உள்ளூர் செய்திகள்

ஒளிக்கே ஒளி தரும் விழா!

ஏப்., 23 - சித்ரா பவுர்ணமி நிலா... பவுர்ணமி அன்று உலகமெங்கும் ஒளிபரப்பும் கிரகம். சந்திரன் என்று புராணங்களில் இதன் பெயர் குறிப்பிடப்படுகிறது.இதை மனோகாரகன் என்கிறது, ஜோதிடம். அதாவது, மனபலத்தைக் கொடுப்பவர். ஜாதகத்தில், சந்திரன் சரியான இடத்தில் அமையாவிட்டால், அவர்கள் சஞ்சல மனம், பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு.நதிக்கரைகள், கடற்கரைகளில் நின்று, பூரண சந்திரனை வணங்குவது மனதுக்கு உற்சாகத்தை தரும். அதிலும், முழுமையான ஒளியைச் சிந்தும், சித்ரா பவுர்ணமியன்று வணங்குவது, இரட்டிப்பு பலன் கொடுக்கும்.சரி... நிலா ஒளியில் நின்று விட்டால் மட்டும், மனபலம் கிடைத்து விடுமா! அதற்கு வழிபாட்டு முறைகள் ஏதேனும் இருக்க வேண்டுமே என்ற கேள்வி எழலாம். சித்ரா பவுர்ணமியின் நோக்கமே, தீமை என்னும் இருளை விரட்டி, நன்மை என்னும் வெளிச்சத்தைப் பெறுவது தான்.இதனால், கோவில்களில் உள்ள சந்திரன் முன், அகல் விளக்கேற்றி வைத்து, 'என் மனதிலுள்ள தீய எண்ணங்களை மாற்றி விடுங்கள். நீங்கள் எப்படி அமாவாசை இருளிலிருந்து படிப்படியாக பவுர்ணமி என்னும் முழு வெளிச்சத்தைப் பெறுகிறீர்களோ, அதுபோல், என் மனதையும் களங்கமற்றதாக மாற்றுங்கள்...' என வேண்டிக் கொள்ள வேண்டும்.இந்த வேண்டுதலில், இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. இந்த விழா, உயிரைப் பறிக்கும், எமதர்மராஜனின் காரியதரிசியான, சித்ரகுப்தனின் வழிபாட்டு நாளும் கூட.மனிதர்களின் பாவம் நிறைந்த வாழ்க்கையை, இருள் பகுதியாகக் கணக்கிடுபவர், இவர். அந்த பாவக் கணக்குக்கு ஏற்ப, இறுதிக் கால வாழ்வை அளிப்பவர். வாழ்வின் இறுதியில், நோய் நொடியில் சிக்கி, எழக்கூட முடியாமல், படுக்கையிலேயே எல்லாம் கழிப்பவர்கள், 'என்ன பாவம் செய்தேனோ...' என புலம்புவர் இல்லையா! இவர்களைப் போன்றவர்கள் சித்ரகுப்தனைத் தான் சரணடைய வேண்டும்.'நான் செய்தது தவறு தான். பல பாவங்கள் செய்துள்ளேன். அதற்குரிய பலனை அடைந்து விட்டேன். என் இருள் நிறைந்த வாழ்வை மாற்றி, ஒளியேற்றுங்கள்...' என, வேண்டினால், சிரமங்களைக் குறைப்பார், சித்ரகுப்தன்.சித்ரா பவுர்ணமி, அன்று தான் சித்ரகுப்தனுக்கும், அவரது துணைவி சித்ரலேகாவுக்குமான திருமணமான நாள். காஞ்சிபுரத்திலுள்ள இவரது கோவிலில், இந்நாளில் திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகனுக்குரிய வழிபாட்டு நாட்களில், சித்ரா பவுர்ணமியும் ஒன்று என்பது விசேஷத் தகவல். இந்நாளில், காவடி எடுத்து வழிபடுவர். முருகனும் நெற்றிக்கண் ஒளியிலிருந்து பிறந்தவர் என்பதால், சித்ரா பவுர்ணமி அவருக்கு விசேஷமாகிறது.இந்த இனிய திருநாள், அனைவர் வாழ்விலும் ஒளியைக் கொண்டு வர பிரார்த்திப்போம்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !