யாமறிந்த மொழிகளிலே...
'சின்னத்தான், உங்க அக்கா மகன், சுரேஷை கம்பெனியில சேர்த்து ஆளாக்கி விட்டுட்டீங்க. அதுபோல என் மகனுக்கும் ஒரு வழிகாட்ட முடியுமா?'' என் மனைவி மாலதியின் அக்கா, பார்வதி கண்ணீருடன் கேட்டார். பெரியத்தான் இறந்த, பதினாறாம் நாள் பூஜைக்கு பின், அவளிடம் விடைபெற்று, ஹைதராபாத் கிளம்ப இருந்தேன். திடுப்பென இப்படியொரு விண்ணப்பம். கதிர்வேலனைப் பார்த்தேன். மாவடுவும், தயிர் சாதமும் கவளம் கவளமாக இறங்கி கொண்டிருந்தது. சரியான சாப்பாட்டு ராமன். லேசாக கருமை படர்ந்திருந்த மொட்டைத் தலை. தயிரும், பாலும் ஊட்டப்பட்ட செழித்த தொப்பை. பெண் போல் நெளி நடை. சுட்டுப்போட்டாலும் வராத ஆங்கிலம். வாயடி கையடி செய்து பிழைக்க வேண்டிய வணிகத்துறை இந்த கிராமத்தானுக்கு சரிப்படுமா? உதவித்தொகையில் படித்து, ஒரு வணிக நிறுவனத்தில், 1-0 ஆண்டுகள் உழைத்து, நெளிவு சுளிவுகள் கற்று, உழைப்பும், சாதிக்க வேண்டும் எனும் வெறியும் சேர, விஞ்ஞான உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் துவங்கினேன். வெற்றிகரமான தொழிலதிபர் ஆனேன். என் தங்கை மகன் சுரேஷ் என்னிடம் வளர்ந்தவன். வணிகப் படிப்பை முடித்து, சூட்சுமங்கள் புரிந்து, என் நிறுவனத்தில் பணியாற்றுகிறான். அவனைப் போல கதிர் ஆக முடியுமா? அவனது அறிவு, உழைப்பு, ஆங்கில தேர்ச்சி, தன்னம்பிக்கை வெளிப்படும் தோற்றம் ஏதேனும் ஒன்று இந்த காட்டானுக்கு உண்டா? சுரேஷ் டூரிலிருந்து வந்து விட்டாலே ஆபிசில் சந்தோஷம் தான். எங்கு டூர் போனாலும் அங்கிருந்து ஆபிஸ் பணியாளர்களுக்கு ஏதாவது வாங்கி வந்து தருவான். நான் பார்த்தால், 'மத்த வேலைகளை தள்ளி வெச்சுட்டு நான் கேட்கிறதை உடனே முடிச்சு குடுக்கிறாங்க. நேற்று மிஸ். தீபிகா அந்த வெண்டரை எழுதிட்டு போனதால தான் நம்மால உடனே அனுப்ப முடிஞ்சது. அவங்க ஒத்துழைப்பிற்கு சிறிய பரிசு...' என்பான். எல்லாருக்கும் ஐஸ் வைத்து காரியத்தை முடிப்பதில் சமர்த்தன். 'சுஜா மேம். உங்க பேபிக்கு சிங்கப்பூரிலிருந்து பந்து வாங்கி வந்தேன்...' குழந்தை பிடித்து கொள்ளத்தக்க சிறிய மென்மையான பந்துகள் இருக்கும் பை கைமாறும். 'ராவ் சார். உங்க சன்னுக்கு இந்த போல்டர். ஆனந்த் ஷர்மாவிற்கு, ரேஸர், மெஹ்ரூன் மேம், ஹேண்ட் பேக் பிடிச்சிருக்கா?' என்பான். இந்த சாமர்த்தியமெல்லாம் எல்லாருக்கும் வந்து விடுமா? நா ன் பதில் சொல்லும் முன் கால்களில் விழுந்திருந்தான், கதிர். கைகளை கெஞ்சலோடு பிடித்திருந்தாள், பார்வதி. எப்படி தவிர்க்க. ''ஒரு நல்ல நாள் பார்த்து அனுப்புங்க. முயற்சி செய்யறேன்.'' ''அப்பா.'' என்னையா கூப்பிட்டான். எனக்கு குழந்தைகளில்லை. யாரும், என்னை அப்பா என அழைத்ததில்லை. சிலிர்த்தேன். ''சொல்லுப்பா.'' ''நான் இப்பவே ரெடி தான்,'' என்றான், கதிர். ''சரி கிளம்பு.'' ''என்ன செய்யப் போறீங்க?'' என கிசு கிசுத்தாள், மாலதி. ''மும்பை, நொய்டா, பூனான்னு அனுப்பலாம்.'' ''பாஷை தெரியாதே.'' ''கம்பர்ட் ஸோன்லருந்து வெளியே வந்தா தான் உழைப்பு வரும். '' என்ன படிச்சிருக்கே, கதிர்.'' ''இளங்கலை ரசாயனம்.'' சயின்ஸ் ஸ்டுடண்ட்ஸ் என்பது வசதி. இன்ஸ்ட்ருமென்ட்ஸ் குறித்து புரியும். ''சம்பளம்லாம் ஆரம்பத்தில் ரொம்ப கிடைக்காது. நீ முயற்சி செய்து இன்ஸ்ட்ரு மென்ட்ஸ்லாம் விற்கணும்.'' ''யாரிடம்?'' ''மருந்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள் நிறைய இருக்கு. அங்கெல்லாம் ஆராய்ச்சிகள் செய்யும் விஞ்ஞான உபகரணங்கள் தேவையாயிருக்கும். அவற்றை விற்பது தான் உன் வேலை.'' ''சரிப்பா.'' ''அது எளிதில்லைப்பா. விற்பனை பிரதிநிதிகளை உள்ளேயே விட மாட்டாங்க. தொழிற்சாலை வாசலில் வாட்ச்மேன் இருப்பார். அவரிடம் கெஞ்சி, கொஞ்சி உள்ளே போய் காரியம் சாதிக்கணும். போட்டி நிறுவனப் பிரதிநிதிகளையும் சமாளிக்கணும்,'' என்று கூறி, உபகரணங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய, 'லிட்ரெச்சரை' அவனிடம் தந்தேன். புரட்டினான், அவன். ''இதெல்லாம் என் பாடத்தில் வரலையே!'' ''இதுக்கு லிட்ரெச்சர்ன்னு பேரு. நீ விற்க வேண்டிய உபகரணம் குறித்து, அதில் விளக்கியிருக்கு. இந்த விபரங்களை படிச்சு தெரிஞ்சுக்கோ. நம் ஆபிஸ்ல சிலரை அறிமுகம் செய்யறேன். அவர்களிடம் உன் சந்தேகங்களை கேட்டு புரிஞ்சுக்கோ.'' பூ னாவில் என் அலுவலகம் ஊருக்கு வெளியே இருந்தது. அந்த பகுதியில் பொழுது போக்கு அம்சங்கள், மருத்துவமனை ஏதுமில்லை. அங்கு பணியாற்ற எல்லாருக்கும் வேப்பங்காயாக இருக்கும். ஆனால், பல முக்கிய நிறுவனங்களின் ஆராய்ச்சி கூடங்கள் அந்த பகுதியில் தான் இருந்தன. அவை தான் என், 'டார்கெட்!' அவற்றில் சிரத்தையாக முயன்றால், விற்பனையில் சாதிக்கலாம் என்பது என் கணிப்பு. ''ஆபிசை ஒட்டி ரூம் இருக்கு. அதுல தங்கிக்க.'' ''சரிப்பா.'' ''அங்க வேலை செய்யறவங்களாம் நகரத்துல தங்கியிருக்காங்க. டூர் போகாதப்ப ஆபிஸ் வருவாங்க. ஒரு காவலாளி இருக்கார்.'' ''நான் பார்த்துக்கிறேன்பா.'' ''ஒரு சைக்கிள் வாங்கித் தரேன். குல்கர்னி ஒருநாள் உன்னை அழைச்சிட்டு போய் சுற்றிக் காட்டுவான். பழகிக்கோ,'' என்றான், சுரேஷ். கதிர் விடைபெற்றான். நான் கவலையுற்றேன். மாலதி, சன்னாவை பரிமாரிக்கொண்டே, வீட்டு விஷயங்கள் பேசினாள். ''அக்கா காஸ் அடுப்பு, குக்கர் கொடுத்திருக்காங்க. புளிக்காய்ச்சல், ஊறுகாய், பருப்பு பொடி எல்லாம் செஞ்சு தந்திருக்காங்க. பால் நல்லாயிருக்கும். தயிர் சாதத்திற்கு பஞ்சமில்லை.'' ''மாவடு கொடுத்திருக்காளா?'' என்று கேட்டு சிரித்தேன். நா ன்கு மாதங்கள் கடந்தன. கதிரிடமிருந்து எந்த விற்பனை பில்லும் வரவில்லை. எளிய உபகரணங்கள் கூடவா விற்க முடியவில்லை. என்ன செய்கிறான்? சாப்பிட்டு துாங்கி விடுகிறானா. இரண்டு முறை ஊருக்கு சென்றதாக கூறினர். மிக மெதுவாக விற்பனைகள் துவங்கின. முக்கியமான, 'மீட்டிங்'கை முடித்து விட்டு, வந்தபோது நிதி மேலாண்மை அதிகாரியான, ரெண்டலா கிசுகிசுத்தார். ''கதிர் சூப்பரா செய்யறார், சார். தினமும் அவர்ட்ட இருந்து சேல் பில்லும், செக்கும் வருது. ''அட!'' ''தினசரி, 'ஆர்டர்'கள் வருது. புது, 'கஸ்டமர்'களை பிடிச்சிருக்கார்.'' நிறைவாக இருந்தது. எப்படி சாதித்தான். அ மெரிக்கா புறப்பட இரண்டு நாள் இருந்தது. பூனாவிற்கு கிளம்பினேன். நான் போன போது காலை 5:00 மணி. கதிர் துாங்கிக் கொண்டிருப்பான் என, எதிர்பார்த்தேன். குக்கரில் சாதம் வெந்து கொண்டிருக்க, குளித்துக் கொண்டிருந்தான், கதிர். தினசரி சைக்கிளில் சுற்றியதில் உடல் வடிவம் பெற்று, சுருட்டை முடி நெற்றியில் விழ அழகாக இருந்தான். என்னைப் பார்த்ததும் சந்தோஷமாக சிரித்தான். ''தயிர் சாதமும், மாவடுவும் இருக்குப்பா.'' ''நீ என்ன சாப்பிடுறயோ அதையே சாப்பிடுறேன்,'' என்றேன். தயிர் சாதம் பிசைந்து மதிய உணவாக வைத்தான். சுவரோரமாக பால்கோவா பாக்கெட்டுகள், ஊறுகாய் பாக்கேட்டுகள். லிட்ரெச்சருடன் பால் கோவா, ஊறுகாய் பாட்டில்கள் எடுத்து கொண்டு, காலை 7:00 மணிக்கு சைக்கிளில் கிளம்பி விட்டான். பின் சீட்டில் அமர்ந்தேன். ''நமஸ்தே பையா,'' என்றவன், நிறுவனம் ஒன்றின் வாசலில் ஸ்டூலில் அமர்ந்திருந்தவனிடம் ஸ்வீட்டையும், ஊறுகாயையும் கொடுத்தான். ''வீட்டில் எங்கம்மா செஞ்சது,'' என, ஹிந்தியில் தட்டுத்தடுமாறி பேசினான். மலர்ந்த முகத்துடன், ''சேல்ஸ் ஆளுங்களை வரச் சொன்னாங்கன்னா, நீ குடுத்திருக்கியே கார்டு அதுக்கு போன் செய்யறேன்,'' என, வாட்ச்மேன் கூற, நன்றி சொன்னான், கதிர். இன்னொரு ஆராய்ச்சி கூட வாட்ச்மேன் நண்பன் போலும். ஸ்வாதீனமாக பேசினான். ''நினைவிருக்கு, கதிரு,'' என்றான், அவன். மற்றொரு காவலாளியுடன் மதிய உணவு. ''தினமும் இந்த வழியாகத்தான் போறேன், திரும்பறேன். அப்ப இவர்களோடு பேசுவேன்,'' என்றான், கதிர். ''உனக்கு ஹிந்தி தெரியாதேடா,'' என்றேன். ''கொஞ்சம் கொஞ்சம் புரியுதுப்பா. எத்தனை நிறுவனம் முடியுமோ அத்தனைக்கும் தினம் போவேன். எல்லாரும் பிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. ஒருநாள் என்னாச்சு தெரியுமா?'' என்று நடந்ததை கூறினான். கதிர் ஆர்டர்களை வென்ற விதம் எனக்கு புரிந்தது. ''உபகரணம் பத்தியெல்லாம் தெரிஞ்சுகிட்டயா?'' ''முழுசா புரியலைப்பா. லிட்ரெச்சரை கொடுத்துட்டு கொஞ்சம் பேசுவேன். சந்தேகமிருந்தா ஆபிசுக்கு போன் செய்வேன். அவங்க பேசி முடிச்சுடுவாங்க.'' வ ருடாந்திர சேல்ஸ் மீட்டிங்கில், கதிர் சிறந்த புதுமுக சேல்ஸ்மேன் விருதை பெற்றான். 'இடம் புதிது, மொழி தெரியாது, தொழில்நுட்ப அறிவும் குறைவு. எப்படி சாதித்தான், கதிர்?' என வியந்தனர், மற்ற பிரதிநிதிகள். மனுஷனா பிறந்தவங்க எல்லாரும் பிறருக்கு தர வேண்டியதும், பெற வேண்டியதும் அன்பும் மனிதாபிமானமும் தான். ஒருநாள் கதிர் அறைக்கு திரும்பி கொண்டிருந்த போது, தலையில் அடிபட்டு ஒருவர் ரத்தம் சிந்த விழுந்து கிடந்திருக்கிறார். போலீஸ் கேஸ், வில்லங்கம் என ஓடி ஒளியவில்லை, கதிர். 'சிங் சார், சிங் சார், க்யா ஹேப்பண்ட்?' உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தவனை, சைக்கிளில் அமர்த்தி, தோளில் சாத்தியவாறு சைக்கிளைத் தள்ளிக் கொண்டே, மருத்துவமனைக்கு அழைத்து வந்து, உடைந்த ஹிந்தியில் டாக்டரிடம் பேசி, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கான்; ரத்த தானம் செய்து அவர் உயிரை காப்பாற்றியிருக்கான். 'கதிர் அழைத்து வரவில்லையெனில், அவர் இறந்திருப்பார்...' என டாக்டர் சொல்ல, அப்போது முதல், அந்த பகுதியில், 'ஹீரோ' ஆகிவிட்டான், கதிர். அவர் மூலம் நிறைய பேரை தெரிந்து கொண்டிருக்கிறான். ஒரு விற்பனை பிரதிநிதியாய் அன்றி, நண்பனாய் எல்லாருடனும் பழகியிருக்கான். உடல்நலமில்லாத அப்பா, கல்யாணமாகாத அக்கா என, சக மனிதர்களின் பிரச்னைகளை அனுசரித்து, ஆறுதல் கூறி, அன்பை பகிர்ந்திருக்கிறான். விற்பனை பிரதிநிதிகளின் இலக்கணமான கல்வியறிவு, டை கட்டிய உடை, எடுப்பான தோற்றம் எனும் எழுதா சட்டத்தை ஈரநெஞ்சென்னும் ஆயுதம் கொண்டு, உடைத்துள்ளான், கதிர். கனிவும், கருணையும் தான் கண் இழந்தவர்களும், செவிடர்களும் கூட உணரும் மொழி. அதை கதிர் நன்றாக கற்றிருக்கிறான். 'கதிர், நீ விற்றது, சயன்டிபிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இல்லையடா! அன்பை, நட்பை, கருணையை, மனிதாபிமானத்தை! 'என் மொழி, உன் மொழி, அயல் மொழி, அந்நிய மொழி என, புண்மொழி பேசியவர்களை தன் அன்பு மொழியால் அரவணைத்தான். மொழிச் சண்டையிடுவோர் மறந்த மன மொழி...' மனிதாபிமானத்தை பேசியதால், கதிர் பாரட்டு மொழியில் நனைகிறான். கைதட்டல் காதை பிளந்தது. கே. குருமூர்த்தி வயது: 77. படிப்பு: எ ம்.காம்., வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சொந்த ஊர்: சீர்காழி. கதைக்கரு பிறந்த விதம்: தெரிந்த குடும்பத்தில், மிக சாதாரணமாக கருதப்பட்ட ஒரு இளைஞன், உழைப்பு, அன்பு, நட்பு போன்றவற்றின் வாயிலாக வாய்ப்பு கிடைத்து, உயர்நிலைக்கு சென்றான். இதிலிருந்து, வாய்ப்பு கிடைத்தால் யாராக இருந்தாலும் சாதிப்பர் என்ற, கருத்தை பதிவு செய்ய நினைத்ததில், பிறந்தது இக்கதை. மக்களை மேம்படுத்தக்கூடிய வகையில் த ரமான படைப்புகளை, எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.