உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வில் வெற்றி பெற...!

பொதுத்தேர்வில் மாணவர்கள், கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி, அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகள்! * உயர்ந்த குறிக்கோள், நேர்மையான எண்ணம், கவனமுடன் அர்த்தம் புரிந்து படிக்கவும். படித்ததை நினைவில் பதிய வைத்து, மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்தல், சிறு தேர்வுகள் எழுதிப் பழகுதல், எழுதியதைத் தானே திருப்பிப் பார்த்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறலாம். * எப்போதும் காற்றோட்டமான, ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கவும். படிக்கும்போது முக்கிய குறிப்பெடுத்து கொள்ளவும். தேர்வுக்கு முன், 'ரிவிஷன்' செய்யும்போது, மீண்டும் முழுப் பாடத்தையும் படிக்க வேண்டியதில்லை. இந்தக் குறிப்புகளை மட்டுமே படித்தால் போதும். * தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சற்று அமைதியாக, பத்து நிமிடம் கண்களை மூடி படித்ததை நினைவுபடுத்தி பார்க்கலாம். பின், மீண்டும் படிக்க ஆரம்பித்தால், மூளை சுறுசுறுப்பாகி விடும். ஞாபகத்துக்கு வராத பகுதியை மறுவாசிப்பு கொடுத்துவிட்டு, புதிய பகுதிக்குச் சென்றுவிடலாம். * துாக்கம் வருவது போல் சோர்வாக இருப்பின், எட்டு தடவை தோப்புக்கரணம் போட்டால், துாக்கம் போய் மூளை சுறுசுறுப்பாகிவிடும்.* இரவு, ஆறு மணி நேரம் துாக்கம் அவசியம். துாங்குவதற்கு முன் 'டிவி' பார்ப்பதோ, இணையத்தை பயன்படுத்துவதோ கூடாது. * அடிக்கடி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறுவது, எழுதும் வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். * தேர்வு எழுதத் துவங்கும் முன், கேள்விகளை ஒரு முறைக்கு, இருமுறை நன்கு படித்து, எதை எழுதப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள். அழகான கையெழுத்துடன், தலைப்புகள் கொடுத்து, பக்கத்திற்கு, 20 வரிகள் அடித்தல் திருத்தலின்றி முக்கியமானவற்றுக்கு அடிக்கோடிட்டு எழுதுங்கள். மதிப்பெண்ணுக்கு ஏற்ற அளவில், தேவையான படங்கள், க்ராப் போன்றவற்றோடு சரியான கேள்வி எண்ணை போட்டு எழுத வேண்டும். * கடைசி, ஐந்து நிமிடம், எழுதியதை சரிபார்ப்பதற்காக பயன்படுத்துங்கள். எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளீர்களா, தலைப்புகளுக்கு அடிக்கோடிடுதல், ஒவ்வொரு கேள்வி முடிந்ததும் கோடிடுதல், பக்க எண் சரியாக உள்ளதா என பார்த்து, தாள்களை சரியாக வைத்துக் கட்டவும். மாணவர்களுக்கான, 'டயர்ட் சார்ட்!* ' காலை நடைபயிற்சி போகும்முன், பாதாம், வால்நட், பேரிச்சம்பழம், உலர் திராட்சை சாப்பிடலாம். * காலையில், கேழ்வரகு கஞ்சி, பால், தேங்காய்ப்பால், மோர், பாதாம் அல்லது கேரட் பால் இவைகளில் ஏதேனும் ஒன்றை மாறி மாறி பருகலாம்.* காலை சிற்றுண்டியாக, இட்லி - சாம்பார்; புட்டும் - கடலையும், தோசை - புதினா சட்னி, ஆப்பம் - காய்கறி குருமா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். * மதிய உணவுக்கு முன், இளநீர், எலுமிச்சை ஜூஸ், காய்கறி சூப், முருங்கைப்பூ சூப், பாலுடன் வாழைப்பழம் அல்லது ஆப்பிளுடன் பால் சேர்த்து பருகலாம். * மதிய உணவாக, சாதம், பருப்பு, நெய், மீன் அல்லது முட்டை, காய்கறிகள் சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியலுடன் சாப்பிடலாம். மேலும், கீரை, ரசம் மோர் ஆகியவற்றை உணவாக எடுத்துகொள்ளலாம்.* மாலையில், வேர்க்கடலை, எள்ளுருண்டை, வறுத்த முந்திரி, பழங்களை சாப்பிடலாம்.* இரவு உணவாக, சாதம் அல்லது ரொட்டி, பருப்பு, பன்னீர், சென்னா, காய்கறி, ரசம். உறங்கும் முன், பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !