உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு—நான், 36 வயது பெண். கணவரின் வயது: 40. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பள்ளியில், 6ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பில் படித்து வருகின்றனர். எங்களது வீடு, டவுன் பகுதியில் அமைந்துள்ளது.வீட்டின் அருகிலேயே மளிகை கடை வைத்துள்ளார், கணவர். இருவருமே மாறி, மாறி கடையை பார்த்துக் கொள்வோம். நாங்கள் இருவருமே கலகலப்பாக பேசும் சுபாவம் கொண்டவர்கள். இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் எங்கள் கடைக்கு அதிகம் வருவர். சமீபகாலமாக, வாடிக்கையாளர்களிடம், நான் கலகலப்பாக பேசினால் கோபப்படுகிறார், கணவர்.'கடையை பார்த்துக் கொள்ள வராதே... வீட்டிலேயே இரு. இரவு கடை மூடும் நேரம் வந்து, போதுமான சரக்குகள் இருக்கிறதா என்று பார்த்து, எழுதி வைத்து, அன்றைய, 'கலெக்ஷனை' கணக்கு பார்க்கும் வேலையை மட்டும் பார்...' என்று கூறுகிறார். ஒரே ஆளாக அவர் கஷ்டப்படுவதை பார்த்தால், வருத்தமளிக்கிறது. கணவரது இந்த திடீர் மாற்றம் ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும், வாடிக்கையாளர்களிடம் ஒரு வரைமுறைக்குள் தான் பேசுவேன்.என் மீது தவறான அபிப்ராயம் வந்துவிடக் கூடாது என்பதில், எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பேன். பேச்சு, நடை - உடை, பாவனை எல்லாவற்றிலும் கூடுதல் கவனமாக இருந்தும், கணவரது மாற்றம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவருக்கு எப்படி புரிய வைப்பது என, நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.— இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு —நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:கணவர் சொல்வதை கேட்டு கடைக்கு போகாதே. இரவு மட்டும் அன்றைய இருப்பை சரி பார்த்து, கணக்கை முடித்து வை. மூன்று மாதங்கள் போகட்டும். தினம், 14 மணி நேர கடை பணி செய்ய முடியாமல் திணறுவார்.அவர் முன், இரு தெரிவுகள்...கடை பணியை இரண்டு, 'ஷிப்ட்'களாக பிரித்து, ஒரு, 'ஷிப்ட்'டுக்கு சம்பளத்துக்கு ஆள் அமர்த்துவது. அந்த ஆளுக்கு மாதம், 8,000 - 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்க வேண்டி வரும். சம்பளத்துக்கு அமர்த்தப்படும் ஆள், திருடும் பழக்கம் உள்ளவனாக இருந்தாலும் இருப்பான்.இரண்டாவது தெரிவு,- மீண்டும் கணவர், உன்னை கடைப் பணிக்கு அழைத்தால், தாவிக்குதித்து ஓடாதே; கொஞ்சம் பிகு பண்ணு.அழகான பெண், எந்த பணியில் இருந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். அது இருதரப்புக்கும் சேதாரம் இல்லாமல் ஆரோக்கியமான அளவில் இருக்கலாம் தப்பில்லை.கணவர், கடையில் ஒரு மணிநேரம் இருந்தால், 2,000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்றால், நீ கடை வியாபாரத்தை கவனித்தால், 4,000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும். தெளிவான ஆண், நிர்வாகம் கையாண்டால், ஆண்களால் வரும் எந்த சிக்கலையும் விடுவிக்கலாம். ரிங் மாஸ்டர், பாம்பாட்டி, குரங்காட்டிகளாக பெண்கள் அவதாரம் எடுக்க வேண்டும்.வாரத்துக்கு ஒருமுறை உன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவருடன் இனிமையாக பேசு. 15 நாட்களுக்கு ஒருமுறை கோவிலுக்கு போங்கள். இரு மாதங்களுக்கு ஒருமுறை, சுற்றுலா போய் வாருங்கள்.நீயும், கணவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கணவருக்கு ஹார்மோன் சுரப்பு பிரச்னை இருந்தால், மாத்திரைகள் மூலம் சரிபடுத்தலாம்.நீயும், கணவரும், பரஸ்பரம் அவரவர் இருப்பை அங்கீகரித்து கண்ணியப்படுத்துங்கள். நம்பிக்கை தீபத்தை அணையாமல் நான்கு கைகள் வைத்து, பொத்தி பாதுகாத்திருங்கள்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !