காஷ்மீர் இப்போது எப்படி இருக்கிறது?
'பியூட்டி புல், ஒண்டர் புல் காஷ்மீர்...' என்றெல்லாம், புகழப்பட்ட காஷ்மீரை, சமீபத்தில், நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது, காணும் வாய்ப்பு கிடைத்தது. காஷ்மீரின் அழகை ரசிக்க, அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், 370வது, சட்ட நீக்கத்திற்கு பின், அங்கு நிலவரம் எப்படி இருக்கும் என்ற எண்ணமே இப்பயணத்தில் அதிகம் இருந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் அங்கு சீசன் என்றாலும், சுற்றுலா பயணியர் ஆண்டு முழுவதும் வந்தபடி தான் இருக்கின்றனர். யூனியன் பிரதேசம் என்பதாலோ என்னவோ, விலைவாசி ரொம்ப மிதம். எங்கு நோக்கினும், இஸ்லாமியர்கள் நடத்தும் அங்காடிகள் நிறைந்துள்ளன. சைவ உணவு விடுதிகளையும் அதிகம் காண முடிகிறது. நாம் பயணிக்கும் சாலைகள் எல்லாம் சுத்தம். அதிலும், காஷ்மீர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலை பிரமாதம். கண்ட இடத்தில் குப்பை போடக் கூடாது என்பதை, தங்கள் கடமையாக கருதுகின்றனர், மக்கள். அதே போல், தெரு ஓரங்களில் சிறுநீர் கழிப்பது போன்ற அநாகரிகங்களும் இல்லை. குல்மார்க், பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு, மினி சுவிட்சர்லாந்து, சந்தன் வாரி சோன மார்க், ஜீரோ பாயின்ட், இந்தியா கேட், ஷாலிமார் கார்டன், சங்கராச்சாரியார் கோவில், தால் ஏரி என, ஸ்ரீநகரை மையமாக வைத்து, பல சுற்றுலா தலங்கள் உள்ளன.எங்கும் எதிலும் பனி சிதறல்கள்! நாங்கள் சென்ற போது, குளிர் அதிகமாயிருந்தது. மலை பகுதி முழுக்க பனி மூடி, வெண்மையாக காட்சியளித்தது. எந்த மலைப் பகுதிக்கு போக வேண்டும் என்றாலும், ஒரு குறிப்பிட்ட உயரம் வரை தான் சாதாரண வாகனங்கள். அதற்கு மேல், டயர்களில் இரும்புச் சங்கிலி கட்டப்பட்ட, 'ஜீப்'களில் தான் பயணம் செய்ய வேண்டும். பனியில் சறுக்காமல் இருக்க, இப்படி சக்கரங்களில் சங்கிலி பின்னப்பட்டுள்ளன. காஷ்மீரில் இறங்கியதுமே, தொப்பி, கையுறை, காலுறை மற்றும் மப்ளர் விற்பவர்கள் மொய்க்கின்றனர். பனியில் நடக்கும் போது வழுக்கும் என, 'கம் பூட், ரெயின் கோட்' ஆகியவற்றை வாடகைக்கு கொடுக்கின்றனர். இத்தனை முன்னேற்பாடுகளுடன் சென்றாலும், பனியில் வழுக்கி விழுவது சகஜமாக உள்ளது. அப்படி வழுக்கி விழுந்தவர்களில், நானும் ஒருவன். பனி சறுக்கு, குதிரையேற்றம் மற்றும் ரோப் கார் என, சுழன்றாலும் கூட, சிவன் கோவில் பனியில் புதைந்திருந்ததால் தரிசனம் செய்ய இயலவில்லை. வழிகாட்டிகள், ஓட்டுனர்கள், விற்பனையாளர்கள் என, எல்லாரிடமும், பணிவான பேச்சு மற்றும் அணுகுமுறைகள் பாராட்டும்படி உள்ளன. நம்மூரின் அடாவடி, தெனாவட்டு அங்கு காணப்படவில்லை. ஸ்ரீநகருக்குள் நுழைந்த உடனேயே நமக்கு விழும் முதல் பேரிடி, மொபைல் போன் செயலிழந்து போவது தான். 'ப்ரிபெய்டு சிம்' அங்கு வேலை செய்யாதாம். தற்காலிகமாய் உள்ளூர், 'சிம்' வாங்கி பயன்படுத்தலாம். பாதுகாப்பு கருதி, அதற்கும் ஆதார், புகைப்படம், கைரேகை இத்தியாதிகள் உண்டு. அங்கு விலைவாசி மட்டுமல்ல, சம்பளமும் குறைவு என்பதால், வண்டி, வழிகாட்டி, உணவு விடுதி, தங்கும் விடுதி என, எங்கும், 'டிப்சை' உரிமையாக கேட்டு வாங்குகின்றனர். தால் ஏரி ரம்யமாக காட்சியளிக்கிறது. ஏரியில் வரிசையாய் படகு வீடுகள் அணி வகுத்துள்ளன. ஓரிரு நாட்கள் தங்கி, தால் ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்து ரசிக்கலாம். படகு வீட்டினுள், அத்தனை வசதிகளும் உண்டு. விறகு அடுப்பு, 'ஹீட்டர்' மற்றும் படுக்கைக்கு கீழ் மின்சார வயர் ஹீட்டரும் பொருத்தப்பட்டு, கதகதப்பாக உள்ளன. தண்ணீரில் மிதக்கும் படகு கடைகள், நம் இருப்பிடத்துக்கே வந்து செல்லும். குட்டிப் படகில் கவா, காபி, சாய், பழ வகைகள், குங்குமப்பூ அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. மொழி தெரிந்தால், பேரம் பேசி வாங்கலாம். ஆப்பிள் மட்டுமல்லாமல், ஸ்ட்ராபெரி, புளூபெர்ரி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், குங்குமப்பூ என, அனைத்து பணப்பயிர்களும் அங்கு விளைவிக்கப்படுகின்றன. குளிர் சீசனில், மரங்கள் எல்லாம், இலைகள் கொட்டி, மொட்டையாக நிற்கின்றன. ஜூன் மாதத்திற்கு பிறகு தான், அவைகள் துளிர்த்து, பூக்குமாம். ராணுவ வீரர்களை பலி கொடுத்த, புல்வாமா என்ற இடத்தில், சிறு தடுப்புத் தவிர, வேறு எந்த கட்டுமானமும் செய்யப்படவில்லை. அப்பகுதியில், ஆங்காங்கே செக்யூரிட்டிகள் மற்றும் அவ்வப்போது ஊர்ந்து செல்லும் ராணுவ வண்டிகளை மட்டுமே காணலாம். காஷ்மீர் சகஜ நிலைக்கு திரும்பி விட்டதா? சிறப்பு சட்டப்பிரிவு, 370ஐ நீக்கிய பின், வன்முறை மற்றும் தாக்குதல்கள் குறைந்திருப்பது நிஜம்தான். அங்குள்ள மக்களின் மனநிலை, அவர்கள் திருப்தியாக, நிம்மதியாக இருக்கின்றனரா என்று பலரிடம் விசாரித்தேன். ஹிந்தியும், காஷ்மீரி மொழியும் புரியவில்லை என்றாலும் கூட, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அங்குள்ள முக்கிய பிரச்னை வேலையின்மை. போதுமான தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் இல்லை என்பதை, குறைபாடாக கருதுகின்றனர். 370வது சட்டப்பிரிவு நீக்கிய பின், பாதுகாப்பு முன்னேறி இருக்கிறது. உல்லாச பயணியரின் வருகை முன்பிருந்ததைவிட பெருகியுள்ளது. இருப்பினும், இந்தியாவுடன் ஐக்கியம் என்பதை இவர்கள் முழுதாக ஏற்க முன் வந்தாலும், பாகிஸ்தானின் உக்கிர மனநிலையை, இங்குள்ள மக்களிடையே புகுத்தி சிலர், அவர்களை மூளைச் சலவை செய்திருப்பது புரிந்தது. முன்பிருந்த கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டுள்ளன. யாரும் எங்கும் செல்லலாம், பிழைக்கலாம், பிற மாநிலத்தவரும் கூட, இங்கு இடங்கள் வாங்கலாம், தொழில் துவங்கலாம். அதனால், பணப்புழக்கம் அதிகமாகும். தொழிற்சாலைகள் பெருகி, வேலைவாய்ப்பு அதிகரித்தால், இயற்கை வளம் அழிக்கப்படுமே என்றும் அஞ்சுகின்றனர்; இதை கூறியே அஞ்ச வைத்திருக்கின்றனர், பிற்போக்குவாதிகள். பிற மாநிலத்தவர்கள், தகுதி அடிப்படையில், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். உள்ளூர் மாணவர்கள் அவர்களுடன் போட்டிப் போட முடிவதில்லை. இங்குள்ள கல்வி தரம் சுமாரானது. அதனால், இவர்களின் வாய்ப்பு பறி போவதாக உணர்கின்றனர். இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை, மக்கள் மனதில் பதிய வைத்துள்ளன, சில அமைப்புகள்.வாழ்வது இந்தியாவில் தான் என்றாலும், மத அடிப்படையில், பாகிஸ்தான் மேல் உள்ள பரிவு இவர்களிடம் உள்ளதையும் அறிய முடிகிறது. மாற்றங்களின் பலன்கள் உடனே பொங்கி வந்துவிடாது. அவைகள் மக்களிடம் போய் சேர, சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உணர வைக்க யாரும் முன்வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும், சில ஆண்டுகளில் நிலைமை மாறும் என்று நம்புவோம்!- மோகன்தாஸ்