உள்ளூர் செய்திகள்

தாயகம் காப்பது கடமையடா! - வீறுகொண்டெழுந்த அக்னி வீராங்கனைகள்...

இன்றைய கால கட்டத்தில், 21 வயதில் கூட இளைஞர்கள் தடம் மாறிப் போகின்றனர். ஆகவே, அவர்களை, 17 வயதிலேயே புடம் போட வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான், 'அக்னி பாத்' திட்டம்.தங்களது பல்வேறு சாகசங்கள் மூலம், திட்டம் சிறப்பானது தான் என்பதை, சென்னையில் பயிற்சி பெற்ற வீராங்கனைகள் நிரூபித்தனர்.'பிளஸ் 2 முடித்து, ஆர்வமும், தகுதியும், திறமையும் இருந்தால் போதும்; ராணுவத்தில் சேரலாம்...' என்ற, பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல் படையில், அக்னி வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இவர்களுக்கு, 22 வாரங்கள் பயிற்சி வழங்கப்பட்டு, ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். நான்கு ஆண்டுகள், ராணுவத்தில் பணியாற்றுவர். பணிபுரியும் காலத்தில், 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.நான்கு ஆண்டுகளுக்கு பின், 11 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்படும். பணிக் காலத்தில் காயம் ஏற்பட்டால், 44 லட்சம் ரூபாய் வரை, மருத்துவத்துக்காக செலவிடப்படும்.நான்கு ஆண்டுகளுக்கு பின், இவர்களில், 25 சதவீதம் பேர், ராணுவ வீரர் - வீராங்கனையாக தொடர்வர். மீதம் உள்ளோர், மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு, சிபாரிசு செய்து அனுப்பப்படுவர்.பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே, ராணுவ பயிற்சி தருவது, நம் நாட்டு ராணுவத்தை இளமையுடனும், வளமையுடனும் வைத்திருக்க உதவும் என்பது, முப்படை தளபதிகளின் கருத்து.சென்னை - தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையில், 1,983 அக்னி வீரர்கள், தங்களது பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இவர்களில், 234 பேர் பெண்கள்.மிக இள வயது என்பதால் களைத்துப் போகாமல் வேகமாகவும், விவேகமாகவும், துல்லியமாகவும் பயிற்சியை நிகழ்த்தினர்.ராணுவ வீரர்களுக்கான முறையில், தலை முடியை ஒட்ட வெட்டியிருந்ததால், யார் வீரர்கள், யார் வீராங்கனைகள் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, சாகசங்கள் சரிசமமாக இருந்தன.எரியும் ஓடுகளை கையால், தலையால் உடைத்தும், துப்பாக்கியை பம்பரம் போல சுழற்றியும், சிலம்பம் வீசியும், யோகா பயிற்சி செய்தும் அசத்தினர், வீராங்கனைகள்.பீகார், உ.பி., மற்றும் ம.பி., போன்ற, பின் தங்கிய மற்றும் மலை வாழ் கிராம மக்கள் நிறைய பேர், நிகழ்ச்சியை காண வந்திருந்தனர். அவர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர். காரணம், மைதானத்தின் மையத்திலிருந்த பெரும்பாலான வீராங்கனைகள், அவர்களின் பிள்ளைகள்.'இவர்களுக்கு எல்லாம் கனவாக இருந்த ராணுவப் பணியை, நனவாக்கி இருக்கும், அரசுக்கு, நாங்களும், பிள்ளைகளும் செலுத்தும் நன்றி என்பது, எந்த நிலையிலும் தாயகம் காப்பதாகவே இருக்கும்...' என்ற வார்த்தையை கேட்டதும், சிலிர்ப்பாக இருந்தது!எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !