உள்ளூர் செய்திகள்

புதுமுகம் அறிமுகம்!

புதுசு என்றால், சொகுசு என்பது மனைவிக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், மருமகள்களுக்கு இல்லை. திருமணத்திற்குப் பிறகு, புகுந்த வீட்டிற்கு வாழ செல்லும் புத்தம் புது மருமகள்கள் நிலைமை கொஞ்சம் சங்கடமானது தான்.நித்யாவைப் பொறுத்தவரை, இந்த சிறிதளவு சங்கடம், மலையளவு தொல்லையாகிப் போனது. இவளின் புது மாமியார், சங்கரி, படுத்தும் பாடு தாங்க முடியவில்லை. முதன் முதலில் புகுந்த வீட்டில் காலடி வைத்த, நித்யாவை, ஆரத்தி எடுத்து அழைத்தாள், சங்கரி. நித்யா அறைக்குள் நுழைந்தது தான் தாமதம். துவங்கி விட்டன, சங்கரி தந்த சங்கடங்கள். கல்யாணம், மற்ற இதர கலாட்டாக்களால் களைப்புற்றிருந்த, நித்யா, ஓய்வெடுக்கலாம் என, அப்போது தான் கட்டிலில் சரிந்தாள். உடனேயே அறைக்கதவு படபடவென தட்டப்பட்டது. ''கொஞ்சம் சமையலறைக்கு வர்றியாம்மா நித்யா... எல்லாருக்கும் காபி போடணும்,'' என்றார், சங்கரி.'காபி போடுவது என்ன, கிரிக்கெட் மாதிரி, 'டீம்' விளையாட்டா, எல்லாரும் சேர்ந்து போட? அவரே போடலாமே. அறைக்குள் அயர்ந்திருக்கும் என்னை தொல்லைப் படுத்திக் கொண்டு...' என, நித்யாவுக்குள் எரிச்சல். இருப்பினும், புதுசாய் வந்திருக்கும் மருமகளாயிற்றே... எடுத்தவுடன் இடக்கு பண்ண முடியுமா? ''இதோ வர்றேன் அத்தை,'' என்று சொல்லி, சங்கரியைப் பின் தொடர்ந்தாள்.சமையலறையில், சங்கரியின் சரமாரியான கட்டளைகள்.''கொஞ்சம் அந்த காபித்துாளை எடு.''''எது அத்தை, இதுவா?''''அதில்லை நித்யா, பக்கத்து பாட்டில்.''''இதுவா?''''அந்தப் பக்கத்தில் இல்லை, இந்தப் பக்கத்தில்.''''இதுவா?''''இல்லைம்மா, மேல் தட்டில் இருக்கும் பார்.''''இதுவா?''''அதுக்கும் மேலே.''நித்யாவுக்குள் எரிச்சல் மண்டியது. 'இன்று தான் வந்திருக்கேன். எனக்கு எப்படி தெரியும், எங்கே எது என்று... குறைந்தபட்சம், எனக்கு இந்த வீட்டு சமையலறையும், சாமான்களும் பழகும் வரை, அவராகவே எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?'மனதில் தோன்றியதை வெளிப்படுத்தாமல், காபித்துாள், சர்க்கரை, பில்ட்டர், டம்ளர்கள் என, எல்லாவற்றையும் தேடித் தேடி, எடுத்துக் கொடுத்தாள், நித்யா.ஒரு வழியாக காபி போட்டு, நித்யா கையிலும் ஒரு கோப்பையைக் கொடுத்து, ''காபி எப்படி?'' என்றாள், சங்கரி.''நல்லாருக்கு...'' என்றாள், நித்யா.உண்மையிலேயே காபி நன்றாகவே இருந்தது. மாமியார் தான் நன்றாக இல்லை.''நாம் போட்ட இந்த, 'டேஸ்ட்டி' காபியை, நீயே கொண்டு போய், சத்யாவுக்கும், அவன் அப்பாவுக்கும் கொடுத்துடும்மா,'' என்றாள்.சங்கரி சொன்ன வேலை ஒன்றும் பெரிது இல்லை. ஆனால், நித்யா அந்த வீட்டிற்கு மட்டும் புதியவள் இல்லை; அந்த வீட்டு மனிதர்களுக்கும் தான்.அம்மா- - அப்பா பார்த்து, செய்து வைத்த திருமணம். அதனால், கணவன் சத்யாவும், நித்யாவும் இன்னும் பழகவில்லை. சத்யாவின் அப்பாவான மாமனாரைப் பற்றி கேட்கவே வேண்டாம்.நித்யாவின் சங்கோஜம், சங்கடத்தை பற்றி சங்கரி கவலைப்படாமல், காபி ட்ரேயை நித்யாவின் கைகளில் திணித்தாள்.''ரொம்ப தாங்க்ஸும்மா,'' என்று காபியை வாங்கிக் கொண்டார், மாமனார்.அறைக்குள் இருந்த சத்யாவோ, காபி கோப்பையை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு, அவள் கைகளைப் பற்றினான். ''பிடிச்சிருக்கா?'' என்றான், பொத்தாம் பொதுவாக.''எது?''''என்னை பிடிச்சிருக்கா?'' என்று கிசுகிசுத்தான்.அப்போது அறை வாசலில் சத்தம். ''கொஞ்சம் வர்றியா, நித்யா, சமையல் செய்யலாம்?'' என அழைத்தாள், சங்கரி.நித்யாவின் கைகளை உதறி, காபியைத் தேடின, சத்யாவின் கரங்கள்.கத்தியும், கத்தரிக்காயுமாக, சங்கரியோடு சேர்ந்து சமைக்க சென்றாள், நித்யா. இடைவேளை இன்றி சரம்சரமாக தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார், சங்கரி. முழுக்க முழுக்க மகன் பிரதாபம் தான். சத்யாவுக்கு இது பிடிக்கும்; அது பிடிக்காது. சத்யா மிக அன்பானவன்; மிக பண்பானவன். இப்படி அப்படி என்று.சமையல் கூட முடிந்து விட்டது. சங்கரியின் சத்யா புராணம் தான் முடிந்த பாடில்லை. அயர்ச்சி தந்தாலும், சங்கரியின், சத்யா காலட்சேபம், அவனைப் பற்றி தெரிந்து கொள்ள நித்யாவுக்கு உதவியாக இருந்தது.புது கணவனைப் பற்றி, நித்யா, நன்றாகப் புரிந்து கொள்வதற்கு, இன்னும் ஒரு எதிர்பாராத நிகழ்வு, அடுத்த நாளே நடந்தேறியது.நித்யாவைத் தேடி, அவள் தம்பி வினோத் வந்தான்.புகுந்த வீட்டிற்கு வந்த அடுத்த நாளே தம்பி, தன்னைத் தேடி வந்தது நித்யாவுக்கு ஆச்சரியம். ஆனால், அவனின் அழுத கண்களும், கவலையான தோற்றமும் அவள் எதிர்பாராதது.நித்யாவைப் பார்த்ததும், ''அக்கா...'' என்று அழுதான், வினோத்.''என்னடா ஆச்சு?'' பதறினாள், நித்யா. ''அக்கா...'' எதுவும் சொல்லாமல், மேலும் அழுதான். ''என்னடா நடந்துச்சு, சொல்லிட்டு அழுடா.''அப்போது அங்கே வந்த சத்யா, பரஸ்பரம் அழுது கொண்டிருந்த பாச மலர்களைப் பார்த்தான்.''அட, வினோத்... எப்ப வந்த?''சத்யாவைப் பார்த்ததும், கண்களை துடைத்துக் கொண்ட வினோத், ''இப்பதான் மாமா...'' என்றான். ''என்ன விசேஷம்?''''காலேஜில் ஒரு பிரச்னை.''''என்ன பிரச்னை?'' என்ற சத்யா, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு கோக் கேன்களை எடுத்து, ஒன்றை வினோத் கையில் கொடுத்தான். மற்றதை தான் வைத்து கொண்டு, வினோத் பக்கத்தில் அமர்ந்தான்.மறுபடியும், ''மாமா...'' என்று அழுதான், வினோத்.''முதல்ல விஷயம் என்னன்னு சொல்லித் தொலைடா,'' என, கடுப்பானாள், நித்யா. ''நான், இனிமே காலேஜுக்கு போக மாட்டேன்.'''ஏன்?' என, சத்யாவும், நித்யாவும் கோரசாக கேட்டனர். ''கேர்ள்ஸ் முன், பாட சொல்றாங்க. ஆட சொல்லி, 'ராகிங்' பண்றாங்க, அக்கா. அதிலும், அந்த சீனியர் ஸ்ரீராம், என்னை வறுத்து எடுக்கிறான். வகுப்புக்குள் வந்து கலாட்டா பண்றான். பெஞ்ச் மேல ஏறி நில்லு. தோப்பு கரணம் போடு, 'சல்யூட்' அடின்னு ரகளை பண்றான். ஒரே அவமானமா இருக்கு,'' என்று புலம்பினான், வினோத்.'அட, இது தானா விஷயம்...' என, சத்யாவும், நித்யாவும் புரிந்து கொண்டு, புன்னகையை பரிமாறினர்.''காலேஜில், இதெல்லாம் சகஜம்டா வினோத்,'' என்றாள், நித்யா.''போக்கா, படறவங்களுக்கு தானே தெரியும்?''நித்யாவுக்கு கோபம் லேசாக எட்டிப் பார்க்க, சத்யாவுக்கோ சிரிப்பு வந்தது. வினோத்தின் தோள் மேல் கை போட்டு அணைத்துக் கொண்டான், சத்யா. ''பார் வினோத், 'ராகிங்'என்பது, அந்தக் காலத்திலிருந்தே இருப்பதுதான். இப்ப அளவுக்கு மீறாத வரை பிரச்னை இல்லை. ஆட, பாட சொல்றதெல்லாம் சும்மா 'ஜாலி'க்காக. இதையெல்லாம் லேசா எடுத்துக்கிட்டு, கடந்து போயிடணும். ''அப்புறம், 'ராகிங்' பண்ற சீனியர்ஸ் எல்லாம் வில்லன் கிடையாது. ஜூனியர்ஸ் உங்ககிட்ட ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக்க, 'ராகிங்' ஒரு வழிமுறை அவ்வளவு தான். இதையெல்லாம் சாதாரணமா எடுத்துக்கிட்டு, கல்லுாரி வாழ்க்கையை, 'என்ஜாய்' பண்ணணும்.''''ஆனா, மாமா...'' தயங்கினான், வினோத். ''அப்படியும் ஏதாவது பெரிய சிக்கல்ன்னா, என்னிடம் சொல்லு. நானே காலேஜுக்கு வர்றேன். ஓ.கே.,?'' என்றான், சத்யா.''சரி...'' என்று கிளம்பி போய் விட்டான், வினோத்.சத்யாவும், அவன் அப்பாவும், 'டிவி'யில், கிரிக்கெட்டோடு ஐக்கியமாயினர். அறைக்குள் சென்றாள், நித்யா. சில நொடிகளில், அறைக்கதவை படபடவென்று தட்டியபடி நின்றிருந்தார், சங்கரி. இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து, நிமிஷம் குறையாமல், நித்யாவை அறைக்குள் விடாமல், சாத்திய கதவை உடைத்து விடுபவள் போல, தட்டோ தட்டென்று தட்டுவாள். ஏதாவது வேலைகளை அவள் தலையில் கட்டோ கட்டென்று கட்டி, தொல்லையை தந்து கொண்டிருந்தாள், சங்கரி. விதியை நொந்தபடி, ''என்ன?'' என்று, மாமியாரை ஏறிட்டாள், நித்யா.''இன்னிக்கு பவுர்ணமி, நம் தெரு ஈஸ்வரன் கோவில்ல பூஜை. விசேஷமா இருக்கும். நீயும், சத்யாவும் போயிட்டு வந்துடுங்க. சத்யாகிட்ட சொல்லிட்டேன். நீயும் ரெடியா இரு.''சங்கரி சொல்லி விட்டு அகல, நித்யாவுக்கு ஆச்சரியம்.சத்யாவும், நித்யாவும், மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு கிளம்பினர். மேலே தெரிந்த முழு நிலவை இருவரும் ரசித்தபடி, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் புத்தம் புது ஜோடிப் புறாக்களாக வலம் வந்தனர்.நித்யாவின் மொபைல் சிணுங்கியது.''அக்கா... நான் நல்லாருக்கேன், நீ நல்லா இருக்கியா? அப்புறம், நான் சொன்னேன்ல, சீனியர் ஸ்ரீராம் பற்றி, 'ராகிங்' பண்றாரு. 'டார்ச்சர்' கொடுக்கிறாருன்னு. ஆனா, அவர் தான் இப்ப எனக்கு சிறந்த நண்பர். புக்ஸ், நோட்ஸ் எல்லாம் கொடுத்து ரொம்ப உதவி பண்றார்.''எந்த பாடத்தை எப்படி படிக்கணும்ன்னு எல்லாம் சொல்லித் தர்றான்னா பாரேன். மாமாக்கு தான் நன்றி சொல்லணும். என் சார்பா அவர்கிட்ட சொல்லிடு. நண்பர்களோட, 'கெட் டு கெதர்!' உங்ககிட்ட அப்புறம் பேசறேன். வச்சிடறேன், அக்கா.''சத்யாவின் கைகளை கோர்த்தபடி வீடு திரும்பினாள், நித்யா.''பவுர்ணமின்னு பால் பாயசம் செஞ்சேன். அதைக் கொஞ்சம் எல்லாருக்கும் கொடும்மா,'' என்று ஏவிய சங்கரி மேல், நித்யாவுக்கு கோபம் வரவில்லை.புதிதாக வந்திருக்கும் நித்யாவுக்கு வீடும், மனிதர்களும் பழக வேண்டும் என்பதற்கான வழிமுறை தான், மாமியாரின் வேலை வாங்கும் படலம் என்பது, அவளுக்குப் புரிந்தது.ஹாலில், எல்லாரும் பாயசத்தை பருகிக் கொண்டிருக்கையில், ''ஒரு வேலை தேடிக்க, நித்யா. நீயும் படிச்சிருக்க, எதுக்கு வீட்டில் சும்மா இருக்கணும்?'' என்று, சங்கரி சொல்ல, நித்யாவுக்கு கண்கள் பனித்தன. மாமியாரின் வார்த்தைகளும், வாஞ்சையும், இனித்தன.- கல்பனா சன்யாசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !