உள்ளூர் செய்திகள்

விண்ணையும் தொடுவேன்! (21)

முன்கதைச் சுருக்கம்: தன்னால் தான், புகழேந்திக்கு இவ்வளவு கஷ்டம் என்று வருந்தினாள், கயல்விழி. பால்கனியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருந்த கயல்விழியிடம் வந்து, நடந்ததை எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றும், தன் வேலையை ராஜினாமா செய்யப் போவதாகவும் கூறினான், புகழேந்தி. அப்போது, அங்கு வரும் சமையற்கார பெரியவர், இருவருக்கும் சாப்பாடு பரிமாறினார். மறுநாள் சென்னை திரும்புவதாக அவரிடம் கூறினான், புகழேந்தி. தானும், அவனுடனே வந்து விடுவதாக கூறினார், பெரியவர். மறுநாள் காலை, அரசு பங்களாவை காலி செய்தான், புகழேந்தி. அலுவலக பொறுப்புகளை தனக்கு அடுத்த நிலையில் இருந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்று சென்னைக்கு கிளம்பினான். முதலில் தன் அப்பாவுக்கு போன் செய்து, சென்னை வருவதாக கூறியதோடு, பிரபாகருக்கும் தகவல் தெரிவித்தான். சென்னை வந்ததும், கயல்விழியையும், சமையற்கார பெரியவரையும் வீட்டில் இறக்கி விட்டு, தலைமை செயலரை பார்க்க புறப்பட்டான், புகழேந்தி. 'அவசரப்பட்டு வேலையை ராஜினாமா செய்திருக்க வேண்டாம். வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்றிருக்கலாமே...' என்றார், தலைமை செயலர். இனி, அரசு பணியில் தன்னால் நீடிக்கவே முடியாது எனக் கூறி, தன் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டான், புகழேந்தி. ''சா ர், என்னை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், வேறு யார் சார் புரிந்து கொள்வர்?'' சட்டென்று புன்னகைத்தார், தலைமைச் செயலர். அவர் எழுந்து, அவனெதிரில் வந்து நின்றார். சற்றும் எதிர்பாராத விதமாக, அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். ''ரிலாக்ஸ், புகழேந்தி. நீங்கள் இப்போது அரசு அதிகாரியில்லை. அரசு உத்தியோகஸ்தர் இல்லை. ஆகவே, என் அன்பைப் பரிமாறிக் கொள்ள, நான் சங்கடப்பட வேண்டியதில்லை.'' ''சா... ர்...'' என, உணர்ச்சி பூர்வமானான், புகழேந்தி. நெகிழ்ந்து போனான். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ''நீங்கள் இவ்வளவு உணர்ச்சிப் பூர்வமானவர் என்பது, எனக்கு தெரியாது,'' என்றார், தலைமை செயலர். சட்டென்று தன் நிலை உணர்ந்து அடக்கி கொண்டான், புகழேந்தி. மீண்டும் தன் இடத்தில் போய் அமர்ந்த தலைமைச் செயலர், வழக்கமான மென்மைக் குரலில் தொடர்ந்தார்... ''வேறு எங்கு வேலைக்கு போவதாக உத்தேசம்?'' ''எங்கும் போகிற உத்தேசமில்லை, சார்.'' ''பின்னே?'' ''ஐ.ஏ.எஸ்., அகாடமி ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். குடிமைப் பயிற்சி பெற வசதியற்றவர்களுக்கும், கிராமத்திலிருந்து படிக்க ஆசைப்படுபவர்களையும், ஐ.ஏ.எஸ்., ஆக்க வேண்டும் என்பது, என் எண்ணம், சார்.'' ''எக்ஸலன்ட். ஒரு காலத்தில் அது என் கனவாகவே இருந்தது. அதே கனவும், எண்ணமும் உங்களுக்கு இருப்பது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.'' முகம் பளீரிடப் புன்னகைத்தான், புகழேந்தி. ''வெற்றி பெற வாழ்த்துகள். தனிப்பட்ட முறையில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன். அரசு சம்பந்தப்பட்ட உதவி என்றால், சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட உதவி எப்போதும் கிடைக்கும்.'' ''மிக்க நன்றி சார்,'' என்றவன், தயங்கி நிற்பது கண்டு, ''சொல்லுங்கள்...'' என்றார். ''முதல்வரை சந்திக்க வேண்டுமே, சார்.'' ''அவரது தனிச் செயலர், பானுசந்திரனை போய் பாருங்கள்.'' ''வரேன், சார்.'' ''சென்று, வென்று வாருங்கள்!'' அவரது பளீரென்ற புன்னகை அவனை உற்சாகப்படுத்தியது. அ ன்றே தன்னை முதல்வர் சந்திப்பார் என, எதிர்பார்க்கவில்லை, புகழேந்தி. உட்காரும்படி முதல்வர் இரண்டு முறை கூறிய பின்பும், அவன் உட்காரவில்லை. ''என்ன விஷயமாக என்னை பார்க்க வேண்டும், என்றீர்கள்?'' முதல்வரின் உதவியாளர் அனைத்தையும் விவரித்தார். பொறுமையாக கேட்ட முதல்வர், மிகவும் பெருந்தன்மையாக நடந்த விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டபோது, பதறினான், புகழேந்தி. ''என்ன இது, நீங்கள் போய்...'' ''என் அமைச்சரவையை சேர்ந்த யார் தப்பு செய்தாலும், அதற்கு நானும் பதில் சொல்ல கடமைப்பட்டவன்.'' பிரமித்துப் போனான், புகழேந்தி. ''வேறு எங்காவது மாற்றித் தரச் சொல்லட்டுமா?'' ''வேண்டாம்ங்க.'' ''வேறு துறை எதிலாவது?'' ''இல்லீங்க. நான் இனி உத்தியோகம் பார்ப்பதாக இல்லை. ஐ.ஏ.எஸ்., அகாடமி ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.'' ''வாழ்த்துகள். அரசின் நியாயமான உதவி தங்களுக்கு கிடைக்கும். உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகளை உருவாக்கப் போகிறீர்கள் என, சொல்லுங்கள்.'' ''நல்ல இளைய சமுதாயம் உருவாக வேண்டும் என்பது, நீங்கள் ஆசைப்பட்டது தான்!'' ''ஆசை என்னுடையது, உருவாக்கம் உங்களுடையது,'' என, சிரித்து, கைகுலுக்கி விடை கொடுத்தார், முதல்வர். வீ ட்டை அடைந்ததும் ஓட்டுனருக்கு விடை கொடுத்து அனுப்பினான், புகழேந்தி. அதன் பின்னரும் போகாமல் அவன் தயங்கி நிற்பதை பார்த்து, ''என்னப்பா?'' என்றான். ''ஐயா, ஒரு விண்ணப்பங்க.'' ''என்னப்பா?'' ''பெரியவர் மாதிரி நானும், உங்க கூடவே இருந்துடறேங்க.'' ''உனக்கு குடும்பம் இருக்குப்பா!'' ''அதனால் என்னங்க. மாசம் ஒருமுறை ஊருக்கு போய் பார்த்துட்டு வந்திடுவேங்க.'' ''அரசாங்க சம்பளம் என்னால் குடுக்க முடியாதேப்பா.'' ''பணமாங்க முக்கியம்? உங்களை மாதிரி எங்களுக்கு கிடைக்க மாட்டாங்க.'' ''ஆனா, வாழறதுக்கு பணம் முக்கியம்ப்பா.'' ''சம்பாதிச்சுக்கலாம் ஐயா. என் சம்சாரமும் ஊர்ல வேலை செய்றாங்க. அம்மாவும் ரெண்டு வீட்ல சமையல் வேலை செய்றாங்க. அதனால, பிரச்னை இல்லீங்க. நான் உங்க கூடவே இருந்துடறேங்க.'' ஒரு விநாடி மவுனித்தான், புகழேந்தி. 'இந்த மாதிரி அன்புக்கெல்லாம் என்ன பிரதி உபகாரம் செய்ய முடியும்? என்னை சுற்றி எத்தனை நல்ல மனிதர்கள்! சுபாங்கியும், அமைச்சரும் மட்டும் தானா உலகம்? மான்களும், மயில்களும் உலவுகிற காட்டில் சிங்கமும், புலியும் இருப்பது இயல்பு தானே!' ''என்ன சார் யோசிக்கிறீங்க?'' ''கூப்பிடறேம்ப்பா.'' ''இத்தனை சொன்னதுக்கப்புறமும் தயங்குறீங்களே!'' ''தயக்கமில்லப்பா. முதல்ல நான், 'செட்டில்' ஆக வேண்டாமா?'' ''சரிங்க, சார். ஒரு வாரம் பார்ப்பேன். கூப்பிடலேன்னா, நானே வந்துடுவேன்.'' ''பயமுறுத்தாதேப்பா,'' என, சிரித்தான், புகழேந்தி. ''பயப்படுற ஆளா சார் நீங்க?'' என, ஓட்டுனரும் சிரித்தபடி அகன்றான். உள்ளே வந்தபோது அம்மாவும், கயல்விழியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின்னால் தோட்டத்திலிருந்து சமையற்காரப் பெரியவர் ஓடி வந்தார். ''ஐயா, சாப்பிட வாங்க. தட்டு போட்டு, 'ரெடி'யா வச்சிருக்கேன்.'' ''நீங்கள்லாம் சாப்பிட்டாச்சாம்மா?'' ''ஆச்சு, புகழ். பெரியவரைத் தவிர, நாங்க மூணு பேரும் சாப்பிட்டு விட்டோம். நீ சாப்பிட்ட பின் தான் சாப்பிடுவேன்னு, அவரு அடம் பிடிக்குறாரு.'' ''அதாம்மா அவர் வழக்கம்,'' என, கை கழுவி சாப்பிட அமர்ந்தான். பக்கத்தில் அம்மா அமர, எதிரில் நின்று கொண்டிருந்தாள், கயல்விழி. ''எதற்கு நிற்கிறாய்? உட்கார், கயல். நான், இப்போது கலெக்டர் இல்லை. மரியாதை காட்ட. சாதாரண மனிதன் தான்!'' ''மரியாதை பதவிக்கு இல்லை, சார். மனிதத்தனத்திற்கு!'' ''என்ன புகழ், இந்த பொண்ணு உன்னை விட நல்லாப் பேசுது,'' என, புன்சிரிப்போடு சொன்னார், அவன் அம்மா. ''அம்மாவையும் கவர்ந்திட்டியா, கயல்?'' என்றபோது, மொபைல் போன் ஒலித்தது. ''சொல்லு பிரபா?'' ''தலைமை செயலரை பார்த்து பேசிட்டியா? இப்ப எங்க இருக்கே?'' ''சாப்பிட்டுகிட்டு இருக்கேன், பிரபா.'' ''சாப்பிட்டு முடி. நேர்ல வரேன். பேசுவோம்!'' ''சரி,'' என, மொபைல் போனை அணைத்து விட்டு, அம்மாவை ஏறிட்டான். ''அப்பா எங்கம்மா?'' ''துாங்கிட்டிருக் காருப்பா.'' ''நீ துாங்கலியாம்மா?'' ''இல்லப்பா... இந்த பொண்ணுகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். நல்லவங்களைத் தேடித்தாம்ப்பா எல்லாக் கஷ்டமும் வருது.'' ''அதுக்கென்னம்மா, செய்றது? கஷ்டத்துக்கும் நல்லவங்களைத்தான் பிடிக்குது போல.'' கயல்விழி லேசாக கண்களை மூடுவதை கண்டு, ''மிகவும் களைத்துத் தெரிகிறாய். போய் கொஞ்சம், 'ரெஸ்ட்' எடு, கயல்,'' என்றான், புகழேந்தி. ''போம்மா... போய் படுத்துக் கொள்,'' என, அம்மா சொன்னதும், கயல்விழி அங்கிருந்து சென்றாள். அவன் சாப்பிட்டு முடித்ததும், பெரியவரும் பாத்திரங்களை எடுத்து, பின் பக்கம் சென்றதும், அம்மா தன்னை ஒருவித எதிர்பார்ப்புடன் ஏறிடுவதை கண்டான். ''என்னம்மா?'' ''அநியாயத்துக்கு நீ நல்லவனா இருக்க. இந்த பொண்ணு, கயலும் ரொம்ப நல்லப் பொண்ணா இருக்கு. ஆனா, உங்க ரெண்டு பேர் வாழ்க்கையில மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? எதுக்காக ஆண்டவன் இந்த மாதிரியெல்லாம் செய்யுறாரோ?'' ''அவருக்கு இதெல்லாம் விளையாட்டும்மா. பொழுது போகணுமில்ல? அதனால, சீட்டுக் கட்டை கலைச்சுப் போடுற மாதிரி மனுஷங்களை பிரிச்சு போட்டு, மாற்றி, மாற்றி வச்சு வேடிக்கை பார்க்குறாரு.'' ''யாரு வேடிக்கை பார்க்குறாங்க, புகழ்?'' என்றபடி உள்ளே நுழைந்தான், பிரபாகர். ''வாப்பா... சாப்பிடுப்பா,'' என்றாள், அம்மா வாஞ்சையுடன். ''ஆச்சும்மா. சூடா ஒரு கப் டீ மட்டும் குடுங்க.'' ''ரெண்டு டீ,'' என, புகழேந்தி இடையிற் புகுந்ததும், ''நீங்க உட்காருங்கம்மா. நான் கொண்டு வரேன்,'' என்ற பெரியவரை பார்த்து ஆச்சரியப்பட்டான், பிரபாகர். ''நீங்களும் வந்திருக்கீங்களா, பெரியவரே...'' ''அவரு, நிரந்தரமா கூடவே வந்திட்டாரு.'' ''யாருக்கு உன்னை விட்டுப் பிரிய மனசு வரும், புகழ்!'' ''அதான் வந்திருச்சே, ஒருத்திக்கு. முதல் முதலா வீட்டைத் தேடி வந்து என்னவெல்லாம் சொன்னா? இன்னிக்கு, நியூஸ் பேப்பர்லயும், 'டிவி'யிலும் பரபரப்பான செய்தியா ஓடும்படி செய்திட்டா. இருக்குற இடம் தெரியாம அமைதியா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். ஆமை புகுந்த மாதிரி புகுந்து, ஊரே சிரிக்கும்படி செய்திட்டா,'' எனக் கூறி கண்கலங்கினாள், அம்மா. ''அம்மா,'' என்றான், புகழ். ''நீ என்னை பேச வேணாம்ன்னு தடுக்குற. ஊரைத் தடுக்க முடியுமாப்பா உன்னால்? உங்கப்பா மாதிரி நீ எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு அமைதியா இருக்குற. என்னால் முடியலப்பா... ''உள்ளுக்குள்ள பொங்கிப் பொங்கி வருது. உன் வாழ்க்கை இப்படி சிக்கலா, கஷ்டமானதா மாறிப் போகும்ன்னு நினைக்கவே இல்லப்பா...'' என, கரகரவென கண்ணீர் வடித்தாள், அந்த அம்மாள். எழுந்து அம்மாவின் அருகில் போய், மெல்ல அணைத்துக் கொண்டான். ''கொஞ்சம் அமைதியா இரும்மா. யார் வாழ்க்கையிலதாம்மா கஷ்டமில்ல.'' ''இருக்கும்ப்பா, எல்லார் வாழ்க்கையிலும் கஷ்டம் இருக்கும். ஆனா, இப்படி நடு வீதிக்கு வராது. 'டிவி'யில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டி, அலறாது. பேப்பர், பேப்பரா படத்தோட வராது. குடும்பப் பொண்ணுன்னா கொஞ்சம் பொறுமை வேணும். நிதானம் வேணும். உன்னை அவ்வளவு பிடிச்சிருக்குதுன்னு வீடு தேடி வந்தாளே!'' ''விடும்மா. அவுங்க குணம் அப்படி.'' ''பசுத்தோல் போர்த்திக்கிட்டு வந்த புலியின் கதையாய் ஆயிடுச்சுப்பா. நாம் ஏமாந்து போயிட்டோம்ப்பா.'' ''என்ன செய்யிறதம்மா. நம்புற குணம் நம்முடையது.'' ''இதோ, இந்த பொண்ணு வந்திருக்குதே. படிப்பில்லையா, அழகில்லையா, என்ன இல்ல! எப்படிப்பட்ட கொடுமையைத் தாங்கிக்கிட்டு எவ்வளவு நிதானமா, அமைதியா இருக்குது. இந்த மாதிரிப் பொண்ணு வந்து, உனக்கு வாய்ச்சிருக்கக் கூடாதா?'' ''அம்மா எந்திரிங்க. போய் கொஞ்ச நேரம் படுங்க. நான் பிரபா கிட்ட பேசிட்டு வரேன்.'' அம்மாவை கைத்தாங்கலாக பற்றி அழைத்து போய், படுக்க வைத்துவிட்டு வந்தான். ''வா பிரபா... மொட்டை மாடிக்கு போய் பேசலாம்.'' இருவரும் படியேறினர். — தொடரும் இந்துமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !