அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரிக்கு —நான், 40 வயது ஆண். எனக்கு ஒரு தம்பி, வயது: 35. நான், சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறேன். திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். என் மனைவி, உள்ளூர் ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். பெற்றோர் மிகவும் வயதானவர்கள். என் பராமரிப்பில் உள்ளனர்.பக்கத்து டவுனில், 'டிஜிட்டல்' போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளான், தம்பி. அங்கேயே வீடு எடுத்து தங்கியுள்ளான். தனியாக சமைத்தும், பாதி நாட்கள் ஹோட்டலிலும் சாப்பிட்டு வருகிறான். விசேஷ நாட்களில் மட்டும் ஊருக்கு வருவான்.அவனுக்கு, எத்தனையோ இடத்தில் பெண் பார்த்தும், எதுவும் சரியாக அமையவில்லை. போட்டோ ஸ்டுடியோவில் என்ன வருமானம் வந்து விடப்போகிறது என்று காரணம் கூறி, வந்த வழியே திரும்புகின்றனர், பெண் வீட்டினர்.கூடுதல் வருமானத்துக்கு, பக்கத்திலேயே ஏதாவது தொழில் செய்ய அறிவுறுத்தியும், சரியான பணியாட்கள் கிடைக்காமல், எதிலும் முழுமையாக ஈடுபட முடியாது என்கிறான். படித்து, வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் நலம் என்று தேடினால், அதுவும் கிடைக்கவில்லை.தம்பியின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், திருமணம் விரைவில் நடக்கவும் என்ன செய்ய வேண்டும். தங்கள் அறிவுரையும், ஆலோசனையும் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன், சகோதரி!— இப்படிக்கு, உங்கள் சகோதரன்.அன்பு சகோதரனுக்கு —புகைப்படம், ஒளிப்படமாகி, 25 ஆண்டுகள் கடந்தோடி விட்டன. ஒளிப்படம் எடுக்க யாரும் ஸ்டுடியோவுக்கு செல்வதில்லை. மொபைல் போன்களில் கேமராக்கள் உள்ளன. மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் இப்போது ஒளிப்பட கலைஞர்கள் ஆகிவிட்டனர்.ஒவ்வொரு, 10 ஆண்டும், ஒரு தொழில்நுட்பம் பழைய சட்டையை உரித்துவிட்டு, புது சட்டை அணிந்து கொள்கிறது. பழைய தொழில் நுட்பத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால், தொங்குபவரை, பழைய காயலான்கடையில் தள்ளி மூடி விடும், காலம்.தம்பிக்கு இப்போதே வயது: 35. திருமண வயதை தாண்டிவிட்டான். தம்பி படிப்பு குறித்து, கடிதத்தில் குறிப்பிடவில்லை.நீயும், தம்பியும் ஒரு மாலைப்பொழுதில் தனியாக உட்காருங்கள். தம்பி வைத்திருக்கும் டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோவின், ஆறு மாத வரவு, செலவு கணக்கு பாருங்கள்.எப்படியும் மாதா மாதம் ஒருபெரிய தொகை நஷ்டக்கணக்கில் வரும்.தம்பி, வெளியில் எவ்வளவு கடன் வைத்திருக்கிறான் என்பதை நைச்சியமாக கேட்டுத் தெரிந்து கொள். புகைப்படக்கலைஞர் தொழில், 'அவுட்டேட்டட்' ஆகிவிட்டது என்பதை, தம்பிக்கு தெளிவுப் படுத்து.டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோவை, யாராவது ஒளிப்பட காதலருக்கு பெரிய தொகை வாங்கிக் கொண்டு, கைமாற்றி விடச்சொல். ஒரே ஒரு கேமராவை மட்டும், தம்பியை தக்க வைத்துக் கொண்டு, மீதி உபகரணங்களை வரும் விலைக்கு விற்று விடச் சொல்.தொழில்முறை ஒளிப்படம் வேண்டுவோர், 'ப்ரீ வெட்டிங் ஷூட்டிங்' தேவைப்படுவோர், வரவேற்பு மற்றும் திருமண வைபவங்களின் ஒளி படம் எடுக்க விரும்புவோர், 'பாஸ்போர்ட்' அளவு புகைப்படம் தேவைப்படுவோர், தம்பியின் மொபைல் போனில் தொடர்பு கொள்ளட்டும்.ஒளிப்படம் எடுப்பதை பொழுது போக்காக அல்லது பகுதி நேர தொழிலாக, தம்பி பாவிக்கட்டும்.அவனுக்கு நல்லவேலை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை இருந்தால், விவசாயத்தில் உன்னுடன் ஜோடி சேரட்டும். வயலில், குறைந்தபட்ச உத்திரவாதம் உள்ள பணப்பயிர்கள் விளைவியுங்கள்.இரண்டு கறவை மாடுகளை வாங்கி, பால் கறந்து விற்கலாம். உங்கள் வயலின் ஒரு மூலையில் சிறிய அளவில் கோழிப் பண்ணை வைக்கலாம். கோழி இறைச்சியும், முட்டையும் விற்று, காசு பார்க்கலாம். கோழிப்பண்ணை வைப்பதில், கறவை மாடு வளர்ப்பதில் ஒரு நல்ல கால்நடை மருத்துவரின் தொடர் ஆலோசனை தேவை.எதை செய்தாலும் அகலக்கால் வைக்காமல், உரிய முறையில் திட்டமிட்டு செயலாற்றுங்கள். தம்பி, உன்னுடன் சண்டையிடாமல் விவசாயப் பணிகளை விரும்பி செய்வானா என்பதையும் அவதானி.உன் அறிவுரை எதையும், தம்பி ஏற்க மறுத்தால், அவனை கோவில் காளையாய் தண்ணீர் தெளித்து விட்டு விடு. எட்டு கோடி, மக்கள் தொகையில், ஒரு ஆண் திருமணமாகாமல் பிரம்மசாரியாய் அலைந்தால், தமிழ்நாட்டுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.