அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது: 36. நான், 'இ-சேவை' மையம் வைத்துள்ளேன். மனைவிக்கு வயது: 33. எங்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை.திருமணத்திற்கு முன், மனைவிக்கு சமையலே தெரியாது. இங்கு வந்து, 'யு - டியூபில்' பார்த்து தான் சமைத்தாள்; இப்போது, நன்றாகவே சமைக்கிறாள். திறமைசாலி தான்.திருமணமான காலத்திலிருந்தே அதிகம் பேச மாட்டாள். திருமணத்திற்கு முன்பே, வேலைக்கு செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், வீட்டில், தனியறையில் படுத்து துாங்குவாள். அவள் அம்மாவிடம் எப்பவாவது பேசுவாள். ஆன்ட்ராய்டு மொபைல் வந்ததிலிருந்து, 'வாட்ஸ் ஆப்'பில், 'ஸ்டேட்டஸ்' வைப்பது என்று இருப்பாள்.உடல் உழைப்பு குறைவு. குண்டாக மாறி விட்டாள். உடல் எடையை குறைக்க, 'வாக்கிங்' செல்ல சொன்னால், முடியாது என்றாள். சிறிது யோசனை செய்து, 'திருமணத்திற்காக கடனாக வாங்கிய, 20 ஆயிரம் ரூபாயை நான் அடைக்கிறேன். அதற்கு, நீ உடல் எடை குறைக்கும் வரை நடக்க வேண்டும்...' என்று சொல்லி, ஆறு மாத காலத்திற்கு, 'வாக்கிங்' செய்ய வைத்தேன்.ஆனால், ஆறு மாதத்திற்கு பின், என் பேச்சை கேட்கவில்லை. வீட்டிற்குள் காலையில் ஒரு சில வேலைகள் முடித்து அறைக்குள் சென்றால் அங்கேயே இருப்பாள். அதனால், வேலைக்கு செல்ல சொன்னேன். முடியாது என்கிறாள். அப்படியும் வேலைக்கு முயற்சி செய்தபோது, இவளின் வயதை காரணம் காட்டி, வேலை கிடைக்கவில்லை.நான், காலையில் வேலைக்கு செல்லும்போதும், மதியம் உணவு இடைவேளையில் வந்தாலும், அவள் அம்மாவிடம் மொபைலில் பேசிக் கொண்டிருப்பாள். இரவு துாங்கும் முன் வரை, அம்மாவிடம் பேசுவாள்.என்னிடம் அன்பாகவும், அன்னியோன்யமாகவும் பேசியே பல நாட்கள் ஆகி விட்டன. எங்களுக்குள் சரியான தாம்பத்தியமே இல்லை. அவளுக்கு தைராய்டு பிரச்னை உள்ளது. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாள். எந்த விஷயத்திலும், என் பேச்சை கேட்கவே மாட்டாள். அவள் விருப்பத்திற்கு தான் செய்கிறாள்.இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என்று ஆலோசனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.— இப்படிக்கு,அன்பு மகன்.அன்பு மகனுக்கு —மனைவி மீது கூறிய, உன் மூன்று பிரதானக் குற்றச்சாட்டுகளை நிதானமாக ஆராய்வோம்.திருமணமான ஒரு ஆண்டில், 90 சதவீத ஆண்-, பெண்கள் குண்டாகி விடுகின்றனர். தாம்பத்ய மகிழ்ச்சி, சிறப்பான வீட்டு உணவு, ஹார்மோன் மாற்றம், பிரசவத்தின் முன்பின் பக்கவிளைவுகள், ஊளைச் சதையை பரிசளிக்கின்றன.மனைவிக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாக கூறி இருக்கிறாய். ஆறு வகை தைராய்டு பிரச்னைகள் உள்ளன.உன் மனைவிக்கு எந்த வகை தைராய்டு பிரச்னை உள்ளது என்பதை தெரிந்துகொள். தைராய்டு சிறப்பு மருத்துவரிடம், மனைவியை காட்டு. தொடர் சிகிச்சையுடன், வழக்கமான வாழ்க்கை வாழலாம்.பெருந்தீனி தின்னக் கூடாது. தைராய்டு பிரச்னைக்கு முறையான சிகிச்சை அளித்தாலே, மனைவியின் சோம்பல் நீங்கி விடும். துாக்கம் குறையும், 'வாக்கிங்' செல்ல சம்மதிப்பாள். மனைவியின், 33 வயதை காரணம் காட்டி, யார் வேலை தர மறுத்தனர். தனியார் நிறுவன பணி எதற்காவது அனுப்பு. முதலில் முரண்டு பண்ணினாலும், தன் கையில் பணம் புரள்வது கண்டு மனம் மாறுவாள், மனைவி.திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற விரக்தியும் கூட, மனைவி தாம்பத்யத்துக்கு ஒத்துழைக்க மறுக்க ஒரு காரணம்.நீயும், மனைவியும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறை யாரிடம் இருந்தாலும் சிகிச்சையால் நிவர்த்தி செய்து கொள்ளலாம். 65 சதவீத தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை, மரபணுக்களே தீர்மானிக்கின்றன.நாளை உன் மகனுக்கோ, மகளுக்கோ கூட தைராய்டு பிரச்னை வரலாம். வந்தால் கட்டுப்படுத்த சிறப்பான வைத்தியம் உண்டு. மனைவி மீது காதல் இருந்தால், அவளது குறைகள் அற்பமாய் சிறுத்து விடும். அவளின் விருப்பங்களை கண்ணியப்படுத்து. குழந்தை இல்லாத பிரச்னையை மனதிலிருந்து துாக்கி எறிந்து விட்டு, மனைவியுடன் சந்தோஷமாக இரு.மாதம் ஒருமுறை அவளுடன் சுற்றுலா சென்று வா. மனைவியின் தைராய்டு பிரச்னையை அடிக்கடி குத்திக் காட்டாதே.நோயே இல்லாமலிருப்பது ஆரோக்கியம் அல்ல; நோயை கட்டுப்படுத்தி காலுக்கு கீழ் மிதித்து வைத்திருப்பது தான் ஆரோக்கியம். — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.