உள்ளூர் செய்திகள்

அன்னை!

துளசியின் திருமண செய்தி கேட்டு, அவளெதிரே நின்றிருந்த, சிவசாமி - மரிக்கொழுந்தின் வாரிசுகள் முகத்தில் கலவையான உணர்வுகளின் பிரவாகம். ''இந்த வயசுல இப்படி ஒரு ஆசையா? ச்சை வெட்கமா இல்லை உனக்கு. இதெல்லாம் கேட்டா ஊர் சிரிக்காதா? என் புருஷனுக்கு மட்டும் தெரிஞ்சதுன்னா, 'என்னடி குடும்பம் நீங்க...'ன்னு என்னை வெட்டிவிட கூட தயங்க மாட்டாரு,'' என்று தன், இரண்டாவது அக்காவான, துளசியிடம் கோபத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள், தங்கை கவுரி. ''நானும் தெரியாம தான் கேட்கிறேன், காலம் கடந்து, உனக்கு ஏன் புத்தி இப்படி போகுது? வயசான காலத்துல, ராமா கோவிந்தான்னு இருக்க வேண்டியது தானே!'' என்ற, இரண்டாவது தம்பி சுரேஷை, கசந்த முறுவலோடு பார்த்தாள், துளசி. ''இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? பெரியக்கா சொன்னப்பவும் நம்பலை. ஆனா, நீயே இதைப்பற்றி பேசணும்ன்னு வர சொன்னதை கேட்டுட்டு, என் மாமியார் வீட்டுல சிரிச்ச சிரிப்பை இந்த ஜென்மத்துல மறக்க முடியாது. உன்னால நாங்க அசிங்கப்பட்டு இருக்கோம். வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே, ஏதாவது பேசு, துளசி,'' என்றான், துளசியின் முதல் தம்பி, ரமேஷ். இருகரங்களையும் கட்டிக்கொண்டு, அனைவரின் பேச்சையும் கேட்ட, துளசி, ''நீ ஏன்க்கா அமைதியா இருக்க... உன் பங்குக்கு நீயும் பேசிடு. மொத்தமா கேட்டு முடிச்சுட்டு, பதில் சொல்றேன்,'' என்று சுவரில் சாய்ந்தபடி கண்ணீரோடு நின்றிருந்த, தன்னை போலவே முதிர்கன்னியான அக்கா, கனகாவிடம் சொன்னாள், துளசி. ''உனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்குதேன்னு சந்தோஷப்படுறதா, இல்லை அம்மா தவறின பிறகு எனக்குன்னு இருந்த ஒரே துணையான நீயும் இல்லாம என் காலம் தனியா கழிய போகுதேன்னு நினைச்சு அழறதான்னு தெரியல,'' என்றாள், கனகா. க வுரி பிறந்த சில ஆண்டுகளிலேயே, அப்பா சிவசாமி நோய்வாய்ப்பட்டு இறந்து போக, வெளியுலகம் அறியாத, அம்மா, படிப்பறிவு இல்லாத அக்கா, பள்ளிப்படிப்பில் இருந்த தங்கை, தம்பிகளை காப்பாற்ற பொறுப்பேற்று கொண்டாள், ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த, துளசி. தன், 19வது வயதில் குடும்ப பாரத்தை சுமக்க துவங்கியவளின் பயணம் ஓய்வே இல்லாமல், 35 ஆண்டுகள் கடந்து விட்டன. மூத்த அக்கா கனகா, 'திருமணமே வேண்டாம்...' என்று சொல்லி விட்டதில், தங்கை மற்றும் தம்பிகளை நன்கு படிக்க வைத்து, அவர்களை வேலையில் நிலைநிறுத்தவும், தனக்கென்று சேர்த்து வைத்த நகை மற்றும், சேமிப்புகளை கொண்டு, அவர்களது திருமணத்தையும் சிறப்பாக நடத்தினாள். கடமைகளை முடித்துவிட்டு நிமிர்ந்த போது, துளசிக்கு, 38 வயதாகி போனது. அரசு வேலையில் இருப்பவள் என்பதால், துளசியைத் தேடி வந்த வரன்கள் ஏராளம். அதையெல்லாம் குடும்பத்திற்காக மறுத்தவளிடம், 'உனக்கு என்ன, 24 வயசுன்னு நினைப்பா? 54 வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற...' என்ற, கவுரிக்கே முப்பது வயது வரை வரன்கள் அமையவில்லை. துளசி தன் சக்திக்கு மீறி, நகை, சீர்வரிசை அதிகமாக கொடுத்து தான் தங்கையை கரையேற்றினாள். ஆனால், அந்த நன்றி சிறிதும் இல்லாமல் தனக்கு மகள் பிறந்த சில ஆண்டுகளில் அக்காக்களுடனான பேச்சுவார்த்தையை மெல்ல குறைத்து, ஒரு கட்டத்தில் அவர்கள் உறவை துண்டித்து விட்டாள், கவுரி. ''ஏதாவது பேசு, துளசி. இப்படி அமைதியா நின்னு எங்களை அவமானப்படுத்த தான் கூப்பிட்டியா?'' என்று, ரமேஷ் சீற, கனகாவை பார்த்த துளசிக்கோ மனதில் சொல்லொண்ணா வலி. யாருமே அவளை பொறுப்பேற்காவிட்டால், தன்னை கட்டிக்கப்போற தென்னரசுவிற்கு, மறுப்பு சொல்லதான் வேண்டும். மெல்ல குரலை செருமியவள், ''அப்பா - அம்மாவை எடுத்து போட்டு, தங்கச்சி, தம்பிகளுக்கு கல்யாணம் பண்ணி, பிரசவம் பார்த்து, குழந்தைகளை வளர்த்ததுன்னு எல்லாமே செய்த நான், இதுவரை எனக்காக வாழவே இல்லை. ''இளம் வயசுல, நம்ம குடும்பம் முக்கியம்ன்னு இருந்துட்ட எனக்கு, இப்போ தேடி வந்த மனுஷனை மறுக்க முடியலை. அவர் யாரோ இல்ல. என் கூட, 20 வருஷம் ஒண்ணா வேலை செய்து, ஹெட்மாஸ்டரா இருந்தார், போன வாரம், 'ரிட்டையர்' ஆனவர். ''அவர் மனைவி தவறி மூணு வருஷமாகிடுச்சு. ஒரே மகனும், ஸ்காட்லாந்து நாட்டுல மனைவி, குழந்தைகளோடு, 'செட்டில்' ஆகிட்டதால தனிமையை கையாள முடியாம தவிக்கிறார். அவரோட, 'ரிட்டையர்மென்ட்' விழா முடிச்சு, வீட்ல கொண்டு விட்டுட்டு வந்தப்போ சம்மதம் கேட்டார். ''இதுவரை எனக்கு இப்படி ஒரு நினைப்பு வந்ததில்லை. ஆனா, ஒரு வாரமா அவரோட வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டு துாக்கத்தை கெடுக்குது. என்னை தாங்கி பிடிக்க தங்கை, தம்பிகள் இருக்காங்கங்கிற நம்பிக்கை கடந்த, 10 வருஷத்துல பொய்யா போன பிறகு, வாழ்க்கையோட இன்னொரு பக்கத்தையும் வாழ்ந்து பார்த்தா என்னன்னு மனசு கிடந்து தவிக்குது,'' என்ற தங்கையை பரிதவிப்போடு பார்த்தாள், கனகா. ''என்னக்கா பேசற? நாங்க பொய்யா போனோமா?'' என்றான், தம்பி ரமேஷ். அவனது வார்த்தையை பொருட்படுத்தாமல், ''இந்த வயசுல உனக்கு கல்யாண ஆசையான்னு யாரா இருந்தாலும் சிரிக்க தான் செய்வாங்க, எனக்கு புரியுது. ஆனா என்ன செய்ய? பாழும் மனசுக்கு இப்போ ஒரு துணை இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுதே. அதுதான் அவர்கிட்ட என் சம்மதத்தை சொல்லிட்டேன். ஒரு மணி நேரத்துல வந்திடுவார்.'' ''சம்மதிச்சுட்டியா... நீ போயிட்டா, அக்காவை யார் பார்த்துக்கிறது? அவ உலகம் தெரியாதவ. உனக்கு கொஞ்சமும் பாசமோ, இரக்கமோ இல்லையா?'' என்றான், ரமேஷ். ''ஏன்? எனக்கு மட்டும் தான் அவ அக்காவா... உங்களுக்கு இல்லையா? உங்களுக்கு நான் கல்யாணம் செய்தப்போ நாங்க ரெண்டு பேரும் எப்படி இருப்போம்ன்னு நீங்க யோசிச்சீங்களா? நான் கிளம்பின பிறகு, அக்காவை நீங்க பார்த்துக்கோங்க,'' என்றாள், துளசி. ''எங்களுக்கு குடும்பம் இருக்கு. என் பொண்டாட்டியும் வேலை பார்க்கிறா எங்களால எப்படி முடியும்? ஏட்டிக்கு போட்டியா பேசாம, டீச்சரா நடந்துக்கோ.'' ''டீச்சரா இருக்கிற நானும் ஒரு பெண்தான்னு முதல்ல நீங்க புரிஞ்சுக்கோங்க.'' ''வேண்டான்டி, துளசி. ஊருக்குள்ள தெரிஞ்சா அசிங்கம். கூட பிறந்தவங்க குடும்பத்திலேயும் உன்னால பிரச்னை வேண்டாம். இருக்கிற காலத்தை உனக்கு நான், எனக்கு நீன்னு கழிச்சுடலாம்,'' என்றாள், கெஞ்சலாக, கனகா. ''ஊர், உலகத்தை பற்றி எனக்கு கவலையில்லை, கனகா. உங்களோட முடிவு என்ன?'' ''செத்தாலும் நாங்க யாரும் ஒத்துக்க மாட்டோம். 54 வயசுல உனக்கு உடம்பு சுகம் தேவைப்படுதா? ச்சை இந்த கருமத்துக்காக எங்க வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது,'' என்று அமிலத்தை வாரி இறைத்தாள், கவுரி. தம்பிகள் ரமேஷ், சுரேஷ், மற்றும் அவர்கள் மனைவியர் அதை ஆமோதிப்பது போல நின்றிருக்க, கனகாவோ, ''சிவ, சிவா...'' என்று காதை பொத்திக் கொண்டாள். அதேவேளை, ''போதும் நிறுத்துங்க சின்னத்தை,'' என்றாள், ரமேஷின் மூத்த மகள், ஸ்ருதி. ''பெரியவங்க பேசற இடத்துல உனக்கு என்ன வேலை, ஸ்ருதி? அமைதியா இரு. இதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்,'' என்றாள், அவள் அம்மா, அருணா. ''அம்மா, நமக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த அத்தை, இனியும் அவங்களால நமக்கு சிக்கலோ, தொந்தரவோ இருந்திடக்கூடாதுன்னு தான் இப்ப அழைச்சு பேசிட்டிருக்காங்க. அவங்களை நாமளே புரிஞ்சுக்காட்டி எப்படி?'' என்று கூற, ''ஆமாம்மா அத்தையை புரிஞ்சுக்கோங்க,'' என்று, மற்ற வாரிசுகளும், ஸ்ருதியை வழி மொழிந்தனர். ''இதெல்லாம் உனக்கு புரியாது, ஸ்ருதி. போய் உன் குழந்தைகளை பாரு.'' என்றாள், அவள் அம்மா அருணா. ''ஒரு பெண்ணா, அத்தையோட உணர்வு எனக்கு புரியுது. உங்களுக்கு தான் புரியலை?'' என்றாள், ஸ்ருதி. ''இந்த வயசுல உடல் சுகத்துக்காக, அத்தை துணை தேடுறதா நா கூசாம சொல்றீங்களே... உங்களுக்கு மனசாட்சி இருக்கா, சின்னத்தை... அதுவும், 48 வயசுல கூட, மாமாவோட கையை விடாம கோர்த்துட்டு நடக்கிற உங்களுக்கு தெரியாதா, 'துணை' என்பதன் அர்த்தம் என்னன்னு?'' என்ற, ஸ்ருதியின் சாட்டையடி கேள்வியில், கவுரியின் முகம் விழுந்து விட்டது. ''ஏன்ம்மா... அன்னைக்கு எனக்கு கிட்னி, 'டொனேட்' பண்ண, அப்பா தயாரா இருந்தப்போ வேண்டாம்ன்னு சொல்லிட்டு, அத்தையை பண்ண சொன்னது நீ தானே! ஏன், இப்போ சொல்ற மாதிரி அன்னைக்கும், உங்க பொண்ணுக்கு எல்லாமே நீங்க பார்க்க வேண்டியது தானே? அத்தையை ஏன் கிட்னி, 'டொனேட்' பண்ண சொன்னீங்க?'' என்றதில், அருணாவின் முகம் மாறிப்போனது. ''அத்தை கல்யாணமாகாதவங்க, எல்லாரையும் கரை சேர்த்த பிறகு, அவங்க தயவு தேவையில்லை. இனி எக்கேடோ கெட்டு போகட்டும்ன்னு அன்னைக்கு நீ அப்பாகிட்ட பேசினதை நான் கேட்டேன். என் உயிரை காப்பாத்தின நன்றி கூடவா இல்லை?'' அப்போது, ''உள்ளே வரலாமா?'' என்ற தென்னரசுவை, துளசி தவிப்போடு பார்ப்பதை கண்ட இளைய தலைமுறையினர், ''வாங்க மாமா,'' என்றனர். ''மன்னிக்கணும். நான் முன்னாடியே வந்துட்டேன். ஆனா, நீங்கல்லாம் தீவிரமா பேசிட்டு இருந்ததால் அமைதியா நின்னு கேட்டுட்டு இருந்தேன். ''இந்த வயசுல பெருசா என்ன தேவை இருந்திட போகுது? நிச்சயம் என் மனைவியோட இடத்தை யாராலையும் நிரப்ப முடியாது. துளசியை நான் மணக்க கேட்டது, தனிமை துயர் போக்கும் துணையாக தான். இந்த விஷயத்துல என் மகனுக்கும் முழு சம்மதம். ''பல ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றியதில் எங்களுக்கிடையில் நல்ல நட்பு உண்டு. இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் மிகப்பெரிய கொடுமை. நான் மட்டுமில்லை, உங்களோட இரண்டு அத்தைகளுமே அதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. பெண் இல்லாத வீட்டுக்கும், நரகத்துக்கும் பெருசா வித்தியாசம் இல்லைம்மா. ''என் காலம் முடிய குறைஞ்சது பதினைஞ்சு வருஷமாகலாம். அதுவரை நரகத்துல இருந்து தப்பிக்க, என் பேச்சு துணைக்கு, சாப்பிட்டியான்னு கேட்க, முடியாதப்போ மடி தாங்க, உலக விஷயங்களை அலசன்னு ஒரு துணை,'' என்றவரை இடையிட்டு நிறுத்தினாள், கனகா. அவரிடம், ''என் தங்கச்சி நல்லா வாழ்வதை கண்குளிர பார்க்கணும். சீக்கிரமே நாள் பாருங்க ஸார்,'' என்றாள். 'அக்கா...' என்று நெகிழ்ச்சியோடு, கனகாவை கட்டிக்கொண்டாள், துளசி. - கி.கோபி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கவி
நவ 09, 2025 17:49

அருமையான கதை! அந்த மூத்த அக்கா கனகாவுக்கும் நல்ல வாழ்க்கை அமையும் வாய்ப்பு உள்ளது! சுயநலம் மிகுந்தவர்களை நன்றாக புரிந்து கொள்ள இது போல ஒரு விஷயம்! கதாசிரியரின் கருத்து நன்றாக உள்ளது...மேலும் தொடர வாழ்த்துக்கள்..


Rangarajan
நவ 09, 2025 16:45

வாவ் சூப்பரோ சூப்பர் சார் வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட கதை. வாழ்க வளர்க தொடரட்டும் உங்களுடைய பணி.