உள்ளூர் செய்திகள்

தீபாராதனா! (1)

காரிலிருந்து இறங்கியவுடன், திலகனின் கையை கோர்த்துக் கொண்டாள், தீபா. பிரதான சாலையிலிருந்து இடது பக்கம் பாதை பிரிந்தது. பெரிய முகப்பு வளைவு ஒன்று அலங்கரித்த பாதை. தார்ச்சாலை அங்கங்கே விரிசல் விட்டிருந்தது. பாதையின், இரண்டு பக்கமும் அடர்த்தி குறைந்த மரங்கள் காற்றில் கலகலத்தன. இருபுறமும் சிறு சிறு வீடுகள். சற்றுத் தொலைவு நடந்ததும், 'செருப்பை இங்க விடுங்கம்மா. அம்மனுக்கு பூ வாங்கிட்டுப் போங்க...' என, சில குரல்கள் அழைப்பு விடுத்தன. தொடுத்த பூச்செண்டுடன், 'அக்கா, அக்கா...' என, துரத்திக்கொண்டே வந்தாள், ஒரு சிறுமி. நின்று, சிறுமியிடம், ''என்ன விலை?'' என்றாள், தீபா. ''மொழம், 50 ரூபாக்கா. உங்களுக்காக, 45 ரூபா.'' ''மொத்தமா எவ்ளோ?'' சிறுமியின் கண்களில் திகைப்பு. ''மொத்தம், 20 மொழம் இருக்குக்கா.'' பர்ஸ் திறந்து, இரண்டு, 500 ரூபாய் தாளை கொடுத்து, மொத்தப் பூவையும் வாங்கிக் கொண்டாள், தீபா. சிறுமியின் கண்களில் அபார சந்தோஷம். பணத்தை விசிறிக் காட்டியபடி, தன் அம்மாவிடம் ஓடியது. ''தீபு, இது சின்னக் கோவில். ஒரே ஒரு சன்னிதி தான். இவ்ளோ பூ எதுக்கு?'' ''நான் சாமிக்காக வாங்கல, திலக். அந்த பொண்ணுக்காக வாங்கினேன்.'' ''உன்னை புரிஞ்சுக்கவே முடியல, தீபு. பெட்ரோல் போட்ட இடத்துல அரை லிட்டர் ஏமாத்தப் பாக்கறான்னு சண்டை போட்டே?'' ''உரிமைக்காக சண்டை போடறது வேற. உதவிக்காக அள்ளிக் குடுக்கறது வேற.'' கோவில் வாசல் நெருங்கியதும், செருப்பு விடும் இடத்தில், திலகன், ஷூக்களையும், தீபா, செருப்புகளையும் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தனர். அந்த தனியார் கோவிலில், முன்மாலை நேரத்தில் கூட்டம் இல்லை. பளிங்கு பதித்த சன்னிதியில், கை நீள உயரத்திற்கு தான் அம்மன் சிலை. ஆனாலும், அபார வசீகரம்! சன்னிதியில் யாருமில்லை. பூச்செண்டை சன்னிதி வாசலில் வைத்தாள், தீபா. தீபாவின் உள்ளங்கையை பற்றி, அந்த சின்னப் பிரகாரத்தை வலம் வந்தான், திலகன். கிண்ணத்திலிருந்து விரல் நுனியால் நாசூக்காக குங்குமம் தொட்டு, நெற்றியில் பட்டும், படாமலும் வைத்துக் கொண்டாள், தீபா. கோவில் வளாகத்தில் அந்த நெடிய மரம் நிழல் தந்தது. பூமியிலிருந்து புறப்பட்டு கையூன்றியிருந்த பெரிய வேரின் மீது உட்கார்ந்தான், திலகன். அவனை உரசினாற்போல் அருகில் உட்கார்ந்து முழங்கால்களைக் கட்டிக் கொண்டாள், தீபா. தீபாவை சற்று ஆழமாகப் பார்த்தான், திலகன். பளபளக்கும் கன்ன மேடுகள், கண்ணில் ஓடிய செவ்வரிகள், சிவந்த ஈறுகளில் வரிசை தப்பாத பற்கள். திருட்டுத்தனமாய் தொட்டால் விகசிக்கும் அவள் நாசி, வழுக்கி இறங்கும் கழுத்து. ''ஏய், என்ன, 'ஸ்கேன்' பண்ணிட்டிருக்க?'' ''உன்னை மாதிரியே அந்த அம்மன் இருக்கா... இல்ல, அம்மன் மாதிரியே நீ இருக்கியான்னு பாத்தேன்,'' என, கண்களைச் சிமிட்டியபடி கூறினான், திலகன். ''ஏய், அம்மன் எவ்ளோ அழகு! என்னைப் போய்,'' பெருமையும், வெட்கமுமாக சிணுங்கினாள், தீபா. ''நீ கண்ணாடியே பாக்க மாட்டியா? உன் கண்ணு, மூக்கு, நெத்தி, உதடு, கழுத்து...'' ''போதும் நிறுத்து, திலக். இது கோவில்.'' உதிர்ந்து உலர்ந்து போய் மொடமொடவென்று நொடிக்கிற இலைக் குப்பைகளை சற்று நேரம் இருவருமாக அர்த்தமின்றி நகர்த்தி கொண்டிருந்தனர். ''இன்டர்காலேஜ் போட்டில, 'மீட்' பண்ண போது, இவ்ளோ துாரம் வரும்ன்னு, நான் நெனைக்கவே இல்ல, தீபு.'' ''இவ்ளோ துாரம் மட்டுமில்ல. இதைத் தாண்டியும் போகப் போகுது, திலக். அப்பாகிட்ட இன்னிக்கு சொல்லிடலாம்ன்னு இருக்கேன்.'' ''அவர் சராசரி ஆம்பிளையா நடந்துக்கிட்டா... ஜாதி, அந்தஸ்து, கவுரவம்ன்னு பேசினா?'' ''உனக்கு எங்கப்பாவைப் பத்தி தெரியாது, திலக். அவர் பொதுவா எனக்கு, 'நோ' சொன்னதேயில்ல.'' ''சொல்லிட்டா?'' ''சொல்லிட்டா என்ன செய்வே, திலக்?'' ''வாழ்நாள் பூரா பிரம்மச்சாரியாவே இருப்பேன். வேற எந்த பொண்ணையும் நெனைச்சுக் கூட பார்க்க மாட்டேன். ராத்திரி வேளைல உன் நெனப்புல சாப்பிடாமப் படுப்பேன். நாம முதன்முதல்ல, 'லவ்' சொல்லிக்கிட்ட இடத்துக்கு, தினம் ஒரு தடவையாவது போவேன். 'தீபா ட்ரஸ்ட்'ன்னு ஆரம்பிச்சு வருஷம், நாலு, 'லவ் மேரேஜா'வது, என் செலவுல நடத்தி வைப்பேன்.'' ''யப்பா! பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்துன்னு, கவிஞர் வார்த்தை தான் ஞாபகம் வருது.'' ''இல்ல, தீபு. கோவில்ல சொல்றேன். நான் சொன்னதெல்லாம் சத்தியம்.'' அவன் கையை அழுத்திக் கொடுத்தாள், தீபா. ''அதுக்கெல்லாம் வாய்ப்பே வராது. எங்கப்பாகிட்ட எப்படி சம்மதம் வாங்கணும்ன்னு எனக்கு தெரியும். அவருதே, 'லவ் மேரேஜ்' தான். உங்க வீட்ல நீ சொல்லிட்டியா?'' ''எங்கம்மாவுக்கு ஒரு பக்கம் பயம். ஒரு பக்கம் சந்தோஷம். ஆனா, மொதல்ல படிப்பை முடிடான்னு சொன்னாங்க.'' ''சரி, கையை எடு.'' ''ம்?'' ''அதென்ன புரியாத மாதிரி, 'ம்?' எடு கையை. யாராவது பாக்கப் போறாங்க.'' ''அர்ச்சகர், 5:00 மணிக்கு தான் வருவாரு. அதுக்கப்புறம் தான் கூட்டம் வரும். இப்ப யாரும் இருக்க மாட்டாங்கன்னு தான் கூட்டிட்டே வந்தேன். இங்க உன்னையும், என்னையும் விட்டா அந்த காக்காவும், மைனாவும் தான். அதுங்க பாத்தா பாத்திட்டுப் போகட்டுமே.'' ''ப்ளீஸ், வேண்டாம், திலக். எனக்கு குறுகுறுன்னு இருக்கு.'' ''கையை சும்மாத்தானே வச்சிருக்கேன்? ஏதாவது தப்பு பண்றேனா?'' சற்றே திரும்பி, அவன் கையை வெடுக்கென்று பிடுங்கிப் போட்டாள், தீபா. புடவையை சரி செய்து கொண்டாள். ''போலாம், வா,'' என, எழுந்து விட்டாள். ''உன்னப் புரிஞ்சுக்க முடியல, தீபு. அன்னிக்கு தியேட்டர்ல நீயே என் கைய எடுத்து நெஞ்சுல அணைச்சுக்கிட்ட. இப்ப இவ்ளோ, 'சென்சிட்டிவ்'வா இருக்கே.'' ''இருட்டையும், வெளிச்சத்தையும் சரியா புரிஞ்சுக்க தெரியாதவன், என்னையும் புரிஞ்சுக்காம இருக்கறது நல்லது தான்,'' என, சிரித்தாள், தீபா. காலணிகளை அணிந்து, காரை நெருங்கினர். சாவியை அவனிடம் நீட்டினாள், தீபா. ''ஆசைப்பட்டியே, நீயே ஓட்டு.'' ''வேணாம், உன்னத் தொடக் கூடாதுன்னா, உன் காரையும் தொடல...'' என்றான், திலகன் சற்று விறைப்பாக. திலகனின் கையை மெல்லப் பிரித்து, கார் சாவியை வைத்தாள். ''இப்படி புசுக்கு புசுக்குனு கோவம் வந்தா, உன் கூட நான் எப்படிடா குடித்தனம் நடத்துவேன்?'' வீம்புக்காகச் சொன்னானே தவிர, அந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும், திலகன் முகம் மலர்ந்து போனது. ''கல்யாணத்துக்கப்புறம் இதை நானே ஓட்டலாமில்ல?'' ''உனக்கு எதுக்கு பழைய காரு? மாப்பிள்ளைக்கு புத்தம் புதுசா ஒண்ணு வாங்கித்தர மாட்டாரா எங்கப்பா? எம்.பி.ஏ., படிச்ச மாப்பிள்ளைகிட்ட கம்பெனியவே துாக்கிக் குடுத்துவாரு. எல்லாம் நீ நாளைக்கு அவரை எப்படி, 'இம்ப்ரஸ்' பண்ணப் போறேன்றதுல தான் இருக்கு.'' ''வரேன், மிஸ்டர் ஞானசேகரன். உங்க பொண்ணையே, 'கவர்' பண்ணவன், உங்களை, 'கவர்' பண்ண மாட்டேனா?'' என, காரை வேகமாக செலுத்த துவங்கினான், திலகன். வி மானம் தரையைத் தொட்டபோது, கூடுதலாகவே குலுங்கியது. ஒன்றிரண்டு பேர் மிரண்டு அலறினர். காற்றின் விசை அது, இது என, ஏதோ காரணம் சொல்லி, மன்னிப்பு கேட்டார், விமானி. 180 பயணிகளில் சற்றும் கலவரமின்றி, அசிரத்தையாக ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தார், ஞானசேகரன். இயந்திர கதியில் விமானத்திலிருந்து இறங்கி, அது இறக்கி விட்ட இடத்திலிருந்து படியேறி, படியிறங்கி, 'கன்வேயர் பெல்ட்'டில், தன் பெட்டியை எடுத்து, அதே இயந்திர கதியில், விமான நிலையத்திலிருந்து வெளிப்பட்டார், ஞானசேகரன். எதிர் வெயிலில் அவர் முகம் சற்று வெளிறியிருந்ததை காண முடிந்தது. காத்திருந்த ஓட்டுனர், அவரிடமிருந்து பெட்டிகளை பறித்து, துாக்கி கொண்டு வேகமாக கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு விரைந்தார். ஞானசேகரன் காரில் ஏறியதும், ''ஆபீஸா, வீடா சார்?'' என்றார், ஓட்டுனர். ''என்னை