கர்ணன் கோவில்!
மகாபாரதத்தில், பாண்டவர், கவுரவர்களை விட, முக்கிய பாத்திரம் கர்ணன் தான். இளமையிலேயே தாயைப் பிரிந்தான். தேரோட்டி குடும்பத்தில் வளர்ந்தான். அவனை, அங்க நாட்டின் அரசனாக்கி, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான், துரியோதனன். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, ஒரு கெட்டவனுக்கு துணை போக வேண்டியதாயிற்று.வியாசரின் மகாபாரதத்தில், கர்ணனின் திருமணம் பற்றி சரியான தகவல் ஏதுமில்லை. ஆனால், வேறு சில பதிப்புகளில், அவனுக்கு விருஷாலி என்ற மனைவி இருந்ததாக, தகவல் உள்ளது.இவள், துரியோதனனின் தேரோட்டியான, சத்யசேனனின் சகோதரி. பிறப்பால் ஷத்ரியன் என்றாலும், வளர்ப்பால் தேரோட்டி வம்சம் என்பதால், அவளை மணம் முடித்தான், கர்ணன். விருஷாலியும், தர்ம விஷயத்தில் கர்ணனுக்கு குறைந்தவள் அல்ல; தைரியசாலியும் கூட. பின்னால் வருவதை முன்னமே கணக்குப் போடும் திறனுடையவள்.துரியோதனன், கர்ணனை அங்க நாட்டின் அரசனாக்க முயலும்போது, அதைத் தடுத்தாள். இதன் மூலம், தன் கணவனின் உயிருக்கு ஆபத்து வருமென கணக்கிட்டாள். அந்தக் கணக்கு தப்பவில்லை. நண்பனுக்காக, போர்க்களத்தில் உயிர் விட்டான், கர்ணன். அவன் இறந்ததும், அவளும் உயிர் விட்டாள்.கர்ணனை இரண்டு பெண்கள் காதலித்ததாக, செவி வழி செய்திகள் உண்டு. அவர்களில் ஒருத்தி உருவி. மற்றொருத்தி, பாண்டவர்களின் மனைவியான, திரவுபதி. இப்படியொரு செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் குறைவு.குந்திக்கு, சுப்ரா என்ற தோழி இருந்தாள். அவளது மகள் உருவி. இவளை, அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாள், சுப்ரா. ஆனால், உருவியோ, கர்ணனைக் காதலிப்பதாகக் கூறினாள்.பெண் பார்க்க வந்த போது, திரவுபதி ஐவருக்கு மனைவியாக இருப்பது பற்றி கேவலமாகப் பேசினான், கர்ணன். இதைக் கேட்ட உருவி, 'ஒரு பெண்ணை அவமானப்படுத்திய உன்னைத் திருமணம் செய்ய மாட்டேன்...' என, சொல்லி விட்டாள்.மகாராஷ்டிராவில், 'ஜம்புல் அக்யான்' என்று ஒரு கிராமப்புற கதைப்பாட்டு உண்டு. அதில், கர்ணனை திரவுபதி, காதலித்த வரலாறு வரும்.பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் இருந்த தனித்தனி சிறப்பம்சங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றவன், கர்ணன் என்பதால், அவனை விரும்பி இருக்கிறாள், திரவுபதி.ஆனால், அவன் தேரோட்டி குலத்தில் பிறந்தவன் என்பதை அறிந்து, அவனை ஒதுக்கி விட்டாள். அவன் உண்மையில் ஷத்ரியன் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. இதனால், தர்மருக்கு மாலை சூட்டினாள். விதிவசத்தால், ஐவருக்கு மனைவியானாள். தர்மத்தின் தலைவனான கர்ணன் இறக்கும் முன், தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டிய, பரமாத்மா விஷ்ணு, அவனது உடலையும் தகனம் செய்தார். ஒரு தெய்வத்தின் கையால், தகனம் செய்யும் பாக்கியம் பெற்றவன், கர்ணன்.தகனம் நடந்த இடம், உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கர்ண பிரயாக். இங்கு, கர்ணனுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. டில்லி- - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் உள்ளது. ரிஷிகேஷிலிருந்து, 172 கி.மீ., துாரமுள்ள இவ்வூருக்கு பஸ்கள் உள்ளன.டேராடூனுக்கு விமானத்தில் சென்று, 213 கி.மீ., கடந்தால், கர்ண பிரயாக்கை அடையலாம். பிரயாக் என்றால், சங்கமிக்கும் இடம். அலக்நந்தா, பிந்தார் நதிகள் சங்கமிக்கும் ஊர் இது. இந்த சிறிய கோவிலுக்குள் கர்ணனும், அவனை ஆசிர்வதிக்கும் கிருஷ்ணரும் உள்ளனர். இங்கு சென்று, தானம் செய்வதன் மூலம், தர்மத்தின் தலைவனின் அன்பைப் பெறலாம். - தி. செல்லப்பா