தீர்ப்பு!
''காபி கொடு, கோகிலா. இன்னும் கொஞ்ச நேரத்தில், தாயம்மாவும், அவ மகளும், மகளோட புருஷனும் வந்துடுவாங்க,'' தினகரன் சொல்ல, கணவனை சிரிப்போடு பார்த்தாள்.''இவ்வளவு நாள், கோர்ட்டில் வக்கீலாக, 'ப்ராக்டிஸ்' செய்தீங்க... இன்னைக்கு, ஜட்ஜ் ஆக மாறி, தீர்ப்பு சொல்லப் போறீங்க. அப்படி தானே,'' என்றாள், கோகிலா.அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பவள், தாயம்மா. அவள் மகள் வள்ளிக்கும், ஏழுமலைக்கும் மூன்று ஆண்டுக்கு முன், திருமணம் செய்து வைத்தாள்.கொத்தனார் வேலை பார்த்த, ஏழுமலை, ஆரம்பத்தில் வள்ளியோடு நன்றாக தான் குடித்தனம் நடத்தினான். இரண்டு ஆண்டுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பின், அவன் போக்கே மாறியது.குடிப்பது, தேவையில்லாமல், வள்ளியை அடிப்பது என இருந்தவன், கூட வேலை பார்க்கும் பெண்ணோடு ஒருநாள் ஊரை விட்டு ஓடிப் போனான்.ஆறு மாத குழந்தையோடு தவித்துப் போனாள், வள்ளி. மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று, கவலைப்பட்டாள், தாயம்மா. நாளாக ஆக, இனி போனவன் வரப்போவதில்லை என, மனதைத் தேற்றிக் கொண்ட வள்ளி, மார்க்கெட்டில் காய்கறி வாங்கி, தெருத்தெருவாக விற்று, பிழைப்பை நடத்த ஆரம்பித்தாள்.இப்போது, குழந்தைக்கு ஒன்றரை வயது. ஓடிப் போன ஏழுமலை, திரும்ப வந்து, 'என்னை மன்னிச்சுடு வள்ளி. புத்தி கெட்டு விட்டுட்டுப் போயிட்டேன். இப்ப திருந்தி வந்திருக்கேன். இனி, உன்னையும், குழந்தையையும் விட்டுட்டுப் போக மாட்டேன்...' என்று, கெஞ்சினான்.தாயம்மாவால் இதை ஏற்க முடியவில்லை.'இப்ப தான் என் மகள் ஏதோ நிம்மதியாக வாழ்ந்துட்டு இருக்கா... இவன் திரும்ப பிரச்னை பண்ணப் பார்க்கிறான். அவளுக்குப் புருஷனே வேண்டாம், குழந்தை போதும். திருந்தி வந்திருக்கேன்னு சொல்றதெல்லாம் பொய். இனி, இவன் சகவாசமே வேண்டாம்...' என்றாள்.வள்ளிக்கு என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை. காலில் விழாத குறையாக, கெஞ்சிக் கொண்டிருந்தான், ஏழுமலை.வீட்டில், குழந்தையை, ஏழுமலை துாக்கி வைத்துக் கொண்டிருப்பது, தாயம்மாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.'இங்கே பாரு, உன் சகவாசமே வேண்டாம். கிளம்பு...' என்றாள், தாயம்மா.'அத்தை, இப்படி பேசாதீங்க. தயவுசெய்து மன்னிச்சுடுங்க. நான் பண்ணினது தப்பு தான். இனி, வள்ளியை விட்டுட்டு போக மாட்டேன். யார்கிட்ட வேணுமானாலும் மத்தியஸ்திற்கு கூட்டிட்டுப் போங்க...' என்றான்.எந்த முடிவுக்கும் வரமுடியாதவளாய், 'அம்மா... நீ, வக்கீல் வீட்டில் தானே வேலை செய்யற. அவர்கிட்ட அழைச்சுட்டு போய், அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்...' என்றாள், வள்ளி. 'வக்கீல் ஐயா, நீங்க, கோர்ட்டில் எத்தனையோ கேஸ் பார்த்திருப்பீங்க... உங்களுக்கு நியாயம், தர்மம் தெரியும். நம்பினவளை கைவிட்டுப் போனவன், திருந்திட்டேன்னு சொல்றதை என்னால் ஏத்துக்க முடியலை. நீங்க தான் விசாரிச்சு, நல்ல தீர்ப்பு சொல்லணும்...' என்றாள், தாயம்மா.'உன் மகள், அவ புருஷன் இரண்டு பேரையும் அழைச்சுட்டு வா. அவங்க இரண்டு பேர் மனசிலும் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, நியாயமான கருத்தைச் சொல்றேன்...' என்றார், தினகரன்.வாசலில் பேச்சு சத்தம் கேட்க, எட்டிப் பார்த்து, ''அவங்க வந்துட்டாங்க போல, தாயம்மா அழைச்சுட்டு வந்திருக்கா. எத்தனையோ, 'டைவர்ஸ்' கேஸ்ல ஆஜராகி இருப்பீங்க.''பாவம் அந்தப் பொண்ணு. அவனை, நல்லா விசாரிங்க. இப்ப தான் ஏதோ, அவளாக பிழைப்பு நடத்தி வாழ்ந்துட்டு இருக்கா. இருக்குற நிம்மதியை கெடுத்துட்டுப் போயிட போறான்,'' தன் பங்கிற்கு சொன்னாள், கோகிலா.வெளியே வந்த, வக்கீல் தினகரன், நாற்காலியில் உட்கார்ந்தபடியே, ''ஏன் நிக்கிறீங்க, அப்படி திண்ணையில் உட்காருங்க,'' என்றார்.''இருக்கட்டும் ஐயா...'' துாங்கும் குழந்தையை தோளில் போட்டபடி, பவ்யமாக நின்றான், ஏழுமலை.அவன் முகத்தைப் பார்த்ததும், உண்மையில் அடிபட்டு திருந்தி வந்திருக்கிறான் என நினைத்தபடி, தாயம்மாவைப் பார்த்தார்.''ஐயா... இரண்டு பேரும் உங்க முன்ன இருக்காங்க. என் பொண்ணு வாழ்க்கையை, கேள்விக் குறியாக்கிட்டுப் போயிட்டான். இப்ப, இவன் பேசறதை என்னால் நம்ப முடியலை. திரும்ப என் மகள் ஏமாந்து போயிடக் கூடாது,'' என்றாள், தாயம்மா.''நான் விசாரிக்கிறேன். நீ, அமைதியா இரு,'' என்றார்.''ஏழுமலை... கட்டினவளை விட்டுட்டு, இன்னொருத்தி பின்னால போயிட்டு, இப்ப திருந்தி வந்திருக்கேன்னு சொல்றதை, அவங்களால நம்ப முடியலை. நாலு மாசம் நல்லவனாக இருந்துட்டு, திரும்பப் போக மாட்டேன்னு, என்ன நிச்சயம்?''''நம்பச் சொல்லுங்க, ஐயா. வள்ளியை விட்டுட்டு போன பிறகு தான், எனக்கு, அவ அருமை தெரிஞ்சுது. நான், என் பெண்டாட்டி, மகளோடு நல்லபடியாக வாழணும். இனி, ஒழுங்கா வேலைக்குப் போய், என் குடும்பத்தைப் பார்த்துக்கிறேன்... இந்த ஒருமுறை மன்னிச்சு, வள்ளியோடு என்னை சேர்த்து வையுங்க, ஐயா.''''வள்ளி, நீ என்ன சொல்ற?'' என்றார், தினகரன்.''ஐயா... கட்டினவள், புருஷனுக்கு அடங்கி வாழணும்ன்னு நினைச்சுதான், அவன் குடிச்சுட்டு என்னைப் போட்டு அடிச்சப்பவும் பொறுத்துக்கிட்டேன்.''ஆனால், என்னை விட்டுட்டு இன்னொருத்தி மேல மோகம் கொண்டு, அம்போன்னு விட்டுட்டுப் போனானே... இவனை என்னால் மன்னிக்க முடியாது. ஒரு பெண்டாட்டியா, எந்த பெண்ணுமே இப்படிப்பட்ட புருஷனை ஏத்துக்க மாட்டா.''அவனைப் பார்த்தால், உண்மை சொல்பவனாக தான் தெரிகிறது. நம்ப மறுக்கும் வள்ளியை என்ன செய்ய முடியும். மனதார மன்னித்து ஏற்றுக் கொண்டால் தான், இவனுடன் வாழ முடியும். இல்லாவிட்டால் இருவரையும் சேர்த்து வைத்து, எந்த பிரயோசனமும் இல்லை.''சரி, வள்ளி... அப்படின்னா, இவனை மன்னிக்க முடியாது. இவனோடு இனி வாழ முடியாதுன்னு சொல்ற. அப்படிதானே...'' என்றார், தினகரன்.''ஒரு பெண்டாட்டியா, என் மனசில் உள்ளதை சொன்னேன். ஆனால், அதோ அவன் தோளில் துாங்குறாளே என் மகளோட தாயாக இப்ப சொல்றேன்...''அவனை, நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டா... நான் புருஷன் இல்லாமல் வாழ்ந்திட முடியும். ஆனால், மகளை, அவன் அப்பன்கிட்டேயிருந்து பிரிக்க, எனக்கு உரிமை இல்லை.''அவளுக்கு அம்மாவோட அன்பு, பாசம் மட்டுமில்லை, அப்பாவோட அரவணைப்பும், ஆதரவும் கிடைக்கணும். அதை என்னால் தடுக்க முடியாது. உண்மையில், திருந்தி வந்தவனாக இருந்தால், மகளின் தந்தையாக ஏற்று, அவனுடன் வாழச் சம்மதிக்கிறேன். மகளை, அவ அப்பாகிட்ட இருந்து பிரிச்ச பாவம், எனக்கு வேண்டாம்,'' என்றாள், வள்ளி.கண்கள் மலர, நன்றியோடு வள்ளியை பார்த்தான், ஏழுமலை.படிக்காத பெண் தான். எவ்வளவு தீர்க்கமாக யோசித்துப் பேசுகிறாள். படித்த பெண்கள் சுயநலத்துடன், பிள்ளைகளை பற்றி யோசிக்காமல், கோர்ட் படி ஏறி, விவாகரத்து கேட்கும் இந்த காலத்தில், இவள் எடுத்த முடிவு, பாராட்டப்பட வேண்டியது தான்.''தாயம்மா... இதுக்கு, நான் தீர்ப்பு சொல்ல வேண்டியதில்லை. உன் மகளே, நல்ல முடிவை சொல்லிட்டா. தேவையில்லாமல், திருமண பந்தம் முறியக் கூடாது. இரண்டு பேரையும், முழு மனசோடு சேர்த்து வை. அவங்க குழந்தையோடு நல்லபடியாக வாழட்டும்...'' என்றார், விவாகரத்து வக்கீல், தினகரன்.பரிமளா ராஜேந்திரன்