டூ...
காபியை ருசித்தபடி, ''நானும், கோபாலனும் பிரிஞ்சுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்,'' ஏதோ சினிமாவுக்கு போகிறோம் என்பதைப் போல் சொன்னாள், பவித்ராவின் மகள், மாலினி. சமீபகாலமாக, மாலினி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் தான் இவை. அப்படித்தான் இப்போதும் சொல்கிறாள் என, அலட்சியமாக காபியை பருகிய பவித்ரா, அதிர்ச்சியடையவில்லை.அவள், தன் சொற்களை நம்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட மாலினி, ''இங்க பார், தினமும் சொல்ற மாதிரி நான் புலம்பிக் கிட்டிருக்கேன்னு நினைக்காத. ரெண்டு பேருமே உட்கார்ந்து பேசி, ஒரு முடிவுக்கு வந்துட்டோம்.''ஒரே வீட்டில், ஒருத்தரை ஒருத்தர் கடிச்சுக் குதறிக்கிட்டு இருக்குறதை விட, தனித்தனியா, நிம்மதியா, அவங்கவங்க சுதந்திரத்தோட வாழலாம்ன்னு முடிவுப் பண்ணிட்டோம்,'' பருகி முடித்த காபி கோப்பையை கைகளால் உருட்டிக் கொண்டிருந்தாள்.அவளுடைய முகத்தை ஏறிட்டாள், பவித்ரா. முகத்தில் இத்தனை நாட்களாக தென்படும் வருத்தங்கள் கூட, இப்போது தெரியவில்லை. ஏதோ ஒரு பாதையை கண்டுபிடித்த உற்சாகம் தெரிவதைப் போலிருந்தது. மிக சரியான முடிவை எடுத்து விட்டோம் என்ற உறுதியும், தன்னம்பிக்கையும் தெரிந்தது. எள்ளளவும் குழப்பம் இல்லை.ஏதோ தான் எடுத்த முடிவை கொண்டாடுவதைப் போல், ''ஸ்வீட் எதாவது சாப்பிடறியா?'' என்றாள், மாலினி.''எதுக்கு ஸ்வீட்... நீ எடுத்த முடிவை கொண்டாடவா?''தோள்களை குலுக்கியவாறே, ''அப்படித்தான் வச்சுக்கோயேன். வாழ்க்கையில், சுதந்திரம்ங்கிறது எவ்வளவு சந்தோஷமானதுன்னு கிடைச்ச பின்னாடி தான் தெரியும்,'' என்றாள். ''நாம சுதந்திரம்ன்னு நினைக்கிறது, நம்மை நம்பி இருக்குறவங்களுக்கு சிறையா அமைஞ்சுடக் கூடாது மாலினி,'' என்றாள்.''நீ யாரை சொல்ற... கோபாலனையா?''''இல்லை. அவனும், உன்னை மாதிரிதானே சுதந்திரத்தை தேடி அலையறான். அதனாலதானே உன்கிட்டேர்ந்து எப்ப பிச்சுக்கிட்டுப் பறக்கலாம்ன்னு துடிக்கிறான். நான் சொன்னது மதுவை. நீ, மதுவை பற்றி நினைச்சே பார்க்க மாட்டியா?''பவித்ராவின் முகத்திலும், வார்த்தைகளிலும் கவலை இருந்தது.''மதுவோட நன்மைக்காத்தான், இந்த முடிவை நான் எடுத்திருக்கேன். பாவம் அவன், எங்க சண்டையில தினமும் மிரண்டு, பயப்படறான். நாங்க ரெண்டு பேரும், கீரியும், பாம்புமா கடிச்சுக் குதறிக்கிட்டிருந்தா அவனோட படிப்பு என்னாகும்?''அதுவும் இப்ப ரெண்டு நாளா ஸ்கூல் போக மாட்டேன்னு ஒரே அடம். இன்னைக்கு கூட, கோபத்துல நாலு சாத்து சாத்தித்தான் ஸ்கூல்ல கொண்டுப் போய் விட்டேன். அவனுக்காகத்தான், நான், தனியா, நிம்மதியா போயிடலாம்னு முடிவுப் பண்ணிட்டேன்.''''தப்பு மாலினி. அம்மா, அப்பாவோட சேர்ந்து இருக்குறது மட்டும், குழந்தைக்கு சந்தோஷம் இல்லை. அம்மாவும், அப்பாவும் சேர்ந்து இருக்குறதுதான் சந்தோஷம். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போக நினை, மாலினி. பாவம் குழந்தை,'' என்றாள்.''அந்த கட்டத்தையெல்லாம் தாண்டியாச்சு. இனி, யோசிக்க எதுவும் இல்லை. கோபாலனோட என்னால இனி ஒரு மாசம் கூட வாழ முடியாது. வீடு பார்த்துக்கிட்டிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல மதுவை துாக்கிட்டு வேற வீட்டுக்குப் போயிடுவேன்.''மாலினியிடம் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தது. அவள் மிகவும் பிடிவாதக்காரி. எதற்காகவும், யாருக்காவும், பணிந்து போக மாட்டாள்; விட்டுக் கொடுக்கவும் மாட்டாள்.இருவருக்குள்ளும் விரிசல் ஆரம்பித்த நாட்களிலிருந்தே, அறிவுரை சொல்லி, நிறைய சமாதானப்படுத்தி இருக்கிறாள், பவித்ரா. ஆனால், இனி எந்த சமாதானமும், அறிவுரையும், அவள் மண்டையில் ஏறாது என்பது தெளிவாகத் தெரிந்தது.சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த மாலினி, பவித்ரா ஏதாவது பேசி, மனதை மாற்றி விடுவாளோ என்பதைப் போல், சட்டென்று எழுந்தாள். தன் வீட்டிற்கு வந்தபோது, வாசலில் அமர்ந்திருந்தாள், மீனாட்சி. கையிலிருந்த மொபைல் போனில், எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.மதுவை காணவில்லை. பள்ளியிலிருந்து மீனாட்சி, அவனை அழைத்து வந்ததும், இவள் வரும் வரை, அவனுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பாள். அவனை காணவில்லை என்றதும் திக்கென்றது.''மீனாட்சி... மது எங்கே?'' என்றாள், உரத்த குரலில்.மொபைல் போனை அணைத்துவிட்டு, சட்டென்று எழுந்து, ''துாங்குதும்மா...'' என்றாள்.''துாங்குறானா... இந்நேரத்துல என்ன துாக்கம்?'' என்றாள்.''தெரியலைம்மா. ஸ்கூலிலிருந்து ரொம்ப, 'டல்'லாத்தான் வந்துது. பால் கொடுத்தேன். சரியா குடிக்கலை,'' என்றாள், மீனாட்சி.நெஞ்சு படபடத்தது மாலினிக்கு. காலையில், பள்ளிக்கூடம் போக மாட்டேன் என, அடம்பிடித்து அழுததால், அடித்தது ஞாபகம் வந்தது.மாலினியிடம் மதுவை ஒப்படைத்து, கிளம்பி போய் விட்டாள், மீனாட்சி. உள்ளே வந்த மாலினிக்கு சோபாவில் குப்புறப் படுத்தபடி உறங்கிக் கொண்டிருந்த மதுவைப் பார்த்ததும், வயிறு குழையத் துவங்கியது.காய்ச்சல் இருக்கிறதா என, கன்னம், கழுத்துகளில் தொட்டுப் பார்த்தாள்.நல்லவேளை காய்ச்சல் எதுவும் இல்லை. அம்மாவின் ஸ்பரிசத்தில் அசைந்தாலும், முனகலோடு முழித்துக் கொண்டானே தவிர எழவில்லை, மது.'ச்சே... எல்லாம் இந்த கோபாலனால் தான். அவன் மேலிருக்கும் வெறுப்பை எல்லாம் இவன் மேல் காட்டுகிறேன். அவனோடு தினம் போடும் சண்டையால், குழந்தையும் மனநலம் பாதிக்கப்படுகிறான். முதலில் அவனை விட்டு ஒழிய வேண்டும். அப்போது தான் குழந்தையும் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பான்...' என, மனதிற்குள் நினைத்தபடி, பற்களைக் கடித்துக் கொண்டாள்.இரவு, 8:00 மணியளவில், மதுவை எழுப்பி, அவன் மறுக்க மறுக்க, உணவு ஊட்டினாள். முகம் வீங்கிப் போயிருந்தது. துாங்கியதாலோ என, மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும், பள்ளிக் கூடத்திலும் அழுதிருப்பானோ என, மனம் முரண்டுப் பிடித்தது.மறுநாளும், முன்தினம் மாதிரியே பள்ளிக் கூடம் போகமாட்டேன் என அடம் பிடித்தான், மது.கெஞ்சி, கொஞ்சி அவனை தயார்படுத்த முயன்று, தன் முயற்சியில் தோற்றதும், ஆத்திரம் தலைக்கேறி முதுகில் சாத்தினாள். தரதரவென இழுத்து ஸ்கூட்டியில் உட்கார வைத்து, அழ அழ பள்ளிக் கூடம் சென்றாள். அவனுடைய வகுப்பிற்கு வந்தவளுக்கு, சுமித்ரா டீச்சரைப் பார்த்ததும், கோபம் அதிகமானது.''இரு... உங்க மிஸ்கிட்ட சொல்றேன்,'' என, மதுவை மிரட்டினாள்.மதுவைப் பார்த்ததும், அவர்களை நோக்கி வந்தாள், சுமித்ரா டீச்சர்.''மது... என்ன இது, எதுக்கு அழற?'' என்று, மதுவின் தோளில் கை வைத்தாள்.''அதை ஏன் மேம் கேட்கறீங்க... ரெண்டு நாளா ஸ்கூல் வர மாட்டேன்னு ஒரே அடம். அழறான். கொஞ்சம் கண்டிச்சு வைங்க,'' என்று, தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.''ஏன்டா கண்ணா, உனக்கு என்ன ஆச்சு... நீ ரொம்ப நல்லா படிக்கிற பையனாச்சே... எதுக்கு ஸ்கூல் வர்றதுக்கு அடம் பிடிச்சு அழற?'' என்று கொஞ்சியபடியே கேட்டாள், சுமித்ரா டீச்சர்.அவள் அப்படி கேட்டதும், மாலினிக்குள் படப்படப்பு கூடியது. 'எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும், தினமும் வீட்ல சண்டை. அதனால தான், ஸ்கூல் வரப் பிடிக்கலை...' என்று, விஷயத்தைப் போட்டு உடைத்து விடுவானோ என்று கலக்கம். கோபாலனை விவாகரத்து செய்யப் போவது உறுதி தான். ஆனாலும், இப்போதைக்கு அது தெரிவது அசிங்கமாக இருந்தது.''மது, முதல்ல கண்ணைத் துடைச்சுக்க. நீ ரொம்ப நல்ல பையனாச்சே. அன்னைக்கு கூட திருக்குறள் சொன்னதுக்கு, உனக்குத்தானே சாக்லேட் கிடைச்சது. நீ, ஸ்கூல் வர்றதுக்கு அழலாமா... என்ன உனக்குப் பிரச்னை?'' என்றாள், சுமித்ரா டீச்சர்.தேம்பி அழுதபடியே தன் கால்சட்டைப் பையிலிருந்து ஒரு, 'பைவ் ஸ்டார்' சாக்லேட்டை எடுத்து, டீச்சரிடம் நீட்டினான், மது.''மேம்... எனக்கு இந்த சாக்லேட் வேண்டாம்,'' என்று விசும்பினான், மது.அந்த சாக்லேட்டைப் பார்த்ததும், சுமித்ரா டீச்சரின் முகத்தில் ஆச்சரியம். ''இது, நீ, திருக்குறள் சொன்னதுக்காக, நான் கொடுத்த சாக்லேட்டாச்சே. இன்னுமா இதை சாப்பிடாம வச்சுருக்க?'' என்றாள்.''மேம்... எனக்கு இந்த சாக்லேட் வேண்டாம். இதை மனோகிட்டயே கொடுத்துடுங்க,'' என, புறங்கையால் கண்களைத் துடைத்தவாறே சொன்னான், மது.''உனக்கு கொடுத்த சாக்லேட்டை, ஏன் அவனுக்கு கொடுக்கணும்?''''மேம்... அன்னைக்கு, திருக்குறள் சொன்னதுக்காக, நீங்க எனக்கு சாக்லேட் கொடுத்தீங்க. எனக்கு சாக்லேட் தான்னு கேட்டான், மனோ. நான் தர மாட்டேன்னு சொல்லிட்டேன். அதனால, மனோ என் கூட, 'டூ' விட்டு, பேச மாட்டேங்கிறான். என் பக்கத்துல உட்காராம, சீனு கூட உட்கார்ந்துக்கிறான்,'' என்று சொல்லி, பெரிதாக அழத்துவங்கினான், மது.சட்டென்று அவனை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள், சுமித்ரா டீச்சர்.''பார்த்தீங்களா, உங்க பையனை... இந்த சின்ன வயசுலயே எவ்வளவு விட்டுக் கொடுக்குற மனசு. தன் நண்பன் பேசலைன்னதும், இவனால தாங்கிக்க முடியலை.''தனக்கு கிடைச்ச சாக்லேட்டை சாப்பிடாமலயே வச்சிருந்து, அவன்கிட்ட கொடுக்க சொல்றான். எப்படியாவது, 'பிரண்ட்' தன்கிட்ட பேசணும்ன்னு நினைக்கிறான். இந்த மாதிரி மனசு, பெரியவங்களான நமக்கே இருக்கறதில்லை. ''சின்ன சின்ன விஷயத்துக்கு கூட, நாம மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்கறதில்லை. விட்டுக் கொடுக்காம போறதால தான், குடும்பத்தில் சண்டை, சச்சரவு, பிரச்னை எல்லாம் வருது.''மனசுல சுத்தமான அன்பு இருந்தா, எதையுமே விட்டுக் கொடுக்கற மனசு வந்துடும். பாருங்களேன், இந்த உலகத்துல அன்பைத் தவிர, வேற எதுவுமே பெரிசு இல்லைன்னு நமக்கே உணர்த்திட்டான்.''மனோ பேசலைன்னதுமே, அவனுக்கு பள்ளிக்கூடம் வரவே பிடிக்கலை. ஆனா, நம் குடும்பத்துல, உறவுகள்ல கூட, ஒரே வீட்ல, பல மாசம், பல ஆண்டுகள் கூட பேசாம இருக்கோம். குழந்தைகள்கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.''அழாத மது. மனோவை உன் கூட பேச வைத்து, உன் பக்கத்துல உட்கார வைக்கிறேன் வா,'' என, வகுப்பிற்குள் அழைத்துச் சென்றாள், சுமித்ரா டீச்சர்.மாலினிக்கு, கன்னத்தில் அறைந்ததைப் போலிருந்தது.தங்களுடைய சண்டையால் தான் அழுகிறான், மது. பள்ளிக் கூடம் போக மறுக்கிறான் என, இவள் நினைத்துக் கொண்டிருக்க... உண்மை காரணம் அறிந்து, மனம் தடுமாறினாள்.'உடன் படிப்பவன் பேசவில்லை என்பதற்காக இத்தனை துாரம் விட்டுக் கொடுத்துப் போகும் அவன் எங்கே... பெற்ற குழந்தை பாதிக்கப்படுமே என்று கூட யோசிக்காமல் கணவனைப் பிரிய நினைத்த நான் எங்கே?' என, வழிநெடுக குற்ற உணர்வில் துடித்தாலும், வீட்டிற்கு வந்ததும், தயாராக வைத்திருந்த விடுதலைப் பத்திரத்தை எடுத்து கிழித்தெறிந்தாள், மாலினி.விட்டு விடுதலையானால் வேதனை மட்டுமே மிஞ்சும். விட்டுக் கொடுத்தால், இன்பங்கள் வாழ்க்கையில் தஞ்சம் ஆகும் என்பதை புரிந்து கொண்டாள்.ஆர். சுமதி