உள்ளூர் செய்திகள்

உயர்வு நம் கையில்!

''அசோக் சார், சுந்தர் சார் உங்களை, மகாலிங்கம் சார் கூப்பிட்டாரு,'' என, 'ஆபீஸ் பாய்' சந்துரு, டீ 'பிரேக்'கின் போது வந்து சொன்னதும் அதிர்ந்து போனான், அசோக். ''என்ன விஷயம்?'' என்றான். ''தெரியலை. உங்களை கூப்பிட்டு வர சொன்னார், மகாலிங்கம் சார், அவரை போய் பாருங்க,'' என்று, சொல்லிய சந்துரு போய் விட, பக்கத்தில் இருந்த என்னிடம், ''எதுக்காக கூப்பிட்டிருப்பாரு சுந்தர்?'' என்று கேட்டான், அசோக். ''எனக்கு மட்டும் என்னப்பா தெரியும்? வா போய் கேட்போம்,'' என்றான், சுந்தர். டீயை வேகமாக குடித்து முடித்து இருவரும் அலுவலகம், சென்றனர். மகாலிங்கம் கூப்பிடுகிறார் என்றால், அசோக் பயப்பட காரணம் இருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் அலுவலகம், 'குக்கர், மிக்ஸி, ஸ்டவ்' என, வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும், மிகவும் புகழ் வாய்ந்த, 'கம்பெனி!' பொருட்கள் தயாரானதும் குடோனுக்கு வந்துவிடும். இந்தியாவில் உள்ள எல்லா பகுதிகளுக்கும், 'இன்வாய்ஸ்'சில் உள்ள இடங்களுக்கு சூப்பர்வைசரான இவர்கள், அப்பொருட்களை அனுப்ப வேண்டும். மகாலிங்கம் தான் தலைமை பதவியில் இருக்கிறார். 'சூப்பர்வைசர்'கள் அவரின் கீழ் பணியாற்றுகின்றனர். அவர், 'இன்வாய்ஸ்' செய்து கொடுக்கும் பொருட்களை, 'லோடிங் பார்ட்டி'களை வைத்து, அனுப்ப வேண்டியது இவர்கள், வேலை. மகாலிங்கத்துக்கு, 48 வயதிருக்கும். கம்பெனியின் நிரந்தர தொழிலாளி. முக்கியமாக கம்பெனி ஜி.எம்.,முக்கு ரொம்பவுமே நெருக்கம். அதனாலேயே அவர் சொல்வதே அங்கு வேதம். அவருக்கு கீழ் இருக்கும், சூப்பர்வைசர்கள் அதிகபட்சம், ஐந்து ஆண்டுகளே அங்கு இருக்க முடியும். அவர்கள் இருக்க மாட்டார்கள் என்றில்லை. மகாலிங்கம் இருக்க விட மாட்டார். நான் சேர்ந்து, இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. எனக்கு வேலை கற்று கொடுத்ததே, அசோக் தான். நான் வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே, அசோக் சொன்னான்... 'பாருங்க, சுந்தர். இங்க ரொம்ப கவனமா இருக்கணும். இங்க, மகாலிங்கம் தன்னை மீறி யாரையும் வேலை செய்யவோ ரொம்ப நாள் இங்க இருக்கவோ விடமாட்டார். அவர்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...' என்றான். ம காலிங்கத்தின் அறை வந்துவிட உள்ளே நுழைந்தோம். ''சார், நீங்க வரச் சொன்னதா, சந்துரு சொன்னாரு,'' என்றான், அசோக். சிஸ்டத்தில் இருந்து நிமிர்ந்தார், மகாலிங்கம். போட்டிருந்த கண்ணாடியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு, ''நேத்து தர்மபுரி சந்தோஷ் 'டிரேடர்ஸ்'க்கு, அஞ்சு லிட்டர் 'ஸ்வச்ச் குக்கர்' அனுப்பினது யாரு?'' என்று கேட்டார். 'ஸ்வச்ச்' என்பது குக்கரின் ஒரு வகை. மூன்று லிட்டர், ஐந்து லிட்டர், பத்து, பதினைந்து, இருபது லிட்டர் வரை இருக்கிறது. ''நம்ம, கிருஷ்ணன் தான் சார்,'' என்றான், அசோக். அசோக்கையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் கொஞ்ச நேரம், மகாலிங்கம். ஏதோ பிரச்னையாகி இருக்கிறது என்பது எங்கள் இருவருக்கும் புரிந்தது. ''அசோக் உன்னை தானே ஏத்தி அனுப்ப சொன்னேன். அப்புறம் ஏன், கிருஷ்ணன் ஏத்தி விட்டான்?'' என, சற்று கோபமாக வந்தது அவரிடமிருந்து வார்த்தைகள். ''நம்ம கோயம்புத்துார் 'பிரான்ஞ்சு'க்கு அவசரமா, 500 'மிக்சி' அனுப்பி விட சொல்லி நீங்கதானே சார், 'இன்வாய்ஸ்' கொடுத்தீங்க? அந்த நேரத்தில, கிருஷ்ணன் 'ப்ரீயா' இருந்தான். அதனால, அவனை கூப்பிட்டு தர்மபுரி பார்ட்டிக்கு ஏத்தி விடச் சொன்னேன்,'' என்றான், அசோக். ''அதை நீ எங்கிட்ட சொல்லியிருக்கணுமா இல்லையா? பத்து பாக்ஸ் அதிகமா போயிருக்கு. அஞ்சு லிட்டர் குக்கருக்கு பதிலா, பத்து லிட்டர் குக்கர் பத்து பாக்ஸ் போயிருக்கு. 30 ஆயிரம் ரூபா 'லாஸ்' நமக்கு. தர்மபுரில இருந்து போன் பண்ணி சொல்றான். மெயிலும் போட்டிருக்கான். கேக்காத சரக்க ஏன் அனுப்பி இருக்கேன்னு. மேலிடத்துக்கு நான் என்ன பதில் சொல்றது?'' என்றான், மகாலிங்கம். ''சார், 'மெட்டீரியல்' ஏத்தி விட்டது, அவன். அவன் தானே சார் பொறுப்பு?'' என்றார், அசோக். ''நான், அவனை கேக்க முடியாது, அசோக். நான் அவங்கிட்ட சொல்லல. உங்கிட்ட தான் சொன்னேன். அப்போ நீதான் பொறுப்பு. நீ அவங்கிட்ட இன்வாய்சை கொடுத்ததும் எங்கிட்ட சொல்லல. எங்கிட்ட, 'பர்மிஷனும்' வாங்கல.'' ''சார்,'' என, அசோக் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தபோது கை உயர்த்தி தடுத்தார், மகாலிங்கம். ''உன் பொறுப்பில்லாத தனத்தால நடந்த தப்பு இது. இது, ரெண்டாவது முறை. நான் மேலிடத்துக்கு சொல்லிடறேன். ஜி.எம்., கூப்பிட்டு கேட்பார். பதில் சொல்லிக்க. 'நவ் யூ மே கோ!' அசோக்,'' என்று கூறிவிட்டு, மீண்டும் சிஸ்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார், மகாலிங்கம். இ ருவரும் வெளியே வந்தோம். அசோக் முகம் சிறுத்துப் போய் இருந்தது. ''இது பெரிய பிரச்னையே இல்ல, சுந்தர். 30 ஆயிரம் ரூபாய்க்கு புது, 'இன்வாய்ஸ்' பண்ணி அனுப்பிட்டா, 'பிராப்ளம் சால்வ்' ஆகிடும். ஏற்கனவே அப்படி நடந்திருக்கு. இவர் வேணும்ன்னே அப்படி பண்றார்,'' என்றான், அசோக். ''நீ இங்க வேலைக்கு சேர்ந்து எத்தனை வருஷம் ஆகப் போகுது, அசோக்?'' என்று கேட்டான், சுந்தர். ''அஞ்சு வருஷம் ஆகப் போகுது. ஏன் கேக்குற?'' என்றான், அசோக். ''எனக்கென்னமோ, மகாலிங்கம் உன்னை கட்டம் கட்ட ஆரம்பிச்சிட்டார்ன்னு தோணுது. ஜாக்கிரதையா இரு,'' என்றான், சுந்தர். ''எனக்கும் அப்படிதான் தோணுதுப்பா,'' என்றான், அசோக். அவன் பேசிக் கொண்டிருந்தபோதே எதிரில் வந்தான், கிருஷ்ணன். ''கிருஷ்ணா, நேத்து தர்மபுரி பார்ட்டிக்கு மெட்டீரியல் அனுப்புனியே. என்ன பண்ணி தொலைச்சே?'' என்று, டென்ஷனாக கேட்டான், அசோக். ''ஏம்பா, என்னாச்சு?'' ''குக்கர் பாக்ஸ் எக்ஸ்ட்ராவா போயிருக்கு. அதுவுமில்லாம மாத்தியும் வேற அனுப்பி தொலைச்சுருக்கே. இவ்வளவு நேரம், மகாலிங்கம் சார் ரூம்ல அதான் பஞ்சாயத்து. நீ பண்ண தப்புக்கு என்ன போட்டு வாங்குறார். ஜி.எம்.,கிட்ட, 'கம்ப்ளைன்ட்' பண்ணப் போறதா சொல்றார்.'' கிருஷ்ணன் அதிர்ந்து போய் நிற்க, 'லோடிங்' ஆட்கள் வந்து, அசோக்கை கூப்பிட்டனர். ''சார் வண்டி ரொம்ப நேரமா நிக்குது. 'பாக்ஸ்' எல்லாம் ஏற்றுவதற்காக 'ரெடி!' உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம்.'' வண்டியை நோக்கி நடந்தான், அசோக். அசோக் வேலையை முடித்துவிட்டு வரும்போது, நான் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தேன். ஊரில் இருந்து அப்பா பேசிக் கொண்டிருந்தார். அப்பா ஊரில் ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டு இருந்தவர். சிறிய வயதில் நானும் அவருக்கு ஒத்தாசையாக இருப்பேன். பரோட்டா, சப்பாத்தி, பிரியாணி, சாப்பாடு மற்றும் சாம்பார் என, எல்லா சமையலும் அத்துபடி எனக்கு. குறிப்பாக, 'நான்-வெஜ்' சமைப்பதில் நான், 'எக்ஸ்பர்ட்.' இப்போது நான் இங்கு வேலைக்கு வந்துவிட்டதால் சமைப்பதை நிறுத்தி இருக்கிறேன். அப்பாவுக்கு வயதாகி விட்டது. எனவே, இப்போது ஊரில் ஹோட்டலை தம்பி பார்த்துக் கொள்கிறான். அ டுத்த நாள் மதியம், ஜி.எம்., கூப்பிடுவதாக, அசோக்குக்கு அழைப்பு வந்தது. ''என்ன சொல்லி வச்சிருக்காருன்னு தெரியல, சுந்தர்,'' என்று பயந்து கொண்டே சொன்னான், அசோக். ''நல்லதே நடக்கும். பயப்படாம போய் வா,'' என்று தைரியம் சொன்னாலும், எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அரைமணி நேரம் கழித்து வந்தான், சுந்தர். அந்த அரைமணி நேரமும் எனக்கு, 'திக் திக்'கென்று தான் இருந்தது. அசோக்கின் முகம் வாடி இருந்ததை பார்த்த எனக்கு முடிவு என்னவாக இருக்கும் என்று விளங்கி விட்டது. வந்தவன் தலைக்கு கையை கொடுத்து உட்கார்ந்து விட்டான். 10 நிமிடம் அவன் நிமிரவே இல்லை. நானும், அவனை தொந்தரவு செய்யவில்லை. அதற்குள் அங்கு, கிருஷ்ணனும் வந்து விட்டான். மெல்ல தலையை உயர்த்தினான், அசோக். ''என்னாச்சு, அசோக்?'' ''எதிர்பார்த்தது தான். மகாலிங்கம் என்னை பத்தி, இல்லாததும், பொல்லாததுமா என்ன சொன்னாரோ தெரியல. ஜி.எம்., நான் சொன்னது எதையுமே காதுல வாங்குல. தப்பு முழுசும் என்னோடதுதான்னு சொல்றார். 'ரிசைன்' பண்ண சொல்லிட்டார்.'' இது நான் எதிர்பார்த்தது தான் என்பதால் அவ்வளவு அதிர்ச்சியாக இல்லை. ''ஹூம். இதுக்கு முன்ன ஏழெட்டு பேரை இப்படி தான் வெளிய அனுப்பினார். யாரும் ரொம்ப வருஷம் இங்க இருந்துட கூடாதுங்கற எண்ணம் அவருக்கு. நாமளும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கணும்,'' என்றான், கிருஷ்ணன். ''ஊருக்கு போய் ஒரு பத்து நாள், 'ரிலாக்சா' இருந்துட்டு வரலாம்ன்னு இருக்கேன்பா. போயிட்டு வந்து தான் வேற வேலை டிரை பண்ணணும்,'' என்றான், அசோக். ''எதுல போற? கார்ல தான?'' என்று கேட்டேன். சொந்த கார் வைத்திருந்தான், அசோக். ''ஆமாப்பா.'' அதன்பின் வாரம் ஒரு முறை பேசுவேன். ஊருக்குப் போய் வந்தவனுக்கு வேறு வேலை எதுவும் அமையவில்லை என்றும், என்ன செய்வதென தெரியவில்லை என்றும் புலம்புவான், அசோக். அதன்பின் வேலை பளு, சொந்த பிரச்னை என, அசோக்கிடம் பேசுவது குறைந்து போய் ஒரு கட்டத்தில் சுத்தமாய் நின்று போனது. மூ ன்று ஆண்டுகள் ஓடிப் போயிருந்தது. மகாலிங்கம் கைங்கரியத்தால் அதன் பின், ஐந்து பேர் வேலையை விட்டு போய் விட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன், கிருஷ்ணனும் கிளம்பி விட்டான். என் மேலும், செய்யாத தவறை சொல்லி விசாரணைக்கு ஆளாக்கி இருந்தார், மகாலிங்கம். அசோக்கிற்கு ஏற்பட்ட அதே முடிவு தான் எனக்கும் என, அப்போதே யூகித்தேன். என் யூகம் சரியானது தான் என்பது அடுத்து வந்த, பத்து நாட்களில் தெரிந்தது. வீட்டில் இருந்தேன். மனதில் என்னென்னவோ சிந்தனைகள் ஓடி பயமுறுத்திக் கொண்டிருந்தது. அடுத்து என்ன செய்வதென்ற யோசனை. எதிர்கால வாழ்க்கை பற்றின கவலை, பயம். கோவிலுக்கு போய் விட்டு வந்தால் மனது ஆறுதலாய் இருக்குமென தோன்றியது. பற்றிக்கொள்ள ஒரு கொம்பு எல்லாருக்கும் தேவைதானே? கிளம்பினேன். வண்டியில் பாதி துாரம் போயிருப்பேன். எதிரில், அசோக். மூன்று ஆண்டுகளுக்கு பின் பார்க்கிறேன். என்னை போலவே அவனுக்கும் ஆச்சரியம். நலம் விசாரிப்புகளுக்கு பின், என் நிலைமையை சொல்லி புலம்பினேன். ''மகாலிங்கம் இன்னும் மாறலை, அசோக். என்ன பண்றதுனே புரியலை. எதிர்காலத்தை நினைச்சு ரொம்ப பயமா இருக்கு. ஆமா, நீ என்ன பண்ற இப்போ?'' ''நம்ம முன்னேற்றத்துக்கான வழி அடுத்தவங்க கைல இருக்குன்னு நாம நம்பறதும், அதையே நினைச்சுக்கிட்டு சும்மா இருக்கறதும் தான் நாம செய்யற தப்பு. ஒரு நதியை பாருங்க. ஓட தடையா ஏதாவது இருந்தா அப்படியே நின்னுடறதில்லை. அதை உடைச்சுட்டு ஓட முடியுமான்னு பார்க்கும். முடியலையா, தனக்குன்னு தனி வழிய அதுவாவே உண்டாக்கிக்கிட்டு ஓட ஆரம்பிச்சுடும். அதனாலதான் அதை, நதின்னு சொல்றோம். இல்லைன்னா தேங்கிப் போய் குட்டையாதான் கிடக்கும். ''நம்ம வாழ்க்கையும் அது போலதான். நம்ம முன்னேற்றம் நம் மூளையிலும், முயற்சியிலும் தான் இருக்கு. இது, எனக்கு இப்பதான் புரியுது.'' ''நானும் ஆரம்பத்துல என்ன பண்றதுன்னு பயந்தது உண்மை. நமக்கும் குடும்பமும், நம்மை நம்பி இருக்கற பொண்டாட்டி பிள்ளையும், அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும், பிரச்னைகளும் இருக்கே. இரண்டு மூணு இடங்கள்ல வேலைக்கு முயற்சி பண்ணேன். எதுவும் சரியா அமையல. அப்புறம் ஒரு நாள் திடீர்ன்னு தோணிச்சு. 'நம்மகிட்டயே கார் இருக்கு. நல்லா ஓட்டவும் தெரியும். இதையே ஏன் நம்ம தொழிலாக்கிக்கக் கூடாது'ன்னு. உடனே, 'ஒயிட் போர்ட்' வண்டியா மாத்தி, டாக்சியா மாத்தினேன். முடியும்ங்கற நம்பிக்கையோட தொழில்ல இறங்கினேன். மூணே மாசம். என் தொழில், 'பிக்-அப்' ஆச்சு. ''ஒரு வண்டி வச்சு ஓட்டிட்டு இருந்தவன் தொழில்ல, நேர்மையா, ஒழுக்கமா இருந்ததால என் தொழில் பெரிசாக ஆரம்பிச்சது. 'கஸ்டமர்ஸ்' தேடி வர ஆரம்பிச்சாங்க. நாம நம்ம தொழில்ல சரியா இருந்தா நாம தேடி போக தேவை இல்லை, சுந்தர். அந்த உழைப்பும், நேர்மையுமே நமக்கு வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்கும். எனக்கு அப்படிதான் வந்தது. இன்னும் நாலு கார் வாங்கினேன். இப்ப அஞ்சு காருக்கு முதலாளி நான். மத்த காருக்கெல்லாம், டிரைவர் வச்சு ஓட்டிட்டு இருக்கேன்.'' அசோக் சொல்ல சொல்ல ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்குள் இருந்த பயம் போய் ஒரு தன்னம்பிக்கை, தைரியம் உருவாக ஆரம்பித்திருந்தது நன்றாக தெரிந்தது. ''எது நடந்தாலும் அது நம்ம நன்மைக்கேன்னு நம்புங்க. அந்த, 'பாசிட்டிவ்'வான எண்ணமே நமக்கே நம்பிக்கையும், தைரியமும் தந்து நம்மை வேற ஆளா மாத்தும். அந்த, 'பாசிட்டிவ்' எண்ணம் நம்மை வாழ்க்கைல உயர்த்தும். நான் அப்படித்தான் நம்பினேன். அது உண்மையும் கூட. அன்னைக்கு அவர், நான் வேலையை விட்டு நிக்க காரணமா இல்லாம இருந்திருந்தா நான் இவ்வளவு முன்னேற முடிஞ்சிருக்குமா? இன்னும் அங்கயே சூப்பர்வைசரா, 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல தான் காலத்தை தள்ளிட்டு இருந்துருக்கணும். இப்ப பாரு, நான் முதலாளி. என்னால, நாலு குடும்பங்கள் பிழைக்குதுன்னு நினைக்கறப்ப மன நிறைவாகவும், சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு. வாழ்க்கைக்கு இதை விட, வேற என்ன வேணும்.'' ''உண்மை தான், அசோக்.'' ''உனக்கு ஹோட்டல் தொழில் தெரியும் தானே. நீ ஏன், 'மெஸ்' ஒண்ணு ஆரம்பிக்க கூடாது? உழைக்க தயாரா இருந்தா உயர்வு தன்னால வரும், சுந்தர். பயத்தை மூட்டை கட்டி வச்சிட்டு தைரியமா இறங்கு,'' அவன் சொன்னதும் குபீரென ஒரு உற்சாகம். மிகுந்த சந்தோஷமாய் அவனை பார்த்தேன். உண்மை தானே. எப்படி நான் மறந்தேன்! ''ரொம்ப தேங்க்ஸ், அசோக். சரியா சொன்ன. எதிர்காலம் பற்றிய பயம், குழப்பத்துல இருந்த எனக்கு சரியான யோசனை சொல்லியிருக்க. நம்ம உயர்வு நம்ம கைலதான் இருக்குங்கறது ரொம்ப சரி. ரொம்ப தேங்க்ஸ்பா.'' அசோக்கிடம் விடை பெற்ற சுந்தர், கோவிலை நோக்கி கிளம்பினான். இப்போது ஆறுதல் தேடி அல்ல. ஆரம்பிக்கும் புது பிசினஸுக்கு வெற்றி தர சொல்லி கடவுளிடம் வேண்டிக் கொள்வதற்காகத்தான் ! கே.ஆனந்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ravi om namasivaya
ஜன 26, 2026 18:39

வேளைக்கு போய் அடிமையாய் அடுத்துவரிடம் உழைப்பதை விட வேளை கொடுத்து முதலாளியாய் வாழ்வதே சிறந்தது


Rajasekaran Sangeetha
ஜன 26, 2026 10:50

வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் என்று உணர்ந்து கொண்டேன் நான்.


giri
ஜன 25, 2026 23:29

அற்புதம் நல்ல ஊக்கமளிக்க கூடிய கதை.


kanaga valli
ஜன 25, 2026 12:19

நைஸ் ஸ்டோரி .