உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: டாக்டர் நீங்க என்னை ஏமாத்திட்டீங்க!

குமுதம் இதழின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஆசிரியருமான எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பனின் அனுபவ தொடர்.'டாக்டர்! என்னை நல்லா நீங்க ஏமாத்திட்டீங்க...' என, சிவாஜி சொன்னதும், நான் அதிர்ச்சி அடைந்தேன்.'என்ன சொல்றீங்க, சிவாஜி சார்? நான் உங்களை ஏமாத்திட்டேனா?' என, பதட்டத்தோடு கேட்டேன்.'ஆமாம்! என்னை நீங்க நல்லா ஏமாத்திட்டீங்க...' என்றார்.நான் குழப்பத்தோடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவர் ரொம்ப அமைதியான குரலில், 'நீங்க யாரு? உங்க அப்பா யாரு என்றெல்லாம், எனக்கு இப்போ தான் தெரியும்...' என்றார்.எனக்கு சட்டென்று புரிந்து விட்டது. சிரித்தேன். நான் அதுவரை, என் குடும்பப் பின்னணி குறித்து சொல்லவில்லை. எப்போதுமே, என் பத்திரிகை பின்னணி குறித்து வெளியில் சொல்வதில்லை.'உங்க அப்பா தான், 'குமுதம்' இதழின் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையாமே! நீங்க என்னை வந்து பார்த்துட்டுப் போன பின் தான், எனக்கு தெரிஞ்சுது! முதல்ல நீங்க வந்தபோது, அதை என்கிட்ட நீங்க சொல்லவே இல்லையே... என்னை நீங்க ஏமாத்திட்டீங்க...' என்றார்.'உங்க அப்பா, பல சமயத்துல என்னைப் பாராட்டி எழுதி இருக்காரு. ஆனா, நிறைய முறை என்னை எப்படியெல்லாம் விமர்சிச்சு எழுதி இருக்காரு தெரியுமா?'ஆனாலும், அவருடைய எழுத்தையும், பத்திரிகையையும் நான் ரொம்ப ரசிச்சுப் படிப்பேன்! உங்க அப்பா பெரிய மனுஷர்! அவர் மீது எனக்கு எப்பவுமே ரொம்ப மரியாதை உண்டு...' என்றார்.அவர் சொன்னதை நான் மவுனமாக கேட்டுக் கொண்டேன். என் தந்தையின் எழுத்து சுதந்திரத்தில் நான் தலையிட்டது கிடையாது. நான் மட்டுமல்ல, வேறு யாரும் கூட தலையிட்டது இல்லை.அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன் மீண்டும், சிவாஜியை அவரது வீட்டுக்குச் சென்று, மரியாதை நிமித்தம் சந்தித்து விடை பெற்றேன்.விமானப் பயணத்தின்போது, 'நம்ம ஊர் நடிகர் திலகம் சிவாஜி அமெரிக்காவுக்கு வருகிறார். எங்கள் வீட்டில் விருந்தினராக தங்கப் போகிறார். அவருக்கு நான் சிகிச்சையளிக்கப் போகிறேன்...' என்ற எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்து இருந்தது. அது மகிழ்ச்சியையும், அவரை நல்லபடியாக கவனித்து அனுப்ப வேண்டுமே என்ற பதற்றத்தையும் தந்தது.அமெரிக்காவில், சிவாஜியின் சிகிச்சை மற்றும் அவருடைய வருகைக்கான ஏற்பாடுகளை கவனித்தேன்.பெருமைக்காக சொல்லவில்லை... அமெரிக்காவில் உள்ள என் வீடு, விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்கு உரிய எல்லாவிதமான வசதிகளும் கொண்டது. விருந்தினர் அறைகள், விதவிதமாய் சமைக்க சமையல்காரர்கள். படம் பார்க்க மினி திரையரங்கம். நீச்சல் குளம், பயணிக்க கார்கள் என, பல வசதிகள் கொண்டது, என் வீடு.சிவாஜி என்ற, உலகமே பிரமித்துப் பார்க்கும் ஒரு சாதனையாளர், முதல் முறையாக நம் வீட்டுக்கு வருகிறார் என்பது பெருமை அளித்தாலும், கூடுதலாக பதற்றமும் இருந்தது. இதய சிகிச்சைக்காக வருகிறார். அந்த சிகிச்சை நல்லபடியாக முடிந்து, உடல் நலத்துடன் சென்னை திரும்ப வேண்டும். அதனால், சிவாஜிக்காக வீட்டிலும், மருத்துவமனையிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.முதல் முறை சிவாஜி, அமெரிக்கா வந்தபோது, அவருடன் மனைவி கமலா அம்மா, மூத்த மகன் ராம்குமார் என, இரண்டு பேரும் வந்திருந்தனர்.அடுத்த முறை வந்தபோது, சிவாஜியின் சகோதரரான சண்முகத்தின் மகன், கிரி வந்திருந்தார். ஒரு முறை சிவாஜி, கமலா அம்மா மற்றும் மகன் பிரபுவுடன் வந்திருக்கிறார்.சிவாஜி குடும்பத்தினர் அமெரிக்கா வரப்போகும் நாள் தெரிந்ததும், அவர்களை வரவேற்க தயாராகி விட்டேன்.அமெரிக்காவில் இரண்டு வாரம் சிவாஜியும், அவருடன் வரும் குடும்பத்தினரும் தங்கி இருப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கச்சிதமாக திட்டமிட்டு செய்து முடித்தேன்.குறிப்பிட்ட தினத்தில், திட்டமிட்டபடி அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தனர், சிவாஜி குடும்பத்தினர்.விமான நிலையம் சென்று அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தோம். சிவாஜிக்கு வீட்டை சுற்றிக் காட்டினேன். அவருக்கு வீடு மிகவும் பிடித்திருந்தது.அன்று காலை அவருக்கு, தமிழ்நாட்டு வகை சிற்றுண்டி தயார் செய்திருந்தோம். அவரை சாப்பிட அழைத்தேன். சாப்பாட்டு மேஜை அருகில் வந்தவுடன் கொஞ்சம் தயங்கினார்.'எனக்கு இந்த மேஜை எல்லாம் சரிப்படாது. உங்க வீட்டு சமையலறையிலே ஒரு சின்ன டேபிள் இருக்கு பாரு, அதுலயே உட்கார்ந்து சாப்பிடுறேன்...' என்றார்.'டைனிங் டேபிள் நல்லா பெருசா இருக்கே. அதுல சவுகரியமா உட்கார்ந்து, சாப்பிடலாமே! எதுக்கு நீங்க சின்ன டேபிள்ல உட்கார்ந்து கஷ்டப்பட்டு சாப்பிடணும்?' என்றேன்.அவரோ, 'உங்க வீட்டுல அடுப்பு எங்கே இருக்கு? சமையலறையில் தானே? எனக்கு, கல்லுல இருந்து தோசையை எடுத்தால், அது சூடா, நேரா என் தட்டுக்கு வரணும்! நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்தால், சமையலறையில் இருந்து தோசையை எடுத்துக்கிட்டு வரும்போதே அது ஆறிடுமில்லையா! அதனால தான் சொல்றேன்.'சமையலறையில் இருக்குற டேபிள், சின்னதா இருந்தாலும், பரவாயில்லை! அதுலேயே உட்கார்ந்து நான் சாப்பிடறேன்...' என, சிரித்துக் கொண்டே விளக்கம் கொடுத்தார்.அவர் விரும்பியபடியே சமையலறையில் இருந்த, அந்த சின்ன டேபிளில் உட்கார்ந்து, சுடச்சுட தோசை சாப்பிட்டார்.'தோசை சூடா, நேரா தட்டுக்கு வரணும்...' என்ற கட்டளைப்படியே, அவர், ஒரு தோசையை சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில், சுடச்சுட அடுத்த தோசை, அவரது தட்டுக்குப் போகிற மாதிரி, சரியாக தோசை வார்த்துக் கொடுத்ததும், அவர் அதை ருசித்து, ரசித்து சாப்பிட்டது, இன்றும் என் மனத்திரையில் நிழலாடுகிறது.அடுத்த முறை, சிவாஜி எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, என் தாயாரும் அமெரிக்காவில் என் வீட்டில் இருந்தார். அப்போது, ஒருநாள் காலை சிற்றுண்டியின் போது, என் தாயார், சிவாஜியிடமே ஜோக்கடித்து வேடிக்கை செய்ததை, இன்று நினைத்தாலும் அடக்க முடியாத சிரிப்பு வரும்! — தொடரும்எஸ். சந்திரமவுலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !