உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு -நான், 26 வயது பெண். ஏழ்மையான குடும்பத்திலிருந்து, படிப்படியாக முன்னேறி, இன்று, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். என் பெற்றோருக்கு நான் மூத்த மகள். எனக்கு ஒரு தங்கை, கல்லுாரியில் படிக்கிறாள்.என் அப்பா, நிறுவனம் ஒன்றில் கடைநிலை ஊழியர். என் வேலையும், சம்பளமும் தான் குடும்பத்துக்கு உதவி வருகிறது. அதை மனதில் வைத்தே, வேலையை சரியாக செய்து, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன்.என் அலுவலகத்தில், ஒரு ஆண், ஒரு பெண் என, இருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். என் இருக்கைக்கு இருபுறமும் அவர்களுக்கு, 'சீட்' ஒதுக்கி தந்துள்ளனர். இருவரும், கல்லுாரியில் படிக்கும் காலத்திலிருந்தே, காதலித்து வருவதாகவும், வேலை நிரந்தரம் ஆனதும், திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினர்.இதுவரை சந்தோஷம் தான்.ஆனால், வேலை நேரத்தில், நான் நடுவில் அமர்ந்திருப்பதை கூட இவர்கள் பொருட்படுத்துவதில்லை.கண்ணால் ஜாடை காட்டி பேசுவதும், சந்தேகம் கேட்பது போல், துண்டு சீட்டை எனக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில், குறுக்காக கைகளை நீட்டி பரிமாறி கொள்வதும், சகிக்க முடியாமல் இருக்கிறது. பலமுறை சொல்லியும் கேட்பதாக இல்லை. எனக்கு வேறு இடத்தில், இருக்கையை மாற்றிக் கொடுக்க கேட்டேன். பிரச்னையை புரிந்து கொள்ளாமல், 'உங்கள் இஷ்டத்திற்கு இடம் மாற்றி தர முடியாது. முதலில் கொடுத்த, 'புராஜெக்ட்'டை முடிக்க பாருங்கள், புதியவர்களான அவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்...' என்கிறார், டீம் லீடர்.கவன சிதறல் ஏற்பட்டு, வேலைக்கு இடைஞ்சல் வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். மேலும், மதிய உணவு இடைவேளையின்போது, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட வற்புறுத்துவதோடு, இருவரும் சேர்ந்து என்னை கிண்டல் செய்கின்றனர்.மன உளைச்சலில் இருக்கும் எனக்கு, இதிலிருந்து மீள நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு -பணி இடங்களில் காதலிக்கும் பல ஜோடிகள், தங்கள் காதலை ஊரே பார்த்து மயங்க வேண்டும் என்ற, பகட்டு ஆரவாரப்பாங்கு உள்ளவர்களாய் இருக்கின்றனர்.இவ்வகை ஜோடிகளுக்கு திருமணம் செய்து கொள்வது முக்கியமில்லை. திருமணம் செய்து கொள்வதாய் இருவரும் சொல்வதும், பாசாங்காக கூட இருக்கலாம். நம்மிடையே மேற்கத்திய கலாசாரம் ஊடுருவி, நீண்ட நாட்கள் ஆகின்றன.இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...காதல் ஜோடிகளுடனான தனிப்பட்ட பேச்சை கத்திரித்து விடு. 'அலுவலகம் தொடர்பான விஷயங்களை மட்டும் விவாதிப்போம். உங்கள் அந்தரங்கத்தில் நான் நுழைய விரும்பவில்லை. என்னுடைய அந்தரங்கத்தில் நீங்கள் நுழையாதீர்கள். மீறினால், நாலு அறை அறையவும் தயங்க மாட்டேன்.'நீங்கள் என்ன மிருகங்களா? பொது இடத்தில் கொஞ்சல், சீண்டல், மயங்கல், கிறங்கல் தேவையா? காதலில் கண்ணியம் காத்து நில்லுங்கள். நீங்கள் திருமணம் செய்து கொண்டால் வாழ்த்தும் முதல் நபர் நான் தான்...' என, கிரானைட் குரலில் கூறு.உன் உடல்மொழி, குரலின் தீவிரம், இறுக்கமான முகம் பார்த்து வாலாட்டலை நிறுத்துவர்.அணித்தலைவரிடம் தனியாக பேசும் சந்தர்ப்பம் கிடைத்தால், இருக்கை மாற்றி கேட்பதன் உண்மையான காரணத்தைக் கூறு. இருக்கை மாற்றம் என்றால், மூவருக்கும் மூன்று வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே. 'இருக்கை மாற்றத்தின் பின்னரும் புராஜெக்ட் முடிக்க அந்த இருவருடன் ஒத்துழைப்பேன்...' எனக் கூறு.உலகின் எந்த இடத்திற்கு போனாலும், பணியிட காதலர்கள் சேட்டைகள் இருக்கவே செய்யும். எக்காரணத்தை முன்னிட்டும் வேலையை ராஜினாமா செய்து விடாதே.உணவு இடைவேளையின் போது தனியாக சாப்பிடு அல்லது சக பெண்களுடன் சாப்பிடு. காதலர்கள் உன்னை கிண்டல் செய்தால், 'வாயை கிழித்து விடுவேன்...' என சப்தமிடு. பதறி, சிதறி ஓடி ஒளிவர்.அணி தலைவர் உனக்கு தனி இருக்கை ஒதுக்க மறுத்தால், தலைமை அலுவலகத்துக்கு தொடர்பு கொள். அவர்கள் இருக்கை மாற்றித் தருவர் அல்லது பணி செய்யும் கிளை அலுவலகம் மாற்றித் தருவர்.காதலர்கள் சீண்டி விளையாடும் போது, வெறுமையாக அவர்களை பார். நீ பதறினால், கலங்கினால், பயந்தால் அவர்களின் குதியாட்டம் அதிகமாகும். 'இவளை கலாட்டா செய்தால் உப்புசப்பு இருக்காது...' என, உணர்ந்து, உன்னிடமிருந்து விலகிக் கொள்வர்.சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் நீ மனஉளைச்சலில் உழன்றால், வாழ்க்கையில் பெரிதாய் என்ன சாதிக்க முடியும்? தடைக்கற்களை படிக்கல்லாக்கு. தங்கை படிப்புக்கும், உன் திருமணத்துக்கும் பணம் சேர்.இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் செட்டில் ஆகு. பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை மணந்து, திருமணத்திற்கு பின் கணவரை காதலி.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !