அந்துமணி பா.கே.ப.,
பா - கேஅலுவலகத்தில் நுழையும்போதே, மொபைல் போனில், 'சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காதீர் ஓய்... நீர் செஞ்சது ரொம்ப தப்பு. இனி, என்னுடன் பேசவே பேசாதீர்...' என்று, யாரையோ திட்டியபடி உள்ளே வந்தார், லென்ஸ் மாமா.'என்ன மாமா பிரச்னை... ஏன் இவ்வளவு கோபம்?' என்றேன்.'----- பெயரை குறிப்பிட்டு, இவனை உனக்கு தெரியும் தானே... முக்கியமான இடத்துக்கெல்லாம் நான் போகும் போது, இவனையும் அழைச்சுகிட்டு போயிருக்கிறேன். ஆனா, இவன், சமீபத்தில் நடந்த பட விழா ஒன்றுக்கு எனக்கு தகவல் கூட சொல்லாம போயிருக்கான்பா.'சரக்கு, நான் - வெஜ் அயிட்டங்கள் மற்றும் சினிமா, 'கில்மா'க்களின் டான்ஸ் என்று அமர்க்களப்பட்டுதாம். இவன் மட்டும், 'என்ஜாய்' பண்ணிட்டு வந்திருக்கான், களவாணி பயல். 'இப்ப, சினிமா பொன்னையா சொல்லி தான் விஷயமே தெரிய வந்தது. அதான், பிரிச்சு மேய்ஞ்சுட்டேன். இனி, அவனோடு பேசவே போறதில்லை...' என்று, பொரிந்து தள்ளினார், மாமா.கேட்டுக் கொண்டிருந்த எனக்கும், உ.ஆசிரியைகளுக்கும், 'ச்சே...' என்றாகி விட்டது.'இதற்கா இந்த ஆவேசம்? என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்...' என்று அங்கலாய்த்தார், ஒரு, உ.ஆ.,இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாள நண்பர், மாமாவை சமாதானப்படுத்தும் விதமாக பேச ஆரம்பித்தார்:'நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிறது இல்ல சார்'ன்னு, ஒருத்தர் சொல்றார்ன்னா என்ன அர்த்தம்? அவங்களுக்குள்ள ஏதோ மனஸ்தாபம்ன்னு அர்த்தம் அல்லது இருவருக்கும் ஒத்து வரவில்லை என்று வைத்துக் கொள்ளலாம். பிடிக்கலேன்னா ஒருத்தருக்கொருத்தர் பேசாம இருக்கிறதும், கொஞ்ச நாள் கழிச்சு ரெண்டு பேரும் சமாதானம் ஆகி, மறுபடியும் பேசிக்கிறதும் இயல்பானது தான். இது, வெளி நபர்களுக்கு பொருந்தும்.இதே உறவுக்குள், குறிப்பாக, கணவன் - மனைவிக்கு பொருந்தாது. எப்படின்னா, கோபம் வந்தா, உடனே ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிறதை விட, இப்படி பேசாம இருந்துடறது எவ்வளவோ பெட்டர்!இப்படி ஒரு வழி இருக்கிறதுனால தான், இன்னைக்கு எவ்வளவோ குடும்பங்கள் ஒரு மாதிரியா, 'அட்ஜஸ்ட்' பண்ணி போய்க்கிட்டிருக்கு.கணவன்- - மனைவிக்குள்ள கோபம் வந்தா, உடனே, கொஞ்ச நாட்களுக்கு, ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருந்துடறது சகஜம். இது, நம் ஊர்ல மட்டும்தான்னு நினைக்காதீங்க, உலகம் பூராவும் உண்டு.நாள் கணக்கில் பேசிக்காம இருக்கிறதை பார்த்திருக்கிறோம். சில இடங்களில், ஆண்டுக்கணக்குல பேசிக்காம இருக்கிறதையும் பார்த்திருக்கிறோம். 50 ஆண்டுகளா ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருந்த, பொன்விழா தம்பதியரை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான, ஹங்கேரியின் தலைநகர், புடாபெஸ்ட் நகரத்தில், ஹெல்லி என்ற தம்பதியர் தான், இந்த பொன்விழா தம்பதியர். 1866லிருந்து, 1889 வரை, அவங்களுக்கு இடையே ஏதோ ஒரு சச்சரவு ஏற்பட்டுள்ளது. உடனே, பேசிக்கிறதை நிறுத்திக்கிட்டாங்க.யார் முதல்ல பேசறாங்க பார்த்துக்கலாம்ன்னு, அவங்களுக்குள்ள போட்டி. இப்படியே, 50 ஆண்டு ஓடிடுச்சு. பேச்சை தான் நிறுத்திக்கிட்டாங்களே தவிர, ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிஞ்சுடல. இல்லற வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் இல்ல. ஏழு குழந்தைகளை பெத்துக்கிட்டாங்க. ஆனா, பேசிக்கிறது மட்டும் இல்ல. இது, எப்படி இருக்கு?புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோவின் மகள் அடெலிங், 65 ஆண்டுகளாக, யார் கூடவும் பேசலையாம். என்ன காரணம் தெரியுமா?அந்தப் பெண், தன், 20வது வயசுல ஆங்கில மத குருவின் பிள்ளையான ஆல்ப்ரெட் பின்ஸென் என்பவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா. கொஞ்ச நாள்ல அந்தப் பையனுக்கு, இவளைப் பிடிக்கல, வெறுத்து ஒதுக்கினான்.உடனே, இந்தப் பெண் ரொம்பவும் நொந்து போய், அப்பாகிட்ட வந்து, 'நான் சாகற வரைக்கும் யார் கூடவும் பேச போறதில்லை...' என்று கூறி, சபதம் எடுத்துக் கிட்டாளாம். அதே மாதிரி, அவள் சாகற வரைக்கும் அதாவது, 65 ஆண்டுகளாக, யார் கூடவும் பேசவே இல்லையாம். இது ரொம்பவும் ஆச்சரியமா இருக்குல்ல!அமெரிக்காவுல, டென்வர் நகரத்துல, ஹிராம் கில்கோர்ன்னு ஒருத்தர்.ஒருநாள் வேலையிலிருந்து ரொம்பவும் களைச்சுப் போய் வீட்டுக்கு வந்திருக்கார். வீட்டுக்கார அம்மா, சாப்பாடு சரியா தயார் பண்ணி வைக்கலையாம். அதுமட்டுமில்ல அந்த நேரம், அந்தம்மா துணிகளைத் துவைச்சிக்கிட்டு இருந்தாங்களாம். அவ்வளவு தான், இவருக்குக் கோபம் வந்துட்டுது, பேச்சை நிறுத்திக்கிட்டார். எவ்வளவு காலமா தெரியுமா, 21 ஆண்டு!லாஸ் ஏஞ்செல்ஸ்ல, எவாவில்மர்ன்னு ஒருத்தர். தன் மனைவிக்கு, திருமண ஆண்டு விழா பரிசு ஒண்ணும் வாங்கிக் கொடுக்கலையாம்! ஒன்பது ஆண்டு பேச்சு கட்! பெல்பாஸ்ட் நகரத்துல, ஜான்டிம்ன்னு ஒருத்தர். 14 ஆண்டு, தன் மனைவிகிட்ட பேசலையாம்! 'இது மாதிரி காரணத்துக்கெல்லாம் நம் ஊர்ல பேச்சை நிறுத்தறதுன்னு ஆரம்பிச்சா, அவ்வளவு தான்! பல வீடுகளுக்கு பாஷையே தேவைப்படாம போயிடும்.'சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவிச்சுட்டு, பேசாம இருக்கிறது, உம்மை போன்றவர்களுக்கு அழகா...' என்று தன்மையாக பேசினார், எழுத்தாள நண்பர்.'சரி... சரி... அவனை அப்புறமா கவனிச்சுக்கிறேன்...' என்று கூறி, கேமராவை துாக்கிக் கொண்டு, வெளியே கிளம்பினார், லென்ஸ் மாமா.பகுழந்தை ஒன்று, ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டது. உடனே, குழந்தையை துாக்கி கொண்டு, மருத்துவமனைக்கு புறப்பட்டாள், தாய். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர், தாயின் பதற்றத்தை பார்த்து, 'என்ன?' என்று விசாரித்தார். இவரும் சொன்னார்.'குழந்தையை இப்படி கொடுங்க...' என்று வாங்கினார். அந்த குழந்தையின் கால் இரண்டையும் ஒரு கையால் பிடிச்சு, தலைகீழாக துாக்கிப் பிடித்தார். இன்னொரு கையால், அந்த குழந்தையின் முதுகில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் தட்டினார்.உடனே, குழந்தையின் வாய் வழியாக காசு வெளியே வந்து விழுந்தது. காசை எடுத்துக்கிட்டு, 'இந்தாங்க உங்க குழந்தை...' என்று கொடுத்தார்.'ரொம்ப நன்றி... நீங்க, ஒரு டாக்டராத் தான் இருக்கணும்...' என்றார், குழந்தையின் தாய்.'இல்லீங்க... நான் வருமான வரி துறை அதிகாரி...' என்று கூறி, அங்கிருந்து நகர்ந்தார்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.