உள்ளூர் செய்திகள்

பந்த பாசம்!

போதிவனத்தில், கண்களை மூடி, தியானத்தில் ஆழ்ந்திருந்தார், போதி சத்துவர்.இவர் எப்போது கண் விழிப்பார் என, எதிர்பார்த்து காத்திருந்தான், ஒருவன். அவர் கண் விழித்ததும், அவரது காலில் விழுந்து வணங்கினான். 'உன் பேர் என்னப்பா, உனக்கு என்ன வேணும்...' என்றார், சத்துவர்.'என் பெயர் அபிநந்தன். நான் ஒரு ஏழை. எனக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். பந்த பாசங்களில் மாட்டி சித்திரவதைகளை அனுபவித்து விட்டேன். நீங்கள் தான் என்னைத் துறவியாக்கி, ஞான மார்க்கத்தை காட்டணும்...' என்றான். 'அபிநந்தா, இந்த மரங்களில் இருக்கிற இலைகளை பார். அதெல்லாம் ஏன் ஆடுது தெரியுமா?' என்றார்.'காற்று வந்து மோதுவதால் ஆடுது...' என்றான். 'பாசம் என்ற காற்று வந்து மோதுகிற போதெல்லாம், மனித இலைகள் இப்படித்தான் ஆடும். முதலில், உன் மனதில் இருக்கும் பாசத்தை அறவே விட்டுடணும். அது முடியுமா உன்னால்?' என்றார். 'முடியும்...' என்றான், அபிநந்தன். 'சரி, நீ இன்றிலிருந்து இந்த போதிவனத்துலேயே தங்கலாம்...' என்றார், சத்துவர். அங்கேயே தங்கினான், அபிநந்தன்.சில நாட்கள் கழித்து, சத்துவர் குளிக்க போய் கொண்டிருந்தபோது, அபிநந்தனுடன் ஒரு நாய்க்குட்டி இருப்பதை பார்த்தார். 'என்னப்பா இது நாய்க்குட்டி...' என்றார். 'பிரபு, இந்த நாய் எப்பவும் என்னை விட்டு விலகறதே இல்லை. இதை மட்டும் என் கூட வைத்துக் கொள்ள அனுமதி கொடுங்க...' என்றான், அபிநந்தன்.சிரித்தபடியே போய் விட்டார், சத்துவர். சில நாள் கடந்த நிலையில், நாய்க்குட்டியுடன், ஒரு சிறுவனும் அபிநந்தன் அருகில் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் குறித்து, சத்துவர் கேட்க, 'பிரபு, இவன் என் மகன். இந்த நாயை விட்டுட்டு இவனால இருக்க முடியல... அதனால, இவனை மட்டும்...' என்று இழுத்தான், அபிநந்தன். இப்போதும் சிரித்தபடியே சென்று விட்டார், சத்துவர். கொஞ்ச நாள் கழித்து, அவனுடன் ஒரு பெண் இருக்க, அவள் மனைவி என்றும், மகனை விட்டு இவளால் ஒரு வினாடி கூட இருக்க முடியவில்லை என்று கூறினான்.சிரித்தபடியே, இரண்டு பாத்திரங்களை எடுத்தார், சத்துவர். ஒரு பாத்திரத்தில் நிறைய பண்டங்களும், மற்றொன்று காலியாகவும் இருந்தது. பண்டங்கள் இருந்த பாத்திரத்தை நீரில் விட, அது மூழ்கி அடியில் போய் விட்டது. காலி பாத்திரத்தை நீரில் விட, அது மிதந்தபடி இருந்தது. 'காலி பாத்திரம் இருக்கே, அதுதான் ஞானப் பாத்திரம். கனத்த பாத்திரம் இருக்கே, அது பாசப் பாத்திரம். அபிநந்தா... நான், துறவியாகப் போறேன். ஞானியாகப் போறேன்னு சொல்றது சுலபம். ஆனா, அப்படி ஆகறது ரொம்ப கஷடம்...' என்றார், போதி சத்துவர்.மனம் தெளிந்து, மனைவி, மகனுடன் இல்லம் திரும்பினான், அபிநந்தன்.இதிலிருந்து நாம் அறிவது, ஞான மார்க்கம் செல்ல வேண்டுமானால், பாச பந்தத்திலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும்.       பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !