கவிதைச்சோலை: அழகான வெற்றி!
விடாமுயற்சியின் விரல் பிடித்து வீதிக்கு வாருங்கள் - அது சிவப்புக் கம்பளம் விரித்து சிம்மாசனத்தில் அமர வைக்கும்! தன்னம்பிக்கையின் கால் ஊன்றி தலைநிமிர்ந்து நில்லுங்கள் - அது ஆகாயத்தைச் தாண்டிச் செல்லும் அற்புத சக்தி தரும்! பொறுமையின் பாதம் தாங்கி பூமியில் நடமாடுங்கள் - அது நெருக்கடிகளின் வேர் அகற்றி நெஞ்சுக்கு நிம்மதி தரும்! ஒழுக்கத்தின் கரம் கொண்டு ஒய்யாரமாய் நடைபோடுங்கள் - அது கோபுரத்தின் உச்சியில் ஏற்றி கோள்களையே வணங்க வைக்கும்! குறிக்கோளின் தோள் கொண்டு குருதி சிந்தப் பாடுபடுங்கள் - அது உலகத்தின் வெளி எங்கும் ஊர்வலமாய் கொண்டு சேர்க்கும்! துணிவின் மாண்பு கொண்டு துடிப்புடன் செயல்படுங்கள் - அது விருப்பங்களை நிறைவேற்றி வீறுநடை போட வைக்கும்! உண்மையின் நாவைக் கொண்டு உள்ளத்தைத் திறந்திடுங்கள் - அது உறவுகளின் வலிமை சேர்த்து உதவியாய் ஓடி வரும்! இரக்கத்தின் கண் கொண்டு இயற்கையை நோக்கிடுங்கள் - அது காலம் உள்ளவரைக்கும் கனிவுடன் நினைவு கூறும்! புன்னகையின் இதழ் விரித்து பூரிப்புடன் உரையாடுங்கள் - அது மகிழ்ச்சியின் முகவரியாய் மனங்களில் இடம் பிடிக்கும்! உழைப்பின் மூச்சைக் கொண்டு ஊக்கமாய் முயற்சியுங்கள் - அது அதிசயங்களின் அணிவகுப்பாய் அழகழகான வெற்றிகள் தரும்! - ஜா. துரைசிங்கம், சென்னை. தொடர்புக்கு: 95512 51168