உருவமும், உள்ளமும்!
காட்டில், ரொம்ப நாளா தவம் பண்ணிக்கிட்டு இருந்தார், ஒரு முனிவர். அவருக்கு ஒரு சக்தி வந்தது.அவர் முன், ஒரு எலி, பயந்து நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.அதற்கு காரணம், தன் பின்னால் நிற்கும் பூனை தான் என்பதை அறிந்து, தன் தவ வலிமையால், அந்த எலியை, பூனையாக மாற்றினார்.'இனிமேல், அந்த எலி, பூனைக்காக பயப்பட வேண்டியதில்லை...' என, நினைத்தபடி, கண்ணை மூடிக்கிட்டார், அந்த முனிவர்.மறுநாள் காலை, கண் திறந்து பார்த்த போது, நேற்று பூனையாக மாற்றப்பட்ட எலி, நாயை பார்த்து பயந்து, நடுங்கியபடி இருந்தது. 'நாயை பார்த்து தானே இது நடுங்குது. இப்ப, இதையும் ஒரு நாயாக மாற்றி விட்டால் பிரச்னை தீர்ந்துடுமே...' என்று நினைத்து, அதே மாதிரி செய்தும் விட்டார். மறுபடியும் மறுநாள் கண்களைத் திறந்து பார்த்தார். இப்ப அந்த நாயும் நடுங்கியபடி இருக்க, முனிவரின் முதுகுக்குப் பின், நரி நின்றுக் கொண்டிருந்தது. நரியாக மாற்றி விட்டதால், இனியாவது அது நிம்மதியாக இருக்கும்ன்னு நினைத்தார். அந்த நம்பிக்கையும் நீடிக்கவில்லை. அந்த நரியும், புலியை பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தது. முனிவரும் சளைக்காமல், நரியை, புலியாக்கினார். 'இனிமே, இந்த புலி எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை...' என்று நினைத்து, நிம்மதியாக கண்களை மூடினார். மறுநாள் காலையில் வழக்கம் போல கண் விழித்து பார்த்த போது, புலி நடுங்கியபடி இருந்தது. முனிவருக்கு கோபம் வந்துவிட்டது. இருந்தாலும், புலியே பார்த்து நடுங்கக் கூடிய அளவுக்கு அப்படி பயங்கரமான மிருகம் என்ன என்று, பின்னாடி திரும்பி பார்த்தார். அங்கே ஒரு பூனை நின்றிருந்தது.ஒரு பூனையைப் பார்த்து, எலி பயப்படலாம், புலி பயப்படலாமா? அப்போது தான், முனிவருக்கு ஒரு உண்மை புரிந்தது. ஆரம்பத்தில் எலியாக இருந்தது, படிப்படியாக மாறி, இப்போது புலியாக இருப்பது உண்மை தான். இருந்தாலும், உருவம் தான் மாறி வருகிறதே தவிர, உள்ளம் அப்படியே தான் இருக்கிறது. அதனால், எதிரில் பூனையை பார்த்ததும், எலிக்கே உரிய பயம் வந்து விட்டது. இதைப் புரிந்து கொண்டவர், உடனே, எலியாக மாற்றி, பூனையிடம் சிக்காமல் பத்திரமாக அதைக் காப்பாற்றி, 'போய் சேரு...' என, அனுப்பி வைத்தார், முனிவர்.இன்னொரு விஷயமும் அவர் புரிந்து கொண்டார். என்ன தான் தெய்வீக வரம் எனக்குக் கிடைத்தாலும், நான் இறைவனின் பிரதிநிதி தானே தவிர, நானே இறைவன் அல்ல என்பதையும் உணர்ந்தார், முனிவர். பி. என். பி.,அறிவோம் ஆன்மிகம்!திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை தரிசிக்கும் முன், கடலில் நீராடி, பின், அருகிலிருக்கும் நாழிக் கிணற்றிலும் நீராட வேண்டும் என்பது நியதி.