உள்ளூர் செய்திகள்

திண்ணை!

எம்.ஜி.ஆரின், 15வது படம், ராஜகுமாரி. அதில், அவர் தான் கதாநாயகன். படத்தில், பயில்வான் ஒருவரோடு, எம்.ஜி.ஆர்., சண்டையிட்டு வெல்வது போன்ற ஒரு காட்சி. அதற்கு, கமால்தீன் என்ற பயில்வானை, முடிவு செய்திருந்தார், இயக்குனர் ஏ.எஸ்.எ.சாமி. அவரிடம் சென்று, சாண்டோ சின்னப்ப தேவரை சிபாரிசு செய்தார், எம்.ஜி.ஆர்., 'மாத சம்பளம் வாங்குற, எக்ஸ்ட்ரா நடிகர் அவர். வேறு பிரபலமானவரை போடலாமே...' என்றார், சாமி.'சின்னப்பாவின் திறமை உங்களுக்குத் தெரியாது. எனக்கு தெரியும், ரொம்ப நன்றாக சண்டை போடுவார். வளரும் நடிகருக்கு உதவியாகவும் இருக்கும். அவரையே போடலாம்...' என்றார், எம்.ஜி.ஆர்.,'நீங்களே, கதாநாயகனாக நடிப்பது இது தான் முதல் முறை. உங்களுக்கு எதிராக சண்டை போடுபவர், பிரபலமானவராக இருந்தால் தானே நன்றாக இருக்கும். அதனால், கமால்தீன் பயில்வானையே போடலாம்...' என்றார், சாமி.'என்னை மன்னிச்சிடுங்க. இந்த சண்டைக் காட்சிக்கு, சின்னப்பாவை போடுங்க. இல்லேன்னா, இந்த சண்டை காட்சியே வேண்டாம்...' என்றார், எம்.ஜி.ஆர்.,பிறகு, எம்.ஜி.ஆரின் விருப்பப்படி, சின்னப்ப தேவர் தான் நடித்தார்.ராஜகுமாரி படம் வெற்றி பெற்று, இருவரும் பிரபலமாயினர்.    கல்கி ராஜேந்திரன் எழுதிய, 'அது ஒரு பொற்காலம்' நுாலிலிருந்து: கல்கி அலுவலகத் தோட்டத்தில், மாலை நேரத்தில், ராஜாஜி, நடைபயிற்சி செய்வது வழக்கம். தன், 65 வயதிலேயே, 'வாக்கிங் ஸ்டிக்' பயன்படுத்த ஆரம்பித்து விட்டார், ராஜாஜி. இதுபற்றி கேட்டபோது, 'தடியை நன்றாக ஊன்றி நடப்பது எதற்கு என்றால், நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும் முடியும். இல்லையென்றால், கூன் விழுவதற்கு வாய்ப்புண்டு...' என்பார். மேலும், 'நீண்ட நாள் உயிர் வாழ்வது பெரிதில்லை. கூடிய வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், அரை வயிற்றுக்கு சாப்பிட வேண்டும்...' என்பார். ஒரு தேக்கரண்டி பாதாம் அல்வா சாப்பிட்டாலும், ஒரு கிண்ணம் நிறைய சாப்பிட்டாலும் ருசி ஒன்று தான். இப்படி சொல்வதை செய்து காட்ட ராஜாஜியால் முடிந்தது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவரான சதாசிவம் இல்லத்தில், கிருஷ்ணய்யர் என்ற சமையற்காரர் இருந்தார்.ஒருநாள் மாலை, ராஜாஜியிடம், 'இன்னிக்கு ஸ்பெஷல் அக்காரவடிசல் பண்ணியிருக்கேன், சாப்பிட்டு பாருங்கள்...' என்று கூறி, கிண்ணம் நிறைய அக்காரவடிசலை தந்தார்.கிண்ணத்திலிருந்து பாதிக்கு மேல், ஸ்பூனால் வேறொரு தட்டில் தள்ளிவிட்டு, மீதமுள்ள அக்காரவடிசலை நிதானமாக ருசித்துச் சாப்பிட்டார், ராஜாஜி. 'ரொம்ப நன்னா இருக்கு. ஆனா, நீ வெல்லம் வெச்சிருக்கும் பாத்திரத்தில் கட்டெறும்பு வந்திருக்கும். போய் கவனி...' என்றார், ராஜாஜி. கிருஷ்ணய்யருக்கு துாக்கிவாரிப் போட்டது. அன்று அக்காரவடிசல் செய்ய வெல்லம் எடுத்தபோது, அதில், கட்டெறும்பு ஊர்வது கண்டு, வெயிலில் சற்று நேரம் வைத்தார். பயன்படுத்தியது போக மீதமிருந்ததை, இறுக்கமான மூடி போட்ட பாத்திரத்துக்கு மாற்றியிருந்தார். 'எப்படி கண்டுபிடித்தீர்கள்?' எனக் கேட்டார். 'வெல்லத்தில், கட்டெறும்பு ஊர்ந்திருந்தால் அந்த வெல்லத்தை பயன்படுத்தி, தயாரிக்கும் பண்டத்தில், லேசான புளிப்பு எட்டிப் பார்க்கும்...' என்றார், ராஜாஜி. இதைக் கேட்டு அசந்து போய் நின்றார், சமையற்காரார்.- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !