உள்ளூர் செய்திகள்

நூல் பிடிச்ச நடராஜர்!

ஜூலை 12 - ஆனி உத்திரம்மயிலாடுதுறை அருகில், ஆனதாண்டபுரம் என்ற ஊர். இதன் இலக்கிய பெயர், ஆனந்த தாண்டவபுரம். கச்சிதமான அளவை, 'நுால் பிடிச்ச மாதிரி...' என்று சொல்வோம் இல்லையா? அப்படி, நுால் பிடித்துப் பார்த்தால், அதிசயமாய் காட்சி தரும் நடராஜர் சிலை, இங்குள்ள பஞ்சவடீஸ்வரர் கோவிலில் உள்ளது.ஆனந்த தாண்டவபுரத்தில் வசித்த, ஆனந்த முனிவர், பறக்கும் ஆற்றல் பெற்றவர். தினமும் ராமேஸ்வரம், சிதம்பரம் மற்றும் மகேந்திரகிரி ஆகிய தலங்களுக்கு சென்று சிவதரிசனம் செய்து, மாலைக்குள் சொந்த ஊர் திரும்பி விடுவார்.ஒருநாள் பெருமழை. இவரால் பறக்க முடியவில்லை. வழிபாடு தடைபட்டதால், உயிரை விட தீர்மானித்தார். அப்போது, சிவன், நடராஜராக வந்து அவரைத் தடுத்து, ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார். இதனால், இவ்வூர் ஆனந்த தாண்டவபுரம் ஆனது. அவர் பார்த்த வடிவில், நடராஜருக்கு சிலை வடிக்கப்பட்டது.இந்த சிலையின் முகத்தில் இருந்து, கீழ் நோக்கி ஒரு நுாலைப் பிடித்தால், அதன் இடது திருவடியைத் தொடும். அந்த திருவடி இருக்கும் இடம், சிலையின் சரிபாதி இடத்தில் உள்ளது. நடு மூக்கு நுனியில் இருந்து நுால் பிடித்தால், வலது, இடது பாதங்கள் மற்றும் அபய, வரத திருக்கரங்கள் ஒரே நேர்கோட்டிற்குள் அடங்குவது போல் செதுக்கப்பட்டுள்ளது. நடராஜருக்குரிய விழாக்களில், மார்கழி திருவாதிரைக்கு அடுத்து சிறப்பு பெறுவது, ஆனி உத்திரம். இந்த நாளில், இந்த நடராஜரை தரிசனம் செய்வது சிறந்த பலன் தரும்.இங்கு மற்றுமொரு விசேஷம்.புண்ணியவர்த்தினி என்ற பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவரது தந்தை மானக்கஞ்சாற நாயனாரை, பக்தர்கள் நன்றாகவே அறிவர். இவளுக்கு கலிக்காமர் என்ற சிவபக்தருடன் திருமணம் நிச்சயமானது. இவரும் நாயன்மார்களில் ஒருவர்.திருமணத்தன்று, இருவரையும் சோதிக்க, தபஸ்வியின் வடிவில் வந்தார், சிவன். அக்கால தபஸ்விகள், பெண்களின் கூந்தலால் ஆன, பஞ்சவடி என்ற பூணுால் அணிந்திருப்பர். அவரை வரவேற்ற, மானக்கஞ்சாறர், மணமகளை ஆசிர்வதிக்க சொன்னார். மணமகள், அவரது திருவடிகளில் பணிந்த போது, அவளது நீண்ட ஜடை தபஸ்வியின் கண்ணில் பட்டது.'ஆஹா... எனக்கு பஞ்சவடி தயாரிக்க, இதை எனக்கு தருவீரா?' என, மானக்கஞ்சாறரிடம் கேட்டார், தபஸ்வி.மகளுக்கு திருமணம் என்றும் பாராமல், ஜடையை அறுத்துக் கொடுத்து விட்டார், மானக்கஞ்சாறர்.சற்று நேரத்தில் வந்த மணமகன், 'திருமணத்துக்குப் பின், இதைக் கேட்டிருந்தால், இந்த தானத்தின் புண்ணியம் என்னை சேர்ந்திருக்குமே...' என்றார். இருவரின் பக்தியையும் மெச்சி, தன் சுயரூபம் காட்டினார், சிவன். கையில் கூந்தலுடன் உள்ள இவர், ஜடைநாதர் எனப்பட்டார். இவரது சன்னிதியில், புண்ணியவர்த்தினியின் சிலை, கூந்தல் இன்றி காட்சியளிக்கிறது. நாயன்மார்களும் இந்த சன்னிதியில் உள்ளனர்.மயிலாடுதுறையில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் ஆனதாண்டபுரம் உள்ளது. தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !