திண்ணை!
பசுமைக்குமார் எழுதிய, 'அறிவொளியூட்டும் அப்துல்கலாம்' என்ற நுாலிலிருந்து, கலாம் பேட்டி: 'அ ப்போது எனக்கு வயது, 6. ராமேஸ்வரத்திலிருந்து, சேதுக்கரை என்று அழைக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு பக்தர்களின் போக்குவரத்துக்காக ஒரு படகை உருவாக்கினார், என் தந்தை. 'அதை வைத்து போக்குவரத்தும் நடந்தது. இதன் மூலம் நல்ல வருவாயும் கிடைத்தது. ஒருநாள் வீசிய பயங்கர புயலில் கடல் அலைகளின் ஆவேசப் பெருமூச்சில் அடித்துச் செல்லப்பட்டது, படகு. 'படகு மட்டுமல்ல, தனுஷ்கோடியின் நில பகுதியும், பாம்பன் பாலமும் தகர்ந்து மாயமானது. கடலின் அழகையே ரசித்து வந்த எனக்கு, அதன் கட்டற்ற ஆற்றலின் ரகசியம் அன்று புரிந்தது...' எனக் கூறியுள்ளார், அப்துல்கலாம். ********விக்ரம் சாராபாயை சந்திக்க, ஹோட்டல் அசோகாவில் வரவேற்பறையில் காத்திருந்தார், கலாம். அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரம் அதிகாலை, 3:30 மணி. அதற்கு, இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. அங்கிருந்த சோபாவில் யாரோ, ஒரு புத்தகத்தை தவற விட்டு சென்றிருந்தார். பொழுதுபோக்க அதனை எடுத்து படித்தவரின் கண்களில் ஒரு மின்னல். ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறிய ஒரு வாசகம் அதில் மேற்கோளாக காட்டப்பட்டிருந்தது. அது, 'நல்லவர்கள் எல்லாரும் உலகத்திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்கின்றனர். முரண்பாடுகள் கொண்ட சிலர் மாத்திரம், தங்களுக்கு ஏற்றபடி, உலகை மாற்றியமைக்க தொடர்ந்து பாடுபடுகின்றனர். இந்த முரண்பாடு கொண்ட நபர்களால் தான், உலகின் எல்லா முன்னேற்றங்களும், சார்ந்திருக்கின்றன. மேலும், அவை அவர்களின் புதிய கண்ணோட்டத்தையும் நம்பியுள்ளது!' இது கலாமுக்கு பிடித்திருந்ததுடன், நம்பிக்கையையும் தோற்றுவித்தது. ***** கண்ணதாசன் எழுதிய, 'அர்த்தமுள்ள இந்து மதம்' நுாலிலிருந்து: தி. மு.க.,விலிருந்து நான் பிரிந்த பிறகு, நானும் சம்பத்தும், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் பெங்களூரில் ஒரு கூட்டத்தில் பேச சென்றோம். மத்தியானம் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நான் நன்றாக துாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, நான் கூட்டத்திற்கு செல்வதாகவும், அங்கே கல்லெறி நடப்பதாகவும், என் கார் கண்ணாடி உடைந்ததாகவும் கனவு கண்டேன். அது பகல் கனவு தான் என்றாலும், ஆழ்ந்த துாக்கத்தில் வந்த கனவு. என்ன ஆச்சரியம்! நான் கண்ட கனவு அன்று மாலை அப்படியே நடந்தது. காரில் எந்தக் கண்ணாடி உடைந்ததாக கனவு கண்டேனோ அதே கண்ணாடி உடைந்தது. கனவில் வந்த முகங்களே என் கண் முன் காட்சியளித்தன. நா ன் ஒரு படம் தயாரித்தேன். அந்தப் படத்தைக் கோவை நீலகிரி ஜில்லாக்களுக்கு விற்பதற்காக ஒரு நாள் இரவு 8:00 மணிக்கு கோவை வினியோகஸ்தரிடம் பேசி கொண்டிருந்தேன். விலைபேசி முடிந்தது. 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கையிலெடுத்து, 'அக்ரிமென்ட் அடியுங்கள்...' என்றார். அவர் சொன்னவுடனேயே மின்சார விளக்கு அணைந்தது. எனக்கு சுருக்கென்றது. அவர் உடனே எழுந்து, 'வேண்டாம்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என்று சொல்லி போய்விட்டார். அவர் நினைத்தது போல, நான் பயந்தது போல, அந்தப் படம் தோல்வி அடைந்தது. சில சகுனங்கள் இறைவனின் முன்னறிவிப்புகளே. சந்தேகமேயில்லை. க டந்த, ஜூலை, 1953ல், டால்மியாபுரம் போராட்டம் நடந்தது. அதன் மூன்றாவது கோஷ்டிக்கு நான் தலைவன். முதல் இரண்டு கோஷ்டிகளை போலீசார் கைது செய்து விட்டனர். மூன்றாவது கோஷ்டியை நான் தலைமை தாங்கி நடத்தி சென்றேன். நடந்து போகும்போது, என் வலது கால் பெருவிரலை ஒரு கல் தடுக்கியது. அப்போதே நினைத்தேன். ஏதோ நடக்கப்போகிறதென்று! தடியடி, துப்பாக்கி பிரயோகம், பின் கலவர வழக்கு, 18 மாத தண்டனை என்று நான் பட்ட பாடு என் வலக்காலுக்கு தான் தெரியும். நடுத்தெரு நாராயணன்