தோழிகள்!
பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்த, சந்தியாவுக்கு அந்த பாட்டு சத்தம், சன்னமாக கேட்டது. அது, மொபைல்போன் ஓசை என, முதலில் அவளுக்குத் தெரியவில்லை. பிரபலமான பாடலின் வரிகள் ஒலிக்க, பாடலுடன் சேர்ந்து தானும் பாடினாள். அப்புறம் தான், 'இதென்ன பாட்டு சத்தம் நம் வீட்டிலிருந்து கேட்கிறது...' என, உறைத்து அது, மொபைல்போன் ரிங்டோன் என, மூளைக்குள் பதிய, வேகமாக வெளியே வந்தாள். 'டைனிங் டேபிள்' மேல், தண்ணீர் ஜாடி பின்புறம் இருந்தது போன். 'அம்மா ஹோம்' என்ற பெயர், மொபைல் திரையில் தெரிய, தோழி கிரிஜாவின் போன் எனப் புரிந்தது, சந்தியாவுக்கு. 'அட லுாசு, போனை விட்டுட்டுப் போயிடுச்சா!' புன்னகையுடன் அதை, 'ஆன்' செய்து, ''ஹலோ!'' என்றாள். மறுமுனையில் சிரித்தாள், கிரிஜா. ''நினைச்சேன். உன் வீட்டுல தான் என் போன் இருக்கா? வண்டியில வரும்போது விட்டுட்டேனோன்னு ஒரு சந்தேகம்.'' ''எப்பவும் உனக்கு, 'அசால்ட்' தான்டி,'' செல்லமாக கோபித்தாள். ''வெச்சிரு. நாளைக்கு கோவில்ல பார்ப்போம்ல, அப்போ வாங்கிக்கறேன்.'' ''யாராவது கூப்பிட்டா?'' ''யாரும் கூப்பிட மாட்டாங்க. என் உலகம் ரொம்பவும் சின்னது. அப்படியே போன் வந்தாலும் நாளைக்கு பேசுவான்னு பதில் சொல்லு. இங்கே தான் அம்மா கிட்ட ஒண்ணு, அப்பாகிட்ட ஒண்ணுன்னு ரெண்டு போன் இருக்கே. சமாளிச்சுக்கலாம்,'' என்றாள், கிரிஜா. “அப்போ சரி.'' ''வந்து, ம்... சரி நாளைக்கு பார்ப்போம், பை,'' என, போனை வைத்து விட்டாள், கிரிஜா. குழப்பமானாள், சந்தியா. ஏதோ சொல்ல வந்தாளே, ஏன் தவிர்த்தாள்? பின் அதை தீவிரமாக்காமல், மறந்து போனாள். அந்நேரத்தில் வீட்டில், அவள் மட்டுமே தனித்திருந்தாள். அப்பா கம்பெனியில், அம்மா ரேஷனுக்கு, தம்பி கார் டிரைவிங் கிளாஸ்க்கு போயிருந்தனர். தையல் மெஷின் மேல் இருந்த, தன் வருங்கால கணவன், அருணுடனான நிச்சயதார்த்த போட்டோ ஆல்பம் அவள் கண்ணில் பட்டது. அதை எடுத்து, 14வது தடவையாக பார்க்கத் துவங்கினாள். எட்டாம் பக்கத்திலேயே கொட்டாவி வர, அப்படியே வைத்து விட்டாள். அருணை அழைக்கலாமா என்ற யோசனை வந்தது. மணி, 12:00க்கு மேல் ஆகியிருந்தது. வேண்டாம், ஆபிசில் வேலையாக இருப்பார். பேசுவதற்கு விஷயம் இல்லாமல், போனில் அழைக்கவும் தயக்கமாக இருந்தது. மேஜை மேலிருந்த, கிரிஜாவின் போன் கண்ணில் பட்டது. அதை எடுத்து, 'ஆன்' செய்தாள். 'லாக் கூட போடாம வெச்சுருக்கு, லுாசு...' என, போன் காட்சித்திரையில் சந்தியாவும், கிரிஜாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நிற்கும் போட்டோ இருக்க, அப்படியே போனில் இருந்தவைகளை ஆராய ஆரம்பித்தாள். 'ஒவ்வொருத்தர் போனும் அவங்கவங்க, 'பர்சனல் டைரி' மாதிரி. அனுமதியில்லாம பார்க்கக் கூடாது...' என்று அறிவு உணர்த்தினாலும், அதை அலட்சியம் செய்தாள். 'எனக்குத் தெரியாம உன் வாழ்க்கையில என்னடி ரகசியம்...' அவள் மனசுக்குள் உற்சாக திருட்டுத்தனம். அது கூட உண்மை தான். இருவரது ரசனைகளும், விருப்பு வெறுப்புகளும் வெவ்வேறல்ல. கல்லுாரியின் முதலாம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா இது! போனில் போட்டோ கேலரி போனாள். சென்ற மாதம், அருணுடன் நிச்சயதார்த்த நிகழ்வில் எடுத்த சில போட்டோக்கள் அதில் இருந்தன. அடுத்த மாதம் சந்தியாவின் திருமணம் வரப்போகும் நிலையில், 'ஷாப்பிங்' சென்ற இடங்களில் எடுத்துக் கொண்ட சில, 'செல்பி'கள். 'ரெஸ்டாரென்டில், வெஜ்சூப்' குடித்த போது, நகைக்கடையில் செயின் பார்த்த போது, 'மேக்-அப்' போட்ட போது... அதற்கு முன் தம்பியுடன் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடின போது, படியில் உட்கார்ந்திருந்த போது, முன்புற செம்பருத்தி செடி பின்னணியில்... சுவாரஸ்யம் இழந்தவளாக, 'வாட்ஸ்-ஆப்'புக்கு போனாள், சந்தியா. தோனி படம் வைத்திருந்த ஒரு எண்ணை பார்த்ததும் இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என தான் முதலில் தோன்றியது, சந்தியாவுக்கு. மீண்டும் அந்த எண்களை பார்த்ததில், அது, தன் வருங்காலக் கணவன், அருணின் தொடர்பு எண் என, உணர்ந்து குழப்பமானாள். 'அருணின் எண் எப்படி இவளது போனில்?' என்று புரியாமல் படபடப்புடன் அந்த, 'வாட்ஸ்-ஆப்'புக்குள் போனாள். ஏழெட்டு பைல்கள் இருந்தன. எல்லாமே அருண், கிரிஜாவுக்கு அனுப்பினது. முதல் இரண்டு வீடியோ பைல்கள் மட்டும் 'டவுன்லோட்' செய்யப்பட்டிருக்க, அது என்னவென்று பார்த்தாள், சந்தியா. ஒரு ஆண் குழந்தை, பெண் குழந்தைக்கு எதிர்பாரா நேரத்தில் முத்தம் வைப்பது போன்ற படமும், அதற்கு கீழே, 'ஸ்வீட் குட்மார்னிங்' என்ற எழுத்துக்கள். மற்றவை பதிவிறக்கப்படவில்லை. சில 'பைல்'கள் நீக்கப்பட்டிருந்தன. சந்தியாவின் மனம் 'படபட'வென அடித்துக் கொண்டது. 'இந்த அருண், கிரிஜாவின் எண்ணை எப்போது வாங்கினார்? ஏன் பதிவுகள் அனுப்பினார். இவள் ஏன் அதை, 'டெலிட்' செய்திருக்கிறாள். படித்து அழித்திருக்கிறாளா அல்லது படிக்காமலேயே அழித்திருக்கிறாளா? அப்படி என்ன பதிவு அனுப்பினார்? ஏதோ தப்பு நடக்கிறது!' அவள் மனம் குழப்பத்தில் வெதும்பியது. கைகள் நடுங்கின. 'என் வருங்கால கணவன் எதற்கு என் தோழி, கிரிஜாவுக்கு காரணமில்லாமல், 'வாட்ஸ்-ஆப்' அனுப்ப வேண்டும்? சரி, ஏதாவது சாமி படம், பூ படம், இயற்கைக் காட்சி என்றால் கூட பரவாயில்லை, அதென்ன முத்தம் வைத்துக் கொள்ளும் போட்டோ. இதையா வருங்கால மனைவியின் தோழிக்கு அனுப்புவர். பார்ப்பவர்களின் மன ஓட்டத்தை தெரிந்து கொள்ளும் முயற்சியா! சந்தியாவுக்கு கோபம் 'குபுகுபு'வென ஏறியது. இது சரியில்லை!' தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக தோன்றியது, சந்தியாவுக்கு. அருண், தனக்கு துரோகம் செய்வதாக தோன்றியது. இதற்கு இதுதானே அர்த்தம்? இந்த, கிரிஜா பைத்தியம் கூட இதைப் பற்றி தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே, ஏன்? பொறுமை, பொறுமை. கிரிஜா அவன் அனுப்பின போட்டோக்களையே பார்க்கவில்லை; அவைகளை அவள் ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. அப்புறம் எப்படி அவள் மேல் குற்றம் சுமத்த? அவனது பதிவினையே அவள் கண்டுகொள்ளாமல் தவிர்த்து இருக்கிறாள். அருண் அதை புரிந்து கொள்ளாது, விடாது தினசரி திரும்ப திரும்ப எதையாவது அனுப்பி...அவனுக்கு என்ன ஒரு திமிர், என்ன ஒரு துணிச்சல்! சந்தியா கடைசியாக இருந்த ஒரு வீடியோவை பதிவிறக்கினாள். 'உன் கன்னம், பன்னு மாதிரி...' என மூன்றாந்தர சினிமாப் பாடல் ஒன்று அலறியது. கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள், சந்தியா. இவனுக்கு என்ன ஒரு மட்டமான புத்தி. சந்தியாவிற்கு பொறுமை போய் விட்டது. பல்லைக் கடித்தாள். ஆவேச மூச்சு வெளியேறியது. உடல் 'படபட'த்து நடுங்கியது. 'ஆம்பளை புத்தி தெரியாதா உனக்கு...' என்று, மூளை சமாதானம் செய்வித்தாலும், 'இல்லை இதை நான் விடமாட்டேன். கேள்வி கேட்கலைன்னா எல்லை தாண்டிடுவான். அப்புறம் அசிங்கம். என்ன எண்ணத்துல பண்றான் இதையெல்லாம்?' கிரிஜாவின் போனில் இருந்தே, அருணை அழைத்தாள், சந்தியா. ஏதோ தோன்ற உடனே, 'கட்' செய்தாள். ஆனால், அடுத்த நொடியே, அருணிடமிருந்து பதில் அழைப்பு! சந்தியாவுக்கு மனம் எரிந்தது. எத்தனை வேகம்! அவன் மேலான கொஞ்ச நஞ்ச காதலும் வடிய, போனை, 'அட்டெண்ட்' செய்து, ''ம்...'' என்றாள். ''ஹாய் கிரிஜ், 'ஹவ் ஆர் யூ' என்ன, 'வாட்ஸ்-ஆப்' அனுப்பினா, 'ரிப்ளை'யே இல்லை. அவ்வளவு பிசியா?'' சிரிப்பும், வழிசலுமாக இருந்த அவனது குரல், சந்தியாவை வெறுப்பேற்றியது. ''பரவாயில்லையே... உங்க வருங்காலப் பொண்டாட்டிகிட்ட கூட இத்தனை உற்சாகமாப் பேசினது இல்லை. சூப்பர் அருண்,'' என்றாள், சந்தியா. ''யாரு யாரு பேசறது?'' பதறினான், அவன். மொத்தம், 20 நிமிடம். போனிலேயே அவனை கதறடித்தாள். வார்த்தைகளாலேயே நார்நாராக கிழித்தாள். பேச்சிலேயே வெச்சு செய்ய, அழும் நிலைக்கு வந்து விட்டான், அவன். ''இனி என் போன்ல அம்மா நம்பரும், உன் நம்பரும் தான், மற்ற, லேடிஸ் போன் எண்களை நீக்கிடறேன். இது, என் குலதெய்வம் மேல சத்தியம்,'' என தேம்பினான். ''கவனமா இருங்க, இல்லைன்னா வருத்தப்படுவீங்க,'' என்று, சிங்கக் குரலில் கர்ஜித்துவிட்டு போனை வைத்தாள், சந்தியா. அ டுத்த நாள், மாலை நேரம். பட்டத்தரசியம்மன் கோவில். தரிசனம் முடித்து, துாணருகே இருந்த படியில் அமர்ந்தனர், சந்தியாவும், கிரிஜாவும். மல்லிகை சரத்திலிருந்து பாதி பிய்த்தெடுத்து, கிரிஜாவின் பின்னலில் வைத்தாள், சந்தியா. கைப்பையிலிருந்து போனை எடுத்து, ''இந்தாடி உன் சொத்து,'' என்றாள். ''தேங்க்ஸ்,'' என, வாங்கிக் கொண்டாள். ''நீ சொன்ன மாதிரியே ஒரு காலும் வரலைடி. ஆனா, நான் தான் ஒருத்தருக்கு கூப்பிட்டு பேசினேன்.'' என்றாள், சந்தியா. புரியாமல் பார்த்தாள், கிரிஜா. ''யாருக்குன்னு கேட்க மாட்டியா, ராஸ்கல்!'' என, செல்லக் கோபத்துடன் அவள் கையை இழுத்து நறுக்கென கடித்தாள், சந்தியா. ''உண்மையைச் சொல்லு, கிரிஜா. நீ உண்மையில், மறந்து போய் தான் போனை எங்க வீட்டுல விட்டுட்டுப் போனியா?'' ''சேச்சே, தெரிஞ்சே தான் போனை உன் வீட்டுல விட்டுட்டுப் போனேன்,'' கிண்டலாக சிரித்தாள், கிரிஜா. ''அதானே பார்த்தேன்,'' என்று, தலையில் கொட்டி, “பாரு தேவையில்லாத, 'மெசேஜ்'ல்லாம் இனி உன் போனுக்கு வராது, சரியா.'' என்றாள், சந்தியா. ''நீ சொன்னா சரிடி!'' என்று தோழி சந்தியாவின் கழுத்தை அன்புடன் கட்டிக் கொண்டாள், கிரிஜா. என். நித்யா