திண்ணை!
க. அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: அமெரிக்கா சுதந்திரப் போரில் வெற்றி பெற்றதும், அமெரிக்க அரசின் மன்னராக, ஜார்ஜ் வாஷிங்டன் இருக்க வேண்டுமென, அமெரிக்க ராணுவம் விரும்பியது. ஆனால், அமெரிக்காவை குடியரசு நாடாக மாற்ற விரும்பினார், வாஷிங்டன். வழி நடத்த தக்க தலைவனின்றி தடுமாறிய அமெரிக்கா, 1787ல், மக்கள் மாநாட்டை கூட்டி, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சட்டத்தை உருவாக்கியது. விடுதலைப் போரில் தலைமை தாங்கி வெற்றி கண்ட, வாஷிங்டனே நாட்டின் அரசிலும் வழி நடத்த வேண்டும் என, மக்கள் வேண்டிக் கொண்டனர். பின்னர், 1789ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசுத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார், வாஷிங்டன். ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அமெரிக்காவில் பல ஆக்கப் பணிகளிலும் முன்னின்று அரிய பணிகளை நிறைவேற்றினார். அவர் ஆற்றிய பணியை கண்ட அமெரிக்க மக்கள், 1793ல், இரண்டாம் முறையும், வாஷிங்டனை ஜனாதிபதியாக அமரச் செய்தனர். இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, அமெரிக்காவை எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண வைத்தார், வாஷிங்டன், மூன்றாவது முறையும், அவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என்று, குரல் எழுப்பியபோது, அவர் ஏற்க மறுத்தார். நாட்டை ஆளும் தகுதி ஒரு வாஷிங்டனுக்கு மட்டுமே இருக்கிறதென்று நம்பினால், அது உங்களை பலவீனமாக்கிவிடும். அமெரிக்காவின் பெருமையே, யார் வேண்டுமானாலும், இந்த நாட்டை விசுவாசத்துடன் நேசிக்க முடியும் என்பதே என்று விளக்கம் தந்தார், வாஷிங்டன்.பதவியை மறுத்ததோடு, மூன்றாவது முறை யாரும் குடியரசு தலைவர் பதவிக்கு ஆசைபடக் கூடாது என்பதற்கான சட்ட வழிமுறைகளையும் வகுத்து தந்தார், வாஷிங்டன். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் ஒருவன், காவலர்களால் கைது செய்யப்பட்டான். அப்போது, அவனுக்கு 17 வயது. அந்த இளம் வயதில் அவன் செய்த குற்றம், மாணவர் இயக்கம் ஒன்றில் பங்கு கொண்டது தான். கைதான மாணவனை சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றனர். மாணவரிடம், 'இளைஞனே... இப்படி புரட்சி செய்வதால் பயன் என்ன? உனக்கு முன்னால் பெரியதொரு சுவர் இருப்பது உனக்கு தெரியவில்லையா?' என்றார், காவலர்களில் ஒருவர். 'சுவர் இருப்பது தெரிகிறது. ஆனால், அது முற்றிலும் பழுதடைந்து இருக்கிறது. ஒரு தடவை முட்டி தள்ளினால் போதும், அந்த சுவர் நிலை குலைந்து கீழே சரிந்து விடும்...' என பதிலளித்தான், மாணவன். அவ்வாறு, 17 வயதிலேயே பதிலளித்த அந்த மாணவன் தான், ரஷ்யாவை உருவாக்கிய, லெனின். ஜனவரி 30, 1948ல், காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு தன், 77வது வயதில் தேம்பி அழுதார், சர்ச்சில். அந்த அழுகையில், அவர் கூறிய வார்த்தை, 'இந்தியா சுதந்திரம் பெற தகுதி வரவில்லை என்பதை நிரூபித்து விட்டது. நான் காந்திஜியை, 60 ஆண்டுகள் பாதுகாத்தேன். ஆனால், சுதந்திர இந்தியா, ஆறு மாதம் கூட பாதுகாக்காமல் அவரை இழந்து விட்டது...' என, மிக வருத்தப்பட்டார். இந்த வார்த்தைகள், சுதந்திர இந்தியாவில் இருந்த அத்தனை மக்களையும் சிந்திக்க வைத்தன. - நடுத்தெரு நாராயணன்