாது; செவிக்குத்தான் புலப்படும். சூடும், குளிரும் தொடு உணர்ச்சி கொண்ட தோலுக்கு புலனாகும். இவற்றை காதால் உணர முடியாது. மேலே சொன்ன நான்கும் கண்ணுக்கு தெரியாது. மாறாகப் பச்சை, சிவப்பு முதலிய வர்ணங்கள் காது, மூக்கு, வாய் மற்றும் தோல் இவற்றுக்கு புலப்படாது; கண்ணுக்கே புலனாகும். நாஸ்திகன் உள்பட அனைவரும் நிச்சயமாக உண்டு என்று கூறுகிற உலக வஸ்துகள் இவ்விதம் ஒவ்வொரு இந்திரியங்களுக்கு மட்டும் புலனானால் போதும்; எல்லா இந்திரியங்களுக்கும் புலனாக வேண்டியதில்லை என்று புரிகிறது. நாலு இந்திரியங்களுக்கும் புலனாகாமல் ஒரே ஒரு இந்திரியத்துக்கு புலனானாலும், இரு வஸ்து இருப்பதாகவே சொல்கிறோம். உதாரணமாக சங்கீதம் காது ஒன்றுக்கே புலனாகிறது. அதை, ருசிக்கவோ, பார்க்கவோ, முகரவோ, தொடவோ முடியாது. இருந்தாலும், சங்கீதம் என்று ஒன்று கிடையாது என்று சொல்ல முடியாது அல்லவா. ஐந்து இந்திரியங்களுக்கும் புலனாகாமல், ஒரு வஸ்து இருக்க முடியுமா என்று யோசித்து பார்ப்போம். பிரபஞ்சம் முழுவதும் மின்சார அலைகள் வியாபித்து இருப்பதாக கூறுகின்றனர், விஞ்ஞானிகள். ஆனால், நமக்கு எந்த இந்திரியத்தாலும், அதை அறிந்து கொள்ள முடிவதில்லை. என்றாலும், சில பரிசோதனைகள் மூலம் மின்சாரத்தின் வியாபகத்தையும் அது சரீரம், மூளை எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பதையும் நிரூபித்துக் காட்டியதை நாம் நம்புகிறோம். இத்தனை இந்திரியங்களையும், அவை கிரகிக்கிற வஸ்துக்களையும் படைத்து, ஒழுங்கு செய்து வைத்ததற்கு, ஒரு பெரிய அறிவு இருக்கிறது. அதைத்தான் கடவுள், என்கிறோம். மின்சாரத்தை போல் அதுவும் எங்கும் வியாபித்து இருக்கிறது; நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது. அப்படி பகவான் யார், அவனுடைய உண்மையான ஸ்யரூபம் என்ன என்பதை தெரிந்து கொண்டால், அந்த ஷணத்திலேயே அவனாகவே ஆகிவிடலாம். அப்புறம், 'நான், நான்' என்று சொல்லி, வெளியில் இருக்கும்படியான வஸ்து தனியாக இல்லாமலே போய் விடும். - ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !