உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நெல்லை மாவட்டம், முக்கூடலில் ஒரு பிரமுகர் இருந்தார். அவர், பி.யு.சின்னப்பாவின் தீவிர ரசிகர். தன் வீட்டில் அதற்கென்று ஒரு கிராமபோன் பெட்டியும், சின்னப்பாவின் இசைத் தட்டுக்களும் வைத்திருந்தார். அப்பேற்பட்ட, ரசிகர் ஒருநாள், நெல்லையில் நடந்த தியாகராஜ பாகவதரின் கச்சேரியை நேரில் கேட்க நேர்ந்தது. பாகவதரின் அபாரமான, இனிமையான குரல் வளத்தையும், பாடல்களை அநாயசமாக அவர் பாடிய விதத்தையும், ராகங்களை கையாண்ட முறையையும் கேட்டு பிரமித்தார். கச்சேரி முடிந்து வீட்டிற்கு சென்ற அவர், தன்னிடம் இருந்த, பி.யு.சின்னப்பாவின் இசைத்தட்டுகளை ஒன்று விடாமல் எடுத்து உடைத்து விட்டார். மறுநாள், அந்த பிரபலஸ்தரின் அழைப்பை ஏற்று, அவர் வீட்டிற்கு சென்றார், பாகவதர். அங்கு சிதறி கிடந்த இசைத் தட்டுகளை பார்த்து, விளக்கம் கேட்டார். 'உங்களது கச்சேரியை கேட்டதற்கு பின், பி.யு.சின்னப்பாவின் பாட்டு பிடிக்கவில்லை...' என்று கூறினார், அந்த ரசிகர். உடனே, 'இந்த செய்கை நியாயமற்றது...' என்று பாகவதர் அறிவுரை கூறி, சின்னப்பாவின் இசைப் பணியை சிலாகித்து கூறினார். மேலும், 'என்னை விட இன்னொருவர் சிறப்பாகப் பாடினால், என்னுடைய இசைத் தட்டுகளுக்கும் இந்த கதி தானா?' என்று வினவினார். அக்கேள்வி, அந்த ரசிகருக்கு, பாகவதர் மேல் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த ரசிகர் வேறு யாரும் இல்லை, சொக்கலால் ராம் சேட் பீடி நிறுவனரின் மகன், ஹரிராம் சேட் தான். பாகவதரின் வாழ்விலும், தாழ்விலும் பங்கேற்று உற்ற நண்பராக கடைசி வரை இருந்தார், ஹரிராம் சேட். *****ரா.கி.ரங்கராஜன் எழுதிய, 'அங்குமிங்குமெங்கும்!' என்ற நுாலிலிருந்து: மு தலமைச்சராக அண்ணாதுரை பதவி ஏற்ற கொஞ்ச நாட்களில் கடுமையான நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார், 'அவருடன் அவருடைய மனைவி ராணி அம்மையாரும், முன்னாள் அமைச்சர், க.ராஜாராமும் போயிருந்தனர். 'குமுதம்' இதழின் நிறுவனரும், முன்னாள் ஆசிரியருமான எஸ்.ஏ.பி.அண்ணாமலைக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அண்ணாதுரை சிகிச்சை பெறும் விபரங்களை புகைப்படம் எடுத்து, 'குமுதம்' இதழுடன் ஒரு ஸ்பெஷல் இணைப்பாக வெளியிடலாம் என்று எண்ணினார். நியூயார்க்கில் உள்ள ெதாழிலதிபர், அழகப்பனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். அழகப்பன், அந்த பணியை மகிழ்வுடன் ஏற்று, மருத்துவமனையில் அண்ணாதுரைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் நிர்வாகிகள் ஆகிய அனைவரையும் பேட்டி கண்டார். அண்ணாதுரை சாப்பிடுவது, டாக்டரிடம் பேசுவது, பேப்பர் படிப்பது, ராணி அண்ணாதுரை, தன் கணவரை கவனிப்பது, முதலிய பல நிகழ்ச்சிகளை புகைப்படங்கள் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். மொத்தம் 15 - 20 படங்கள் இருந்தன. வழு வழு காகிதத்தில், ஆங்காங்கே குறிப்புகளுடன், எட்டுப் பக்கங்கள் தயாராகி, 'குமுதம்' இதழுடன் இலவச வெளியீடாக அது வழங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும், அண்ணாதுரையின் புகழும் உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் அது. அமெரிக்காவுக்கு சென்றிருக்கும், அண்ணாதுரைக்கு உடல் நிலை எப்படி இருக்கிறதோ என்று தி.மு.க., தொண்டர்கள் மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான பொதுமக்களும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அவரைப் பற்றிய செய்தியும், புகைப்படங்களும் எப்பேர்ப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த குறிப்பிட்ட, 'குமுதம்' இதழ், விற்பனையை அதிகரிக்கச் செய்தது. அந்த சிறப்பு இணைப்பை மீண்டும் நிறைய பேர் கேட்டதால், அடுத்த இதழோடு, அதை மறுபடியும் அச்சிட்டு தந்தனர். இந்தியாவில், பத்திரிகை உலகில் 'குமுதம்' முதல் இடத்தை பெறுவதற்கு இந்த சிறப்பிதழ் முதல்படியாக அமைந்தது. நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !