உள்ளூர் செய்திகள்

வாக்கிங் - டாக்கிங்!

''என்ன மீனா, உன் மருமகள் ரொம்ப சமத்தா... ரொம்ப புகழறியே!''''ஆமாம், பர்வதம். அவ ரொம்ப சமத்து மட்டுமில்லை, ரொம்ப சாது, ரொம்ப பொறுமை. எனக்கு அவளை ரொம்பவே பிடிக்கும். மருமகள்னா இவளைப் போல இருக்கணும்.''என்ன சொன்னாலும், பேசினாலும் கண்டுக்க மாட்டா. எதிலும் தலையிட மாட்டா, எனக்கு ஒரு வேலையும் கொடுக்க மாட்டா. அவ உண்டு, அவ வேலை உண்டுன்னு இருப்பா... நாங்க, 'ப்ரீ' தான்.''''என்ன சொல்றே நீ. அது போதுமே,'' என்றாள், இன்னொரு தோழி.''அட, திருஷ்டி பட்டுட போகுது, மீனா. யாரிடமும் சொல்லாதே. ஆமா, என் வீட்டிலும் இருக்காளே மருமகள்ன்னு ஒருத்தி. ஒரே லொட லொடா. ''எப்ப பாரு பேச்சு... 'அம்மா, அப்பா'ன்னு கூப்பிட்டு, எங்களுக்கு ஏதாவது வேலை வெச்சுடுவா. அதுமட்டுமல்ல கொஞ்சம் கூட, 'டீசென்சி'யே கிடையாது. 'அம்மா, 'ஸ்ட்ராங்கா' காபி கொடுங்க...' என, என்னிடம் கேட்பா.''அப்புறம், 'அப்பா கடையிலிருந்து வரும் போது, வயிற்று வலிக்கு இந்த மாத்திரை வாங்கி வாங்கப்பா...' என மருந்து சீட்டு, என் வீட்டுக்காரரிடம் கொடுப்பா. சில சமயம், 'சானிடரி பேட்'டும் வாங்கி வரச் சொல்லிடுவா. இவரும், 'சரிம்மா கொடு...' என வாங்கி வந்து கொடுப்பார்.''ஐயோ, அது மட்டுமா... 'ஏன் உம்முன்னு இருக்கீங்க... அப்பாவுக்கும், உங்களுக்கும் ஏதாவது சண்டையா?' என, ஒருநாள் கேட்டாள்,'' என்றாள், பர்வதம்.''அப்படியா? ரொம்ப மோசம். 'இன்டீசென்ட்' உன் மருமகள். என் மருமகள் அப்படி இல்லைப்பா. எங்களை, 'ஆன்ட்டீ -- அங்கிள்'ன்னு தான், 'டீசென்டா' கூப்பிடுவா.'' ''மாமியாரிடம் எப்படி நடந்துக்கணும், அவர்களின், 'ப்ரைவசி'யில் மூக்கை நுழைக்கக் கூடாதுன்னு கூடவா தெரியாது. ரொம்ப மோசம்,'' என, இந்த பேச்சு நடுவில் மூக்கை நுழைத்தாள், தோழி ஒருவள்.மீனா, பர்வதம் உட்பட, 60 வயதை கடந்த, நான்கு பெண்மணிகள் பார்க்கில், 'வாக்' செய்தபடி இப்படிதான் பேசியபடி செல்வர்.பெஞ்சில் கொஞ்ச நேரம், 'ரெஸ்ட்' எடுக்கலாம் என, அமர்ந்தனர். திரும்ப ஆரம்பித்தாள், பர்வதம்...''இதைக் கேளு, மீனா. போன மாசம் என் பெண், மாப்பிள்ளை மற்றும் சம்பந்தி எல்லாரும், கோபியிலுள்ள அவங்க குலதெய்வம் கோவிலுக்கு போவதற்காக, எங்கள் வீட்டில் தங்கினர்.''என் மருமக, என் பெண்ணிடம், 'என்ன பிரீத்தி கல்யாணம் ஆகி, ரெண்டு வருஷம் ஆச்சு, ஏன் குழந்தை உண்டாகலை? நான் ஒரு டாக்டரை சொல்றேன். கைராசி அவர். உடனே போய் அந்த டாக்டரை பாரு...' என, 'அட்வைஸ்' வேறு பண்றா.''என் பொண்ணு முகம், ஒரு மாதிரி ஆயிடுச்சு. நானே என் பெண்ணிடம் அதைப்பற்றி எதுவுமே பேசுவதில்லை, கேட்பதில்லை. இவ யாரு அதிகப்பிரசங்கி. யார்கிட்ட எது பேசணும் என்ற விவஸ்தை கூடவா ஒரு பெண்ணுக்கு இருக்காது,'' என, பொருமி தள்ளி விட்டாள், பர்வதம்.''விடு, விடு. நீ, ரொம்ப இடம் கொடுக்காதே,'' என, தன் பங்குக்கு கூறினாள், ஒருத்தி.''நீ என்ன தான் இழுத்து போட்டு அவளுக்கு செஞ்சாலும், அவளுக்கு நீ, மாமியார் தான்; அவள் உனக்கு மருமகள் தான். நீ, அவளுக்கு அம்மா ஆக முடியாது தெரிஞ்சுக்கோ,'' என, ஏத்தி விட்டாள், மற்றொரு தோழி.கோபம் தலைக்கேறியது. கடுகடுவென்று ஆனாள், பர்வதம்.''சரி வரட்டுமா. நாளை பார்க்கில் சந்திக்கலாம்,'' என, கிளம்ப தயாரானாள், மீனா.''நாளைக்கு ஞாயிற்று கிழமை ஆயிற்றே. 'வாக்' செய்ய வருவியா, மீனா?''''நான் காத்தாலே, 'வாக்' கிளம்பிடுவேன்பா. ஞாயிற்று கிழமை, தன் இஷ்டப்படி பிள்ளைகளுக்கு, 'பர்கர், பீட்ஸா, பாஸ்தா'ன்னு, 'ஆர்டர்' பண்ணி வாங்கி தருவாள், மருமகள்.''அப்படியே எங்க இருவருக்கும் தோசை வார்த்து, 'ஹாட் பேக்'கில் வைத்துவிடு என்று சொல்லிடுவேன். மாலையில் அவர்கள் அனைவரும் அவளோட, அம்மா - அப்பாவை பார்க்க அல்லது பார்க், பீச்சுன்னு கிளம்பிடுவாங்க.'' ''நீ, பரவாயில்லை கொடுத்து வெச்சவ. எனக்கு ஞாயிற்று கிழமையும் வேலை தான். 'பாட்டிகிட்டே உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க, செய்து தருவாங்க. பாட்டி செய்வதைத் தான் சாப்பிடணும்...' என, என்னிடம் அவர்களை விட்டு விடுவா, என் மருமகள்.''தினமும் சமையல் மற்றும் வேலை என, செஞ்சு, ஓஞ்சு போறது. ஞாயிற்றுக்கிழமையும் வேலை; ஓய்வே கிடையாது. 'எனக்கு பாட்டி தான் டிபன், சாப்பாடு செஞ்சு தரணும், தாத்தா கதை சொல்லணும், புத்தகத்துக்கு எல்லாம் அட்டை போடணும்'ன்னு சொல்வாங்க, பேரப்பிள்ளைகள். ''சாயங்காலம், இவர் தான் பேரனை, டிரம்ஸ் கிளாசுக்கு ஸ்கூட்டரில் அழைத்து போகணும். பேத்திக்கு நான் தான் தலை வாரி விடணும், ஸ்லோகம் சொல்லித் தரணும். இப்படி எனக்கும், அவருக்கும் ஏக வேலை,'' என அலுத்தப்படி, ''சரிப்பா நான் நாளை, 'வாக்' வரல. நீங்க போயிட்டு வாங்க,'' என கூறி வீடு வந்தாள், பர்வதம்.வீடு அமைதியாக இருந்தது. பிள்ளையும், மருமகளும், குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு, 'ஷாப்பிங்' சென்றிருந்தனர்.''ஏன் பர்வதம் சோகமாக இருக்கே,'' என, சமையலுக்கு காய்கறிகளை நறுக்கியபடி சமாதானமாக கேட்டார், மூர்த்தி.அவரிடம், பார்க்கில் பேசிய எல்லாவற்றையும் பொரிந்து தள்ளிவிட்டாள், பர்வதம்.''மெதுவா பேசு, பர்வதம். உன் பிள்ளையும், மருமகளும் அப்போதே கடைவீதிக்கு புறப்பட்டனர். அவர்கள் வந்துவிடுவர், காதில் விழப் போகிறது,'' என்றார்.''நம் இருவருக்கும் தீராத வீட்டு வேலை. நாம வாங்கி கொண்டு வந்த வரம் அப்படி. நம்மிடம் தான் பணம் இருக்கே, வாங்க நாம தனியா போயிடலாம். கோவில், குளம், 'டூர்' என, ஜாலியா இருக்கலாம்,'' என்றாள், பர்வதம்.''பர்வதம், ஏன், இன்னைக்கு இவ்வளவு அலுப்பான, கோபமான வார்த்தைகள். உட்காரும்மா,'' என சொல்லி, மெதுவாக ஆரம்பித்தார், மூர்த்தி...''நீ, அந்த, மீனா சொல்வதைக் கேட்டு ரொம்ப புலம்புறே, பர்வதம். ஆனா, அவள் கணவர் என்னிடம் என்ன சொல்றார் தெரியுமா? நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சார். பேரப் பிள்ளைகளுடன் விளையாடுகிறீர்கள், பேசுகிறீர்கள், அது ரொம்ப பெரிய கொடுப்பினை. ''உங்களையும், உங்கள் மனைவியையும் மிக சுறுசுறுப்பாக நிம்மதியாக வைத்துக் கொண்டிருப்பது, உங்கள் மருமகள் தான். ஆனால், என் மருமகள், எங்களிடம் சகஜமாக பேசுவதில்லை. குழந்தைகளை எங்களுடன் பழக விடுவதில்லை.''மாமியார் - மாமனாரை, அந்நியராகத் தான் பார்க்கிறாள். ஒரு ஒட்டுதல் இல்லை; ஒரு ஈடுபாடு இல்லை. குழந்தைகள் இருவரையும் எங்களுடன் ஒட்ட விடுவதில்லை. அவர்கள் எங்களை பாட்டி, தாத்தா என, கூப்பிட்டு கேட்க ஆசை.''ஆனா, என் மருமகள், தமிழ் பேச, உறவு முறை சொல்ல, உறவை வளர்க்க என, எதையுமே அவர்களுக்கு பழக்கவில்லை. எல்லாரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறோம். ஆனால், தனித்தனி தீவாக.''பல சமயம் மருமகள், 'ஆர்டர்' செய்த, அமேசான் பாக்கெட்டுகள் நிறைய வரும். எங்களுக்கு தெரிய வேண்டாம் என, உடனே, பாக்கெட்டுகளை அவர்கள் அறைக்கு எடுத்துப் போய் விடுவாள், என் பேத்தி.''நாங்கள் இருவரும் எதையும் தடை போடுபவர்கள் இல்லையே. வாங்கிய பொருட்களை, துணிகளை பார்க்க, என் மனைவிக்கு ஆசை. ஆனால், ஒரே வீட்டில் இப்படி பட்டும் படாமல் இருப்பது, எங்கள் இருவருக்கும் மன வருத்தம்.''என் வீட்டில், எங்களுடன் தான் மருமகள் அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவள் பெற்றோர் இங்கு வந்தால், பேச்சு, சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. எங்களைப் பற்றி அவள் பெற்றோரிடம் ஏகத்திற்கு, 'கம்ப்ளைன்ட்' செய்வாள் என நினைக்கிறேன்.''என் சம்பந்தி கேலியாக, குத்தலாக சில சமயம் என்னிடம் பேசுவதிலிருந்து தெரிந்தது. எங்க பேரன், பேத்தியும் அந்த தாத்தா பாட்டியுடன் தான் ஒட்டுதல். அவர்களிடம் தான் இழைவதாக, என்னிடம் நிறைய சொல்லி இருக்கிறார், மீனாவின் கணவர்.'' என, கூறி முடித்த மூர்த்தி, தொடர்ந்தார்...''நான் இதுவரை அவர் சொன்னதை, யாரிடமும் சொன்னதில்லை. ஏன் உன்னிடமும் தான். எப்போது நீ, உன் தோழி மீனாவின் பேச்சை கேட்டு, நம் தங்கமான மருமகளுடன் ஒப்பிட்டு பேசியதால், சொல்ல வேண்டியதாயிற்று.''நம் பேரக் குழந்தைகள், நம் குல வாரிசுகள். நம்முடன் ஒட்டுதலாக இல்லாமல் இருப்பது சரியா, சொல்? நம் மருமகள் அப்படியா?''நமக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கிறாள். நம் கலாசாரம், உணவு முறை, நம் தாய்மொழி தெரியணும், பேசணும் என, நம் பேரன் - பேத்திகளை நம்முடன் ஒட்ட விடுகிறாள். நம்மை அவளின் அம்மா, அப்பாவாக நினைப்பதால் தான், உரிமையுடன் கடையிலிருந்து பொருட்களை வாங்கி வரச் சொல்கிறாள்.''நீ, செய்யும் சமையலை புகழ்ந்து, குழந்தைகளுக்கும் உன் கைப்பக்குவம் ருசியை அறிமுகப்படுத்துகிறாள். எங்கு போனாலும் சொல்லிட்டு போகிறாள். நம்மை ஒதுக்கி வைக்கலையே. ஏன், பர்வதம் நீ, இதெல்லாம், 'பாசிட்டிவ்' ஆக நினைக்கலையா?''நம் வீட்டு மருமகளுக்கு, அவள் பெற்றுக் கொடுத்த, நம் குல வாரிசுகளுக்கு செய்வதை வேலையாக நினைக்கிறாயா? ''நமக்கு வயதானால், தனிமையும், பணமும் அலுத்துப் போகும், பர்வதம். பாசத்தையும், உறவையும் தேடி மனசு அலையும். அதை புரிஞ்சுக்கோ. நம் மருமகள், நம் பெண்ணின் மாமியார், மாமனாரிடம் உரிமையுடன் அழகாக பேசி, உறவை வளர்த்தது நல்லது தானே.''நம் மருமகளின் சகஜத்தை பார்த்து தானே, அவர்களும் நம் பெண்ணை அங்கு புகழ்கின்றனர். நம்மை ஒரு படி அதிகமாக உயர்த்தி மதிப்பிடுவதும், நம் வீட்டு மருமகள் உரிமையுடன் நடந்துக் கொள்வதால் தானே?'' என, மூர்த்தி பேசப் பேச, தெளிவானாள், பர்வதம்.மூர்த்தி பேசிக் கொண்டிருக்கும் போது, நான்கு பேரும், 'ஷாப்பிங்' முடித்து வந்துவிட்டனர்.'பாட்டி...' என, ஓடி வந்து, குழந்தைகள் இருவரும் அணைத்துக் கொண்டனர்.''என் செல்லங்களா,'' என, பேரன் - பேத்தியை கட்டி அணைத்தாள், பர்வதம்.''தாத்தா நீங்க கண்ணை மூடிக் கொள்ளுங்க,'' என்று, பேத்தி கூறியதும், கண்ணை மூடிக்கொண்டார், மூர்த்தி.பாட்டியின் காதில் கிசுகிசுப்பாக, ''பாட்டி இன்னைக்கு தாத்தாவின் பிறந்தநாள் இல்லையா? அதுக்காக தான், 'ஷாப்பிங்' போயிட்டு, 'சஸ்பென்ஸா' தாத்தாவுக்கு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கிறோம். நீயே, உன் கையால் தாத்தாவுக்கு கொடு பாட்டி,'' என, கொடுத்தாள், பேத்தி; வெட்கத்துடன் சந்தோஷமாய் அதை வாங்கி மூர்த்திக்கு கொடுத்தாள், பர்வதம்.''பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அப்பா. நீங்க உடனே போய் இந்த சட்டையும், பேன்ட்டும் போட்டுட்டு வாங்க. உங்களுக்கு பிடிச்சது, 'ப்ளூ கலர்'ன்னு எனக்கு தெரியும்பா. அது தான் வாங்கி வந்தேன். நல்லா இருக்காப்பா?'' என்றான், மூர்த்தியின் மகன்.''அம்மா வாங்க, வந்து அப்பா கூட நில்லுங்க. நாங்க எல்லாரும் உங்களுக்கு நமஸ்காரம் பண்ணுகிறோம், ஆசீர்வாதம் பண்ணுங்க. அம்மா இந்த ஸ்வீட்டை, அப்பாவுக்கு ஊட்டுங்க. அம்மா, 'எக்லெஸ் கேக்' தான் உங்களுக்கு பிடிக்கும்ன்னு, 'ஆர்டர்' பண்ணினேன். ஹாப்பி பர்த்டேப்பா,'' என்றாள், மருமகள்.மருமகளின், 'லொட லொட' பேச்சு, இன்று, பர்வதத்திற்கு கலகலப்பாக தெரிந்தது. ஓரக்கண்ணால் மனைவியை பார்த்து புன்னகைத்தார், மூர்த்தி.'அட வீண் பேச்சு, வேண்டாத எண்ணத்தால், இன்று இவரின் பிறந்தநாளை நானே மறந்தேனே. ஆனா, என் மருமகள் ஞாபகமாய் பரிசு, ஸ்வீட், கேக் வாங்கி வந்திருக்காளே...' என, நினைத்தபடி, மருமகளை கட்டி அணைத்து, நெட்டி முறித்தாள், பர்வதம்.ராதா நரசிம்மன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !