திண்ணை!
கடந்த, 1939ல், சென்னையின், 300வது நுாற்றாண்டு விழாவில், விழாக் குழு தலைவர் திவான் பகதுார் எஸ்.இ.ரங்கநாதன் எழுதியது:கொஞ்சம் பொறுமையுடன் விசாரித்தால், சென்னையில் எல்லா இடங்களிலும், அக்கம் பக்கத்து பெயர்களில் எல்லாம் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.நேற்றைய வாழ்க்கையின் நிதானத்தை நேசிப்பவர்களுக்கு, சென்னை ஒரு பிரியமான, காற்றோட்டமான, பசுமையான நகரம். நவீன வாழ்க்கையின் சந்தடி, சச்சரவின் மத்தியில் கூட, வேறொரு நாள், வேறொரு காலத்திய மதிப்புகள் போற்றப்படும் இந்நகரத்தில் நன்னயம், வசீகரம், கலாசாரம் போன்றவை மதிக்கப்படுகின்றன.கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என, முக்காலங்களிலும் நம் சம்பிரதாயம் இருப்பது இருந்தபடியே உள்ளது. முன்னேற்றம், ஒரு வசீகரமான சகிப்புத்தன்மை, புரிந்துகொள்ளும் மனப்பான்மை ஆகியவை, சென்னையில் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.கடந்த, 1879ல், இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்த ஒருவர், சென்னை பற்றி குறிப்பிடும்போது, 'அது நகரமில்லை. ஆனால், ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் ஐந்தாறு கிராமங்களின் சேர்க்கை...' என்றார். அவருடைய குறிப்பின்படி...* சென்னையில், அதன் மூலமான புனித ஜார்ஜ் கோட்டையின் அரசாங்க அலுவலகங்கள்* கருப்பர் நகரம்* வடக்கு கடற்கரை சாலையும், அதற்கு பின்னால் உள்ள வர்த்தக மையமும், அதற்கு மூன்று மைல்கள் அப்பால், வர்த்தக நிறுவனங்கள் அல்லாது கடைகள் மட்டுமே இருக்கும் மவுண்ட் ரோடு. அதை தாண்டி பங்களாக்கள் உடைய நுங்கம்பாக்கம், அடையாறு* பெரிய கோவில்கள் இருக்கும் பகுதிகள்* இவை தவிர, புறநகர் பகுதிகளான மயிலாப்பூர், முகமதியர்கள் அதிகமாக வசிக்கும், திருவல்லிக்கேணி, பழைய போர்த்துகீசியக் குடியிருப்பான சாந்தோம். அதற்கு அப்பால், புனித தோமா மலை இருக்கின்றன.கடந்த, 1900ல் இந்த நகரம், பழைய பட்டுகளாலும், ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட சொகுசான, வயதான பெண்மணி எனவும்; முற்காலத்தில், பணத்தையும், பரபரப்பையும் அனுபவித்திருந்தாலும், உடல்வாகிலோ, செல்வத்திலோ சீரழியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.டாக்டர் ரா.பி.சேதுபிள்ளை எழுதிய, 'தமிழகம் அலையும் கலையும்' என்ற நுாலிலிருந்து: செப்டம்பர், 10, 1746ல், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த சென்னை பட்டினத்தை, பிரெஞ்சு கப்பற்படை தலைவர், லபோர்டினே தாக்கி, கைப்பற்றினான். இந்த தகவல் பிரெஞ்சு கவர்னர் டூப்ளே துரைக்கு தெரிய வந்ததும், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கோட்டையிலும், கோவில்களிலும் தொடர்ந்து மணி அடித்தனர். தன் தொப்பியை கழற்றி கையில் பிடித்து, 'வீவல் ரூவா - அரசர் நீடுழி வாழ்க...' என்று இரைந்து கூறினார், டூப்ளே.உடன் கோட்டையிலிருந்த வெள்ளைக்காரர்கள், அனைவரும் ஒரே குரலாக, 'வீவல் ரூவா...' என, கத்தினர். அவர்கள் போட்ட சத்தத்தால், கோட்டையே இடிந்துவிடும் போல் இருந்தது. புதுச்சேரியில், ஏராளமான வீடுகளுக்கு, இலவசமாக சர்க்கரை வழங்கப்பட்டது. மேலும், எல்லார் வீட்டிலும் விளக்கு ஏற்றி வைக்க கூறினார், டூப்ளே. அயோத்திக்காக விளக்கு ஏற்ற சொன்னதை சிலர் குறை கூறினர். ஆனால், 1746ல், பிரெஞ்சு படை, சென்னை பிரிட்டிஷ் படையை தோற்கடித்து, பிரெஞ்சு கொடி ஏற்றி, ஆட்சி கைப்பற்றப்பட்டது. அப்போது தான், அனைவருக்கும் இலவச சர்க்கரை மற்றும் விளக்கு ஏற்றுங்கள் என்று, கோரிக்கை வைக்கப்பட்டது. வெற்றிக்கு உதாரணம், விளக்கு ஏற்றுதல். விளக்கு ஏற்றுவது அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதற்கான, உதாரணம் தான், இந்த நிகழ்வு!