உள்ளூர் செய்திகள்

தேடினேன் கிடைத்தது!

மொபைல் போனில் இன்னும் சலிக்காமல் தேடிக் கொண்டு தான் இருந்தாள், தேவகி. கிடைத்தப்பாடில்லை; கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் மீதமிருந்தது. ''உங்க அம்மா எப்ப பாரு போனும் கையுமா உட்காந்துட்டு என்னத்த பாக்குறா?'' தேவகியின் கணவர், முருகேசன் பேச்சில் கொஞ்சம் எரிச்சல் தெரிந்தது.''யாருக்குத் தெரியும். கிட்டப் போனாலே, போனை மறைச்சிக்கிறாங்க. யார் கையிலேயும் கிடைச்சிடாத மாதிரி மொபைலை எச்சரிக்கையா பாதுகாக்கறாங்க, டாடி,'' என்றான், சுகாஷ்.''சரிடா பார்க்கட்டும் தப்பில்ல. நான் அவக்கிட்ட ஏதாவது கேட்கப் போனா கோவம் வந்துடும். கண்டதை பார்த்து ஏதாவது பிரச்னையில மாட்டாம இருந்தா சரி.''இப்போதெல்லாம் வீட்டில் யார் மீதும் தேவகியின் கவனம் இல்லை. கடமைக்கு சமைப்பாள். சாப்பிட உட்கார்ந்தால், பரிமாறுவாள். சாப்பிடாமல் எழுந்துப் போனாலும் ஏன் என்று கேட்பதில்லை. மொபைல் போன் கைக்கு வரும் முன், விதவிதமாய் சமைத்து வைத்து, மகன் மற்றும் கணவனை சாப்பிட வரச் சொல்லி, கெஞ்சுவாள். 'வீட்டுக்கு உழைச்சுப் போடுற மனுஷன், ஒரு தோசை, ரெண்டு சப்பாத்தி, மூணு இட்லின்னு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்? இன்னொரு சப்பாத்தி போட்டுக்கோங்க...' என்று கெஞ்சும் மனைவியை, மொபைல், தன் அடிமை ஆக்கிக் கொண்டிருந்தது. சொந்தத்தில் ஒரு விசேஷம் என்றால், முதல் ஆளாக நிற்கும் தேவகியை, உறவுகளை விட்டு தள்ளி நிற்க வைத்துவிட்டது. துாங்கும் போதும் காதில், 'ஹெட்போனை' மாட்டி, பாடல்களோடு தன் நினைவுகளை ஓட விட்டு, கனவு காணும் பழக்கத்தை தேவகிக்கு பழக்கப்படுத்தியது, மொபைல் போன்.''அம்மா, நான் கொஞ்சம் வெளியே கிளம்புறேன். வர்றதுக்கு சாயந்திரம் ஆகும்,'' என்று மொபைலை பார்த்துக் கொண்டிருந்த தேவகியை தட்டினான், சுகாஷ். 'சரி...' என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு, அறைக்குள் ஒதுங்கிக் கொண்ட அம்மாவை தொந்தரவு செய்ய தோன்றாமல் கனத்த மனதோடு வெளியேறினான், சுகாஷ்.மொபைல் போனிடம் இருந்து, அவளை எப்படி விடுவிப்பது என்பது, யாருக்கும் தெரியாத கேள்வி.முகநுாலில் வந்த, 'ப்ரண்ட்ஸ் ரிக்வெஸ்ட்'டில், சுந்தரேசன் என்ற பெயருடன், அந்த முகத்தைப் பார்த்த உடனே, ஒரு கணம் உடல் சிலிர்த்தது. 'அக்சப்ட்' செய்திருந்தாள். மெசேஜரில், 'ஹாய்' என, இதய படத்துடன் குறுஞ்செய்தி வந்தது.'தேவகி நீ தானா. நீயே தானா? நான் காண்பது கனவில்லையே நிஜம் தானே...' கண்ணீர் படத்துடன் குறுஞ்செய்தி.'நானே தான் சுந்தரம். உங்களை முகநுாலில் தேடித் தேடி சலிச்சிட்டேன் தெரியுமா?' கண்ணீருடன் குறுஞ்செய்தி அனுப்பினாள்.அடுத்தடுத்த நாட்களில், இருவரும் போனில் பேச ஆரம்பித்தனர்...''நிஜ வாழ்க்கையில உன்னைத் தேடித் தேடி வந்து, கால் கடுக்க நின்னு, உன்னை நான் ரசிச்ச காலம் போய், இப்ப போன்ல நீ என்னை தேடுறியா? வினோதமா இருக்கு, தேவகி!''''என்னப் பண்றது... காலத்தின் கோலம்.''''காலத்து மேல பழியப் போட்டு, அப்படி ஒதுங்கிட முடியுமா, தேவகி?''''வேற என்ன செய்வது... கேள்வி கேட்காதவங்க மேல் தானே பழியைப் போட முடியும்.''''உண்மை தான். சரி, நீ எங்க இருக்க, எப்படி இருக்க. எத்தனை குழந்தைங்க. என்ன பண்றாங்க? முக்கியமா நம்மை பிரிச்ச உன்னை பெத்தவங்க நல்லா இருக்காங்களா, தேவகி? என் வாழ்க்கையே நீ தான்னு நினைச்சி வாழ்ந்த என்னோட சந்தோஷத்தை பறிச்சவங்க, இப்ப சந்தோஷமா இருக்காங்களா?''''நம்மள பத்தி பேசலாம், சுந்தரம். மத்தவங்கப் பத்தி வேண்டாமே?''''நான் கேட்டது உனக்கு புடிக்கலயா தேவகி?''''இனி, அவங்களால நமக்கு ஆகப் போறது ஒண்ணுமில்ல, சுந்தரம். நம்ம வாழ்க்கை போச்சு. இனியாவது அவங்கள மறந்துடுவோம்?''''நீ சொன்னா சரியா தான் இருக்கும். தேவகி, 15 ஆண்டுகளாச்சு உன்னை பார்த்து. உன்னை ஒரு முறையாவது பார்த்துப் பேசணும்ன்னு எவ்வளவு ஏங்குனேன் தெரியுமா?''''நீங்க சொல்றத சொல்ல என்னால முடியில, சுந்தரம். நேரமாச்சு வீட்ல வேலை இருக்கு நாளைக்குப் பேசுவோமா?''''உன் போட்டோ அனுப்பு, தேவகி. உன்னைப் பார்க்கணும் ப்ளீஸ்,'' என்றான், சுந்தரம். லேசாக தலைநரைத்து, வாடிப் போன முகத்தை போட்டோ எடுத்து அனுப்ப விருப்பமில்லை. காதலன் மனதில் அப்போது இருந்த வசீகரத்தோடு, அப்படியே வாழத் தோன்றியது.தன் போட்டோவை அனுப்பியிருந்தான், சுந்தரம். வயதான தோற்றம், வாழ்க்கை போராட்டங்களை முகம் தெரியப்படுத்தியது? சிரிப்பு மட்டும் அவனை காட்டிக் கொடுத்தது.போனை, 'ஆப்' செய்தாள். மனம் குதுாகலித்தது போனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். சுந்தரத்துக்கு திருமணம் முடிந்து, இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை என்பதை தெரிந்துக் கொண்டாள். அடுத்த நாள்- ''ஹாய், தேவகி வந்துட்டயா?''''வேலைக்குப் போகலையா, சுந்தர்?''''இல்லை, தேவகி. உன் கூட பேசணும்ங்கற ஆசையில நான், வேலைக்குப் போகலை, தேவகி. உன்னை ஒரு முறை நேரில் பார்க்கணும்.''''வீட்டுல ஏதாவது விழா வந்தால் சொல்றேன். குடும்பத்தோட வாங்க. புள்ளைங்க ஸ்கூல் போய்ட்டாங்களா. காலையில என்ன டிபன் சாப்பிட்டாங்க, சுந்தர்?''''எனக்கெப்படி தெரியும், தேவகி. உன்னோட பேச ஆரம்பித்ததில் இருந்து, நான் யார் கூடயும் அதிகம் பேசறதில்ல. வேலைக்குப் போறதில்ல. எப்போதும் அறைக்குள் அடைஞ்சு கிடக்குறேன். எப்ப நீ, குறுஞ்செய்தி அனுப்புவேன்னு காத்துட்டு இருக்கேன், தேவகி.''கல்லுாரி காலங்களில் ஆசை ஆசையாய் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பால் திருமணம் செய்துக் கொள்ளாமல் போனது, துரதிருஷ்டம். தேவகியை கைப்பிடித்த, முருகேசன் சராசரி ஆணாகத் தான் இருந்தான். மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமை அனுபவித்து, எதையும் கண்டுக் கொள்ளாத கணவனிடம் ஏச்சையும், பேச்சையும் வாங்கி, சில நேரம், சுந்தரத்தை மறந்து, பல நேரம் அவனை நினைவுப்படுத்தி அவளை கொண்டு சென்ற காலம், கையில் மொபைல்போனைக் கொடுத்து, சுந்தரத்தை தேடச் சொன்னது. காலம் செல்லச் செல்ல கணவன், நல்லவனாக மாறினாலும் அவள் மனதளவில் விலகியே நின்றாள்.லொக், லொக்கென்ற இருமல் சத்தம் ஓயாமல் கேட்டது. அறையிலிருந்து வெளியே வந்தான், சுந்தரம்.''யார் இப்படி இருமறது?''''நான் தான், டாடி. ரொம்ப இருமல் வருது. அம்மா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயும் இருமல் நிற்கல, டாடி,'' என்றாள், இருமிக் கொண்டே, மகள்.''ஆமாங்க இருமல் அதிகமா தான் இருக்கு. நீங்க ஆபீஸ் வேலையா இருந்ததால தான் உங்கள கூப்பிடல.'ஓர்க் ப்ரம் ஹோம் என்று நினைத்துக் கொண்டாளோ...' என, நினைத்துக் கொண்டான்.''தேவகி, பாப்பாக்கு உடம்பு சரியில்லை. அதைக் கூட கவனிக்காம இருந்துட்டேன். ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய்ட்டு வந்து, உன் கூட பேசறேன். பாவம் என்ன ஆனதோ குழந்தைக்கு? அதைக் கூட கவனிக்காம உன்னோட பேசறதுலேயே இருந்துட்டேன், தேவகி. நாளைக்கு பேசறேன்,'' என்று கூறி, மொபைலை, 'ஆப்' செய்தான். சுந்தரம் சொன்னது மனதுக்குள் ஒலித்தப்படி இருந்தது.''நெட் கனெக்ஷன் முடிஞ்சதா தேவகி?'' முருகேசன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.''இல்லையே போட்டு ஒரு வாரம் தானே ஆச்சு... ஏன் கேட்கறீங்க?''''இல்ல, எங்களோடு பேசாம, போன்ல பாட்டு கேட்டுக்கிட்டு, வீடியோ பார்த்துட்டு இருப்பே. இப்ப, 'ஆப்' பண்ணி வெச்சிருக்கிறதால கேட்டேன். இப்பயெல்லாம் சாப்பாடு கூட நீ போட்டுத் தர்றதே இல்லை. போன் கையில வந்ததுல இருந்து, நீ குடும்பத்தையே மறந்துட்ட தெரியுமா.''''அப்பா சொன்னது உண்மை தாம்மா,'' என்றான், சுகாஷ்.''யாரும் என்னுடன் பேசுவதில்லை. உங்ககிட்ட பேச ஆரம்பிச்சாலே சண்டை தான் வருது. அதனால், போனோட பேசிட்டு இருக்கேன். பசங்க பெரியவங்க ஆனப் பின்னாடி, அவங்களுக்கு நான் தேவையில்லை.''சமைச்சு வெச்சுட்டு, நான் வந்து கெஞ்சணும். அவங்ககிட்ட திட்டு வாங்கிட்டு தான், அவங்கள சாப்பிட வைக்கவே முடியுது. உங்களுக்கு எப்போதும் ஹோட்டல் சாப்பாடு போதும். சொந்தம், பந்தம்ன்னு பேசப் போனா, என் மேலயே குத்தம் வரும்.''அக்கம், பக்கம் பேச நின்னா, அதைப் பேசினியா, இதைப் பேசினியான்னு சந்தேகப்பட்டு என் கிட்டயே சண்டைக்கு வருவீங்க. போதும்யா உங்களால நான் பட்டப்பாடு, அதனால தான் ஒதுங்கிக் கிட்டேன்,'' என்று பளிச்சென்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள், தேவகி.அவள் சொன்ன உண்மை, சுளீர் என்று உரைத்தது. தங்களுக்காக உழைக்கும் அவளை அலட்சியப்படுத்தி, தங்கள் இறுமாப்பை காட்டியது தவறு தான் என புரிந்தது.'தன் மகளுக்கு உடம்பு சரியில்லாததைக் கூட, கண்டுக்கொள்ளாத அளவுக்கு, என் பேச்சு, சுந்தரத்தை மாற்றி விட்டதா. தேவை தானா இந்த உறவு...' என, யோசனையில் இருந்தாள், தேவகி.சுந்தரமும் அதே யோசனையில் இருந்தான். 'என்ன மன்னிச்சிடு, தேவகி. என் நினைவோட எப்போதும் இருப்ப, தேவகி...' என, 'ப்ரண்ட்ஸ் லிஸ்டில்' இருந்த, தேவகியின் எண்ணை, 'ப்ளாக்' செய்ய தேடினான். அதற்கு முன், தேவகி, 'ப்ளாக்' செய்து விட்டுப் போயிருந்தாள்.சுதாராணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !