மகரசங்கராந்தி கொண்டாடும் முறைகள்!
பொதுவாக, இந்தியா முழுவதும், மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது என்றாலும், இடத்திற்கு இடம் கொண்டாட்டங்கள், வேறுபடுகின்றன.ஆடி மாதத்தில் விதைக்கும் பயிர், தை மாதம் அறுவடை செய்யப்படுவதால், அறுவடைத் திருநாளாகவே பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகை காலம் காலமாக கொண்டாடப்பட்டு வந்ததற்கான, இலக்கியச் சான்றுகள் பல உள்ளன. 'சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த இந்திர விழாவே, தற்போது, மூன்று நாள் விழாவாக விளங்கும் பொங்கல் பண்டிகை...' என, கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.ஒருசமயம், பஞ்சத்தால் தமிழகம் வறண்டபோது, அகத்திய முனிவர், இந்திரனை அழைத்து மழை பெய்ய வைத்துப் பஞ்சத்தைப் போக்கினாராம். அன்று முதல், இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக நடந்து வந்தது, இந்திர விழா.இவ்விழாவைப் பற்றி சிலப்பதிகாரம் விரிவாக கூறுகிறது. இதுவே காலப்போக்கில் மாறியது என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இன்னமும் நாம் பொங்கலுக்கு முந்தைய நாளை, போகி என்றே கொண்டாடுகிறோம் என்பது தான். இந்திரனுக்கு, போகி என்றும் ஒரு பெயர் உண்டு.போகிப் பண்டிகை: மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்...' என்ற தமிழர் வரலாறு எதிரொலிக்கிறது.ஆண்டுக்கு ஒருமுறை பொங்கலை ஒட்டி வீட்டைச் சீரமைத்து, வெள்ளை அடித்து, அழகு செய்வர். உதவாத பொருட்களை தீயிட்டு கொளுத்துவர். இதன் உட்கருத்து, மனதில் உள்ள பழைய அழுக்குகள் போய், நெருப்பின் வெளிச்சம் போன்ற ஒளி எங்கும் பரவட்டும் என்பது தான்.பொங்கல் திருநாள்: தை மாத முதல் நாளே, பொங்கல் திருநாள். அன்று, வீட்டு வாயிலில் மாவிலை தோரணம் கட்டுவர். சிறிய குருவிகளும், பறவை இனங்களும், கொத்தித் தின்று மகிழ வசதியாக, நெற்கதிர்களை வீட்டு வாசலில் கட்டித் தொங்க விடுவர்.அதிகாலையில் எழுந்து, நீராடி, வாசலில் கோலமிடுவர். பின், புது பானையின் கழுத்தில் மஞ்சள் குலையைக் கட்டி, விபூதி குங்குமம் வைத்து, புதிய பச்சரிசியை பானையில் இட்டு, அதில் பாலை ஊற்றி, அடுப்பில் ஏற்றுவர். பொங்கியவுடன், 'பொங்கலோ பொங்கல்...' என, குரலெழுப்பி பின், பொங்கலைச் சூரியனுக்குப் படைத்து, குடும்பத்துடன் உண்டு மகிழ்வர்.மாட்டுப் பொங்கல்: நம் வாழ்வு விவசாயம் சார்ந்ததாகவே இருந்து வந்தது. அதற்கு உறுதுணை மாடுகள். எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகிறான் என உணர்ந்து, கொண்டாடப்படுகிறது.காணும் பொங்கல்: கனி காணும் பொங்கல் என்பதே, காணும் பொங்கல், கணுப் பொங்கலாக திரிந்தது. பொங்கலுக்கு மறுநாள், முகம் பார்க்கும் கண்ணாடி முன், பல வகையான பழங்கள், புது அரிசி, புதுப்பானை, பருப்பு, கருகமணி, காய் வகைகள், தங்கம், காசு ஆகியவற்றை, சாமி அறையில் வைத்து விடுவர்.அன்று விழித்தெழுந்ததும், முதலில் அதைக் காண வேண்டும். இவ்வாறு செய்தால், ஆண்டு முழுவதும் செழுமையும், நல்ல விளைச்சலும் இருக்கும் என்பது நம்பிக்கை.காலங்கள் எத்தனை மாறினாலும், பண்டிகைகளும், அதைச் சார்ந்த கொண்டாட்டங்களும் மாறாது. பொங்கலன்று, அவரவர் பாரம்பரிய முறையை அனுசரித்து, சூரிய பகவானைப் பிரார்த்தித்து, எல்லா நன்மைகளையும் அடைவோம்.பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்! - வி. உதயகிருஷ்ணன்