ஆபீஸ்ல விட்டுட்டு, லக்கேஜை வீட்ல கொண்டு போய் குடுத்துரு,'' என்றார், ஞானசேகரன். கார் விரைந்தது. மொபைல் போனை எடுத்து, பெயர்களை நகர்த்தி, வருண் என்ற ஒரு குறிப்பிட்ட பெயரை தேர்ந்தெடுத்தார், ஞானசேகரன். அதற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அடுத்து, பத்மனாபன் என்ற பெயரைத் தட்டினார். எதிர்முனையில் உடனே எடுக்கப்பட்டு, ''பெங்களூர்லேர்ந்து வந்துட்டீங்களா?'' என்ற கனமான குரல் கேட்டது. அந்த குரலிலேயே, பத்மனாபனின் வட்ட முகமும், நெற்றிச் சூரணமும், ஞானசேகரனால் பார்க்க முடிந்தாற் போலிருந்தது. ''இப்ப தான் வந்தேன். எல்லாம், 'ரெடி'யா?'' ஞானசேகரன் குரலில் கொஞ்சம் சோர்வு இருந்தது. ''நீங்க சொன்னபடியே எல்லாம், 'ரெடி' பண்ணியாச்சு. இதோட, ரெண்டு நாள்ல மூணு தடவை திருத்தி எழுதியாச்சு. இன்னும் வேற ஏதாவது மாத்தணுமா? இல்ல, இதான் பைனலா?'' ''இதான் பைனல்.'' ''எதுக்கும் ஒரு தடவை சரிபார்த்துட்டு, நீங்க கையெழுத்து போட வேண்டியது தான். வீட்டுக்கு வந்துடவா?'' ''வேணாம், வேணாம். இப்ப நான் வீட்டுக்குப் போகல. கம்பெனிக்குப் போயிட்டிருக்கேன்.'' ''அப்ப அங்க வந்துடவா?'' ''நோ, நோ. நானே சாயந்திரம் உங்க ஆபீஸ்க்கு வர்றேன். நான் உங்களை, 'மீட்' பண்ணப் போற விஷயம் ஆபீஸ்லயோ, வீட்லயோ தெரிய வேண்டாம்,'' என, குரலைச் சற்றுத் தாழ்த்தி சொன்னார், ஞானசேகரன். கா ர் அடையாறு தொட்டு, கடற்கரை சாலையில் விரைந்தது. பாரிமுனையில், 'தீபா ஷிப்பிங் ஏஜன்சீஸ்' என, பித்தளை எழுத்துகள் அறிவித்த கட்டடத்தில் கார் நுழைந்தது. 'லிப்ட்' ஏறி, இரண்டாவது மாடியில் வெளிப்பட்டார். கண்ணாடிக் கதவு திறந்து, 2,000 சதுர அடி அலுவலகத்தில் நுழைந்தார். எழுந்து மரியாதை செய்தவர்களுக்கு, பதில் வணக்கம் சொல்லியபடி, 'மேனேஜிங் டைரக்டர்' என, அறிவித்த தன் அறைக்குள் நுழைந்தார். உதவியாளரை அழைத்தார். ''என்னை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். வீட்லேர்ந்து வந்தாலே ஒழிய எந்த போனும், 'கனெக்ட்' பண்ண வேணாம்.'' ''யெஸ் சார்!'' தன் அறை கதவை தாளிட்டு கொண்டார். இனி உள்ளேயிருந்து வெளியேவோ, வெளியிலிருந்து உள்ளேயோ எந்த ஒலியும் கசியாது. நாற்காலியில் சரிந்து அமர்ந்தார். எதிர் சுவரில் மாட்டியிருந்த கப்பல் படங்களைப் பார்த்தார். 30 ஆண்டுகளாக அவர் அங்குலம் அங்குலமாக எழுப்பிய பிசினஸ் இது. ஆனால்... நினைப்பே நெஞ்சை அடைத்தது. இனிமேல் அடக்க முடியாது என, தோன்றியது. மேஜையில் குப்புறத் தலை கவிழ்ந்து குலுங்கி அழலானார். — தொடரும் சுபா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !