உள்ளூர் செய்திகள்

ஸ்ட்ரா!

பழரச பானங்களை குடிக்க, 'ஸ்ட்ரா' என அழைக்கப்படும், உறிஞ்சு குழல் பயன்படுத்துகிறோம் அல்லவா? இந்த, 'ஸ்ட்ரா'வை கண்டுபிடித்தது யார் தெரியுமா? கி.பி.1888ல், மார்வின் ஸ்டோன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது, 'ஸ்ட்ரா!' முதலில், இவர் கடினமான காகிதத்தால் ஆன, 'ஸ்ட்ரா'வை உருவாக்கினார். அதற்கான காப்புரிமையை பதிவு செய்தார், ஸ்டோன். ஏற்கனவே சிகரெட் பிடிக்கப் பயன்படுத்தும் காகிதக் குழலை தயாரித்தவர் தான், இவர். அப்போது தான் அவருக்கு, பானங்களை உறிஞ்சிக் குடிக்க உதவும், 'ஸ்ட்ரா' கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 'ஸ்ட்ரா'வை கண்டுபிடிப்பதற்கு முன், பானங்களை உறிஞ்சிக் குடிக்க ஏதுவாக, 'பெர்னியல்' என்ற புல்லைப் பயன்படுத்தினர். ஒவ்வொரு புல்லும் ஒரு இயற்கையான உறிஞ்சுக்குழலாக இருந்தது. முதன்முதலில், 'ஸ்ட்ரா'வை பென்சிலைப் போன்று வடிவமைத்து தயாரித்தார். நீரில் மூழ்கும்போது இந்த காகித ஸ்ட்ரா சுருங்கிப் போகாமல் இருக்க, 'பாராபின்' என்ற திரவத்தை அதன் மேல் பூசினார். இவர் கண்டுபிடித்த இந்த, 'ஸ்ட்ரா'வுக்கான காப்புரிமை, ஜன., 3, 1888ல், பதிவானது. அதிலிருந்து, பத்தே ஆண்டுகளில், ஸ்டோனின் தொழிற்சாலை அதிக அளவில், 'ஸ்ட்ரா'க்களை உற்பத்தி செய்தது. முதலில், 'ஸ்ட்ரா'க்கள், கையால் தான் தயாரிக்கப்பட்டன. 1906ல், 'ஸ்ட்ரா'வை தயாரிக்க எந்திரத்தைக் கண்டுபிடித்தது, ஸ்டோனின், 'ஸ்டோன் ஸ்ட்ரா கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம். அதன் பிறகு தான், காகிதத்துக்குப் பதிலாக, செயற்கை இழைகளால் ஆன, 'ஸ்ட்ரா'க்கள் உற்பத்தி செய்யப்பட்டன.இன்று நாம் பயன்படுத்தும் பல நவீன, 'ஸ்ட்ரா'க்களுக்கு அடிப்படையும், ஆரம்பமும் வகுத்துக் கொடுத்தவர், ஸ்டோன் தான். - ரா.அருண்குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !