உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - பிளம்ஸ்!

மலைகளில் விளையும் பிளம்ஸ் பழம், 'கொத்துப்பேரி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம், சாப்பிட புளிப்பாக இருப்பதால் பலர், விரும்புவதில்லை. ஆனால், அதிக சத்து மிக்கது. இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் 'சி' தான், இதன் புளிப்பு சுவைக்கு காரணம். இனிப்பு, புளிப்பு மற்றும் லேசான கசப்பு சுவை கொண்ட இப்பழத்தில், பல்வேறு வகையான பாலிபினால்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால், கோடை மற்றும் மழை காலத்திலும் உண்ண உகந்தது.புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம், பிளம்சில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயால் இறக்கும் பெண்களில், 18 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர் என்று, உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் கண்டறிந்துள்ளது.பிளம்ஸ் பழத்தில் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதாக, அமெரிக்காவின், 'அக்ரிலைப்' ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையின் போது, புற்றுநோய் செல்களுடன் உடலில் உள்ள மற்ற செல்களும் அழிக்கப்பட்டு விடுவதால், நோயாளிகளின் உடல் சோர்ந்து போகிறது.ஆனால், பிளம்ஸ் பழத்தில் உள்ள பிளோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருளான, குளோரோ ஜெனிக் மற்றும் நியோகுளோரோஜெனிக் அமிலங்கள், உடலில் எந்த விதமான பாதிப்பு இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிப்பதாக கூறுகின்றனர். இந்த ரசாயனங்கள் மற்ற சில பழங்களில் இருந்தாலும், பிளம்ஸ் பழத்தில் மிகுதியாக இருப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளம்ஸ் பழத்தில் உள்ள, ஆன்டி ஆக்சிடன்ட், நம் உடலில் செல் திசுக்கள் வேகமாக அழிவதை தடுக்கும். இதனால், முதுமையை தள்ளிப் போட உதவுகிறது. இந்த காரணத்தால், இதை பெண்களின் பழம் என்கின்றனர். ரத்தத்தை சுத்திகரித்து, நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த சோகையை தடுக்கிறது. எனவே, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் பெண்கள், பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. பிளம்சில் உள்ள, பைட்டோ நியூட்ரியன்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது.பொட்டாசியத்தின் வளமான மூலமாக திகழ்கிறது, பிளம்ஸ். பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இது, ரத்த அழுத்தத்தின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க உதவுகிறது. பிளம்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள், சரும தோற்றத்தை காத்து, புத்துணர்ச்சி பெற வைக்கிறது. இளமையான சரும அழகை பெற, பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.     - ஆர் ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !