குளிர்கால உணவுகள்!
சுக்கு - துளசி காபி! தேவையானவை: தனியா - ஒரு கப் சுக்குத்துாள் - அரை கப், மிளகு - கால் கப் ஏலக்காய் - 10 துளசி இலைகள் - ஐந்து. செய்முறை: வெறும் வாணலியில் தனியா, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இதுவே, சுக்கு காபி துாள். ஒரு கப் தண்ணீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அருந்தலாம். ********** திரிகடுக குழம்பு! தேவையானவை: சுக்கு - சிறிய துண்டு, மிளகு - ஒரு தேக்கரண்டி, திப்பிலி - நான்கு, புளி - நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் - 10 பல், மிளகாய் துாள் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து ஆறியதும் அதனுடன், ஐந்து சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் துாள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். இத்துடன், அரைத்த விழுதையும், மிளகாய் துாளையும் சேர்த்து, கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.********மிளகு - பூண்டு குழம்பு! தேவையானவை: மிளகு - 4 தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 10 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 கறிவேப்பிலை - சிறிதளவு புளி - எலுமிச்சை அளவு, கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மிளகு -- பூண்டு குழம்பு ரெடி! *********சுக்கு - மிளகு சாதம்! தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், சுக்குத்துாள் - ஒரு தேக்கரண்டி, மிளகுத்துாள், சீரகம் - தலா 2 தேக்கரண்டி முந்திரி - 10 இஞ்சித்துருவல், கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, நெய் - தேவையான அளவு செய்முறை: பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் போட்டு, அதனுடன், சீரகம், இஞ்சி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்த சாதத்துடன் சேர்க்கவும். மிளகுத்துாள், சுக்குத்துாள் துாவி பரிமாறவும். *********பூண்டு சட்னி! தேவையானவை: பூண்டு பற்கள் - ஒரு கப், சின்ன வெங்காயம் - கால் கப், காய்ந்த மிளகாய் - எட்டு, கடுகு - கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை, புளி - சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பூண்டுடன், வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சுருள கிளறி இறக்கவும். சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். ***********ஹெர்பல் கஷாயம்! தேவையானவை: வெற்றிலை - ஐந்து, ஓமவல்லி இலைகள் - இரண்டு, துளசி இலைகள் - ஐந்து தண்ணீர் - ஒரு கப் தேன் - தேவையான அளவு. செய்முறை: வெற்றிலையின் காம்பு நுனி நீக்கி, பொடியாக நறுக்கவும். தண்ணீரில் வெற்றிலை, ஓமவல்லி இலைகள், துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி அருந்தலாம். குறிப்பு: செரிமானக் கோளாறு மற்றும் சளி, இருமலை சரியாக்கும். *******தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை, எந்த காய் பயன்படுத்தி வறுவல் செய்தாலும், சிறிதளவு துாவி இறக்கினால், சுவையாக இருக்கும்